Published:Updated:

`பணம் கொடு; இல்லைன்னா புக் சேட்டு கடைக்குப் போகும்!'-பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்

சகாய மாதா
சகாய மாதா

மதுரை கப்பலூரிலுள்ள வாகன விற்பனை நிலையத்தில் ஈ காம்பெட் 1214 மாடல் வண்டியை முன்பணம் கட்டி வாங்கியுள்ளார். இதற்காக ஹெச்.டி.எப்.சி வங்கி மூலம் கடனும் பெற்றுள்ளார்.

ராமநாதபுரத்தில் வங்கிக் கடன் மூலம் வாங்கிய லாரியின் பதிவுப் புத்தகத்தைப் பெறுவதற்கு ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் துணையுடன் லஞ்சம் கேட்டு மிரட்டும் புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.

ஆர்.டி.ஓ அலுவலகம்
ஆர்.டி.ஓ அலுவலகம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பகுதியை அடுத்த வரவனி கிராமத்தைச் சேர்ந்தவர் சகாய மாதா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். சகாய மாதா ஓர் இருதய நோயாளி. இதனால் அழகர்சாமி கூலி வேலை செய்துகொண்டு குடும்பத்தைப் பராமரித்து வரும் நிலையில் பட்டதாரியான சகாய மாதா தன் பங்குக்கு ஏதேனும் சுயதொழில் செய்து கணவருக்கும் குடும்பத்துக்கும் உதவலாம் என்று எண்ணியுள்ளார்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஒன்றை வாங்கலாம் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு மதுரை கப்பலூரிலுள்ள வாகன விற்பனை நிலையத்தில் ஈ காம்பெட் 1214 மாடல் வண்டியை முன்பணம் கட்டி வாங்கியுள்ளார். இதற்காக ஹெச்.டி.எப்.சி வங்கி மூலம் கடனும் பெற்றுள்ளார்.

அந்த வாகனத்தைப் பதிவு செய்வதற்காக ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் பரமேஸ்வர மூர்த்தி என்பவரிடம் இதுதொடர்பாகக் கேட்டுள்ளார். அப்போது அவர், 'கவலைப்பட வேண்டாம். நான் அசோக் என்பவரை வரச் சொல்கிறேன். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' எனக் கூறி செல்போனை எடுத்து ஒருவரை அழைத்துள்ளார். கையில் கட்டுக்கட்டாகக் கோப்புகளுடன் டிப்டாப்பாக வந்த அந்த நபரைக் கைகாட்டி நடைமுறையை எடுத்துரைக்குமாறு கூறியுள்ளார் மூர்த்தி.

அந்த நபரை அலுவலக ஊழியர் என நம்பிய சகாய மாதா, அந்த நபரிடம், இதுதொடர்பாக என்ன செய்யலாம் எனக் கேட்டிருக்கிறார். அவரும் உங்களுடைய ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவனங்களைத் தருமாறு கூறிவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றுள்ளார்.

நான் உங்களிடம் பதிவுக்கான செலவுத் தொகை குறித்த விவரத்தை தவறாகச் சொல்லிவிட்டேன். 35,000 அல்ல, மொத்தம் 45,000 செலவாகியுள்ளது.
புரோக்கர் அசோக்

சற்று நேரத்தில் திரும்பி வந்த அவர், `ஆர்.டி.ஓ-வுக்கு 5,000, ஆன்லைன் பேமென்ட் 2,000' எனப் பட்டியலிட்டு `35,000 ரூபாய் செலவாகும்' எனக் கூறியிருக்கிறார். அதை நம்பிய சகாய மாதா 35,000 ரூபாய் மற்றும் கூடுதலாக இதர செலவுகள் 2,000 என அவர் கேட்ட 37,000 ரூபாயைக் கொடுத்துள்ளார்.

பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற சகாய மாதாவின் செல்போனுக்கு, `தங்களுடைய வாகன எண் பதிவு முடிவுற்றது. தங்களுடைய வண்டி எண் TN 65 AJ 8154' என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பதிவு வேலைகளை முடித்துக் கொடுத்த அசோக், சகாய மாதாவை தொடர்புகொண்டு, `நான் உங்களிடம் பதிவுக்கான செலவுத் தொகை குறித்த விவரத்தை தவறாகச் சொல்லிவிட்டேன். 35,000 அல்ல, மொத்தம் 45,000 செலவாகியுள்ளது. பத்தாயிரத்தை நான் கட்டிவிட்டேன். அதனால் கூடுதல் செலவான பத்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு வாகனத்துக்கான பதிவுச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார். மேலும், ஒரு துண்டுச் சீட்டில் கணக்குப் பட்டியல் ஒன்றை எழுதி சகாய மாதாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார் அசோக்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதற்கெல்லாம் எவ்வளவு லஞ்சம் தெரியுமா? அதிர வைக்கும் `ஸ்கேன்' ரிப்போர்ட்

இதனால் சந்தேகமடைந்த சகாய மாதா அசோக்கிடம், `முன்கூட்டியே நீங்கள் சொன்ன தொகையை நான் கொடுத்துவிட்டேன். மீண்டும் 10,000 கூடுதலாகக் கேட்டால், என் கணவருக்குப் பதில் சொல்ல வேண்டும். எனவே, எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு அதற்கான ரசீதைத் தாருங்கள், தருகிறேன்' என்று கூற பதிவுக் கட்டணம் என்ற பெயரில் 16,321 ரூபாய்க்கு மட்டும் ரசீது ஒன்றை அனுப்பியுள்ளார் அசோக்.

தன்னிடம் 37,000 ரூபாய் பணம் வாங்கிவிட்டு 16,321 ரூபாய்க்கு மட்டும் ரசீது அனுப்பியது தொடர்பாக அசோக்கிடம் கேட்டபோது, அதெல்லாம் ஜி‌எஸ்‌டி வரிக்குக் கட்டியாச்சு என்று கூறியதோடு மீதித் தொகையான 10,000 ரூபாயைக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் மேலும் சந்தேகமடைந்த சகாய மாதா, அசோக் குறித்து விசாரித்தபோது அவர் ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர் இல்லை, அவர் ஒரு புரோக்கர் என்று தெரியவந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட லாரி
பதிவு செய்யப்பட்ட லாரி

இதுதொடர்பாக ஆர்.டி.ஓ அலுவலகக் கண்காணிப்பாளர் மூர்த்தியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 'எப்படியானாலும் அவ்வளவு தொகைதான் செலவாகும். உங்களுடைய நல்லதுக்குத்தான் அவரிடம் அனுப்பினேன். சரி பரவாயில்லை கவலைப்படாதீங்க. நான் அசோக்கிடம் பேசுகிறேன். மீதிப்பணத்தைக் கொடுத்துவிட்டு புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

கண்காணிப்பாளரின் இந்தப் பதிலால் அதிர்ந்துபோனார் சகாய மாதா. தொடர்ந்து, சகாய மாதாவைத் தொடர்புகொண்ட அசோக், 'வரும் திங்கள்கிழமைக்குள் வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அதை சேட்டுக்கடையில் அடமானம் வைத்துவிடுவேன்' என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சகாய மாதா, புரோக்கர் அசோக் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு