Published:Updated:

`மதுபோதையில் போலீஸைத் தாக்கிவிட்டேன்!' - ராமநாதபுரம் எஸ்.ஐ தாக்குதலில் கைதானவர் கதறல்

உச்சிப்புளி போலீஸ் ஸ்டேசன்
உச்சிப்புளி போலீஸ் ஸ்டேசன்

அந்த நபர்கள் உதவி ஆய்வாளர்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதோடு உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

ராமநாதபுரம் அருகே நேற்று அதிகாலை போலீஸ் எஸ்.ஐ-களை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடிய வழக்கில் கணேசன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது வழுக்கி விழுந்த கணேசன், போலீஸாருடன் நண்பர்களாகப் பழகுங்கள் என வேண்டுகோள் விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸ் எஸ்.ஐ ஜெயபாண்டி
போலீஸ் எஸ்.ஐ ஜெயபாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிறுத்தப்பகுதியில் பேக்கரி ஒன்றில் நேற்று அதிகாலை இரண்டு பேர் சிகரெட் கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உச்சிபுளி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி மற்றும் நந்தகுமார் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்கச் சென்றனர்.

மதுபோதையிலிருந்த அந்த நபர்கள் உதவி ஆய்வாளர்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதோடு உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி மற்றும் நந்தகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை ரோந்து.. பேக்கரியில் பிரச்னை.. போலீஸ் எஸ்.ஐ-யை பதறவைத்த மர்ம நபர்கள்!

சிகிச்சை பெற்றுவரும் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சந்தித்து தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், குற்றவாளிகள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் எனவும் எஸ்.பி வருண்குமார் அறிவித்திருந்தார்.

போலீஸ் எஸ்.பி விசாரணை
போலீஸ் எஸ்.பி விசாரணை

உதவி ஆய்வாளர்களைத் தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான உச்சிப்புளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியைச் சேர்ந்த கணேசன் (25) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீஸாரிடமிருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்ட கணேசன் வழுக்கி விழுந்து கால் எலும்பு முறிந்த நிலையில் தோன்றும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ``பொதுமக்களை பாதுகாத்து வரும் போலீஸாரிடம் நண்பனாகப் பழகி மரியாதை கொடுங்கள். நான் மதுபோதையில் உதவி ஆய்வாளர்களைத் தாக்கிவிட்டேன். என்னைப்போல யாரும் இது மாதிரியான சமூகவிரோத செயலில் ஈடுபட வேண்டாம்'' எனக் கைதான கணேசன் வேண்டுகோள் விடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு