Published:Updated:

ராணிப்பேட்டை: அதிமுக நிர்வாகி வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்! - நடந்தது என்ன?

எஸ்.எம்.சுகுமார்

ராணிப்பேட்டையில், அ.தி.மு.க நிர்வாகி வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், 20 பவுன் நகைகள், ரூ.38 லட்சம் ரொக்கப் பணத்தை அள்ளிச்சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை: அதிமுக நிர்வாகி வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்! - நடந்தது என்ன?

ராணிப்பேட்டையில், அ.தி.மு.க நிர்வாகி வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், 20 பவுன் நகைகள், ரூ.38 லட்சம் ரொக்கப் பணத்தை அள்ளிச்சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
எஸ்.எம்.சுகுமார்

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க-வின் அம்மா பேரவைப் பொருளாளராக இருப்பவர் எஸ்.எம்.சுகுமார். சட்டமன்றத் தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய சுகுமார், தி.மு.க-வின் வெற்றிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியவர். `உள்ளடி’ அரசியலால் அவர் தோல்வியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பின்னர், கட்டுமானம், கல்குவாரி போன்ற தொழில்களில் கவனம் செலுத்திவருகிறார் அவர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் மாநகரத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்டுமானப் பணிகளை, அவரது `குமார் பில்டர்ஸ்’ நிறுவனம்தான் டெண்டர் எடுத்துச் செய்கிறது. வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியையும் அவரின் நிறுவனம்தான் மேற்கொள்கிறது.

உடைக்கப்பட்டிருந்த பீரோ
உடைக்கப்பட்டிருந்த பீரோ

இந்த நிலையில், ராணிப்பேட்டை அண்ணா அவென்யூ பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்குள் புகுந்த மர்மக்கும்பல், 38 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, சென்னையிலுள்ள மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சுகுமார் சென்றிருந்த நிலையில், இந்தத் துணிகரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வீட்டின் சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே குதித்த கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்கக் கதவை உடைக்க முயன்றிருக்கின்றனர். அது முடியாததால், பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த பணம், நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர். சுகுமாரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. உஷாரான கொள்ளையர்கள், கேமரா காட்சிகள் பதிவாகியிருந்த ஹார்டு டிஸ்க்கையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சுகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமார் அளித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு தலைமையிலான போலீஸார் வீட்டைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism