Published:Updated:

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச் சாவு; வேலூர் விசிக நிர்வாகிமீது புகார்! - என்ன நடந்தது?

சரவணன் சடலம் - நீல சந்திரகுமார்

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் காட்பாடியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச் சாவு; வேலூர் விசிக நிர்வாகிமீது புகார்! - என்ன நடந்தது?

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் காட்பாடியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சரவணன் சடலம் - நீல சந்திரகுமார்

புதுச்சேரி, லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில் வீதியைச் சேர்ந்த 51 வயதான சரவணன் ரியல் எஸ்டேட் ஏஜென்சி நடத்திவந்தார். தமிழ்நாடு முழுவதும் நிலங்களை வாங்கி, வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்யும் அவரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் புழங்கியிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியிலுள்ள 16 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வருவதாக மீடியேட்டர்கள் மூலம் தகவலறிந்து, அதை வாங்குவதற்காக வந்திருக்கிறார் சரவணன். மொத்தமாக வாங்காமல் ஒரு ஏக்கர், 50 சென்ட் எனக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வேலூர் விருதம்பட்டைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார், சரவணனுக்கு அறிமுகமாகியிருக்கிறார். நீல சந்திரகுமாரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

உயிரிழந்த சரவணன்
உயிரிழந்த சரவணன்

இதற்கிடையே, சரவணன் வாங்கிய நிலத்துக்குப் பின்னாலிருக்கும் இடத்தையும் வாங்கித் தருவதாக நீல சந்திரகுமார் கூறியிருக்கிறார். அதை நம்பி சரவணனும் நிலத்தை வாங்குவதற்காக 1.2 கோடி ரூபாயைத் தன் டிரைவரிடம் கொடுத்து கை மாற்றியதாகக் கூறப்படுகிறது. இங்குதான் அம்பலவாணன், ராஜேஷ் ஆகிய இருவர் உள்ளே வருகிறார்கள். இந்த இருவரும் சரவணன் வாங்க நினைத்த அதே இடத்தை வாங்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. சரவணனைவிடவும் கூடுதலான கமிஷன் தொகை தருவதாகக் கூறியதால் நீல சந்திரகுமார் தரப்பு இரு தரப்பிடமும் கமிஷன் பேரம் நடத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஜூன் 18-ம் தேதி, பஞ்சாயத்து பேசுவதற்காக சரவணனை நேரில் வருமாறு நீல சந்திரகுமார் போனில் அழைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரியிலிருந்து தன் ஓட்டுநருடன் காரில் புறப்பட்ட சரவணன் காட்பாடி காந்தி நகருக்கு வந்தவுடன், அங்கிருக்கும் டால்பின் அடுக்குமாடிக் கட்டடத்திலிருக்கும் நீல சந்திரகுமாரின் அலுவலகம் இருக்கும் அறைக்கு தனியாகச் சென்றிருக்கிறார். அவரின் ஓட்டுநர் கட்டடத்தின் முன் காரை நிறுத்திவிட்டு அதிலேயே இருந்திருக்கிறார். அங்கு நீல சந்திரகுமார் முன்னிலையில் நிலப்பஞ்சாயத்து நடந்திருக்கிறது. நீல சந்திரகுமாரின் ஆட்கள் வக்கீல் சரவணன், சிவராஜ், சிவராமன் ஆகியோரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அனைவரும் மது அருந்திக்கொண்டே பேசியதாகவும் கூறப்படுகிறது. நீல சந்திரகுமார் எதிர்த்தரப்புக்கு சாதகமாகப் பேசியதுடன், நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என சரவணனிடம் கூறினாராம். அவர் மறுக்கவே, பேச்சுவார்த்தை வீரியமடைந்திருக்கிறது.

சடலமாகக் கிடந்த சரவணன்
சடலமாகக் கிடந்த சரவணன்

அதன் பிறகுதான் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் டால்பின் டவர் கட்டடத்தின் பின்பக்கம் சடலமாக இறந்துகிடந்தார். அவரின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்திருந்ததால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நான்கைந்து மணி நேரம் கழித்த பின்னரே அவரின் சடலத்தை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். தகவலறிந்து வந்த விருதம்பட்டு போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சரவணனின் உறவினர்கள் சிலர் விருதம்பட்டு காவல் நிலையத்துக்கு நேற்று வந்தனர். அவரின் தம்பி அன்பரசன், ``என் அண்ணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீல சந்திரகுமார் உட்பட நான்கு பேர் மீது சந்தேகம் இருக்கிறது’’ என புகார் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, அங்கு வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ வைத்தியநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``நானும் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனும் நண்பர்கள். அவரால்தான் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். நிலத்துக்கு பதிலாக பணத்தைத் திருப்பித் தருவதாக அழைத்துத்தான் பேசியிருக்கிறார்கள். அப்போது, மிரட்டி போலி டாக்குமென்ட்டில் கையெழுத்தையும் வாங்கியிருக்கிறார்கள். இது, திட்டமிட்ட படுகொலை. சரவணன் வெளியூர் சென்றால் மது அருந்த மாட்டார். மது போதையில் தவறி விழுந்ததாக பொய் சொல்கிறார்கள். போலீஸாரும் சரியான கோணத்தில் விசாரணை நடத்தவில்லை. நிறைய அரசியல் குறுக்கீடும், தலையீடும் இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அந்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அந்தக் கட்சியின் நீல சந்திரகுமார் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

நீல சந்திரகுமார்
நீல சந்திரகுமார்

குற்றச்சாட்டு குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமாரிடம் விளக்கம் கேட்டோம். ``இறந்த நபர் எனக்கும் நெருங்கிய நண்பர். இந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து நடந்தவற்றை எஸ்.பி-யிடம் கூறியிருக்கிறோம். இறந்த சரவணனுக்கு ரூ.125 கோடிக்குக் கடன் இருக்கிறது. அவர் கடன் கேட்கத்தான் என்னைச் சந்திக்க வந்தார். மூன்று நாள்களாக சரவணன் எனக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தார். நானும் 10 கோடி ரூபாய் ஏற்பாடு செய்தேன். பணம் கொடுப்பதாகக் கூறிய நபரின் செல் நம்பரையும் சரவணனிடம் கொடுத்துவிட்டேன். அடுத்து, சேவூரில் இருக்கிற ஓர் இடத்தை விற்பனைக்குச் சொல்லியிருந்தார் அவர். பார்ட்டியையும் வரவழைத்து, அந்த இடத்தையும் நல்ல ரேட்டுக்குப் பேசி முடித்துக் கொடுத்தேன்.

இரண்டு வேலைகளும் சக்சஸ் ஆனதால், சரவணன் ரொம்ப ஹாப்பியாக இருந்தார். என்மேல் அன்பு பொழிந்து, முத்தம் கொடுத்தார். இதையடுத்து, அவரைச் சாப்பிடவைத்து வழியனுப்பி வைத்தேன். அதன் பிறகு, அவர் எப்போது மீண்டும் கட்டடத்தின் மேலே வந்தார், எப்படி விழுந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் நன்றாகக் குடித்துவிட்டுத் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. அவர் என்னிடம் பேசும்போது, `எனக்கு 55 வயசாகுது. இன்னும் திருமணம் ஆகலை. எனக்குத் திருமணம் ஆனால்தான் என் தம்பிக்குத் திருமணம் ஆகும். இப்போதான் மேட்ரிமோனியில் பெண் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது’ எனக் கூறினார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையெனில் செத்துப்போய்விடுவேன் என்றும் மனவேதனையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் விழுந்தது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகிறார்கள். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக எதிர்த்தரப்பினர் முயல்கிறார்கள்’’ என்றார்.

நீல சந்திரகுமார் மீது ஏற்கெனவே கொலை முயற்சி உட்பட எட்டு வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்கில் அவர் மீதான சந்தேகம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism