திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டுவருவதாகக் கூறி, கடந்த 26-ம் தேதியன்று திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று (27.04.2022) காலை தங்கமணியின் உறவினர்களைத் தொடர்புகொண்ட காவல்துறை அதிகாரிகள், ``தங்கமணிக்கு வலிப்பு நோய் வந்துவிட்டது" எனத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தங்கமணி, மாலை 4 மணி அளவில் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்களிடத்தில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பொய் வழக்கு பதிந்தே தங்கமணியை சிறையிலடைத்ததாகவும், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தங்கமணி உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டும் தங்கமணியின் உறவினர்கள்... சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு இன்று சென்றுள்ளனர்.
அப்போது, காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், அவர்களில் ஒருசிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாராய வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியினத்தவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.