Published:Updated:

நெல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கொலையானவர் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

கொலையான மாயாண்டியின் குடும்பத்தினர்

கொலைசெய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் மற்றும் சமுதாய அமைப்பினருடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையானவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

நெல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தையில் உடன்பாடு; கொலையானவர் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

கொலைசெய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் மற்றும் சமுதாய அமைப்பினருடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையானவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

Published:Updated:
கொலையான மாயாண்டியின் குடும்பத்தினர்

நெல்லை அருகே சீவலப்பேரி கிராமத்தில் சுடலைமாடசாமி கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு பூசாரி சிதம்பரம் என்பவர் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதான 17 பேர் தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கொலைசெய்யப்பட்ட மாயாண்டி, பூசாரி சிதம்பரம்
கொலைசெய்யப்பட்ட மாயாண்டி, பூசாரி சிதம்பரம்

வழக்கில் ஆஜராக சாட்சிகள் அச்சமுற்ற நிலையில், சிதம்பரத்தின் உறவினரான மாயாண்டி என்பவர், சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உதவிகளைச் செய்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பினர் மாயாண்டியை, கடந்த 10-ம் தேதி வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

மாயாண்டி கொலையைக் கண்டித்தும், கோயில் விவகாரம் தொடர்பாக நடக்கும் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் சமுதாய அமைப்பினரும், மாயாண்டியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. கொலையானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பாதிக்கப்பட்டவர்கள், அதுவரை மாயாண்டி உடலை வாங்குவதில்லை என முடிவெடுத்தனர்.

சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள்
சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள்

இந்த நிலையில், கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்பினருடன் இன்று சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகள் குறித்து கவனமாகக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பாக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட மாயாண்டி குடும்பத்தினரிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து மாயாண்டியின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ``கொலைசெய்யப்பட்ட மாயாண்டியின் மனைவி 36 வயதானவர். அவருக்கு ஒரு பெண், ஓர் ஆண் குழந்தை இருக்கிறார்கள். அவருடைய குடும்ப எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சத்துணவு, ஊட்டச்சத்து, ரேஷன் கடை, தலையாரி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வேலை கேட்கிறார்கள். ஏற்கெனவே இறந்த பூசாரி சிதம்பரத்துக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் அவர் மனைவிக்கும் வேலை கேட்டிருக்கிறார்கள்.

மாயாண்டி உறவினர்களுடன் சபாநாயகர் அப்பாவு
மாயாண்டி உறவினர்களுடன் சபாநாயகர் அப்பாவு

இருவரின் குடும்பச் சூழல் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இருவருக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது அந்த உத்தரவாதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு, அரசு அவர்களுக்கு உதவும் என்கிற நம்பிக்கையோடு மாயாண்டியின் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்திருக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், புதன்கிழமை (நாளை) உடலைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனர். நிச்சயமாக இது ஒரு சோகச் சம்பவம். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி அமைக்கப்படும். அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.

அத்துடன், கோயில் நிலத்தை அளவீடு செய்து, பட்டா வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. மாயாண்டி உடலை வாங்க மறுத்த நடந்த போராட்டத்தின்போது வழக்குகள் போடப்பட்டிருந்தால் அவை அனைத்தையும் ரத்துசெய்வதற்கும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார். கொலைச் சம்பவம் நடந்த கிராமத்தில், நிலையான அமைதியை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.