Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: பழிக்குப் பழியாக நடந்த படுகொலை! - தம்பிக்கு பதிலாக அண்ணனைக் கொன்ற கொடூரம்

 கொலை
கொலை

மர்மக் கும்பலின் முக்கிய எதிரியான பொன்னையன் தப்பித்து ஒடிவிட்டார். ஆனால், அவருடைய அண்ணன் விஜயகுமார் வசமாக மாட்டிக்கொள்ள, அவரைப் படுகொலை செய்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன் (24). ஜேசிபி ஆபரேட்டர். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் கடந்த 2019-ல் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்தபோது கண்மாய்களில் சவுட்டு மணல் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். தூத்துகுடியிலிருந்து வந்து மணமேல்குடியில் கணக்கராகப் பணியாற்றிய இசக்கிமுத்து என்பவர் பொன்னையனுக்கு எதிராகச் செயல்பட்டுவந்திருக்கிறார். இந்தநிலையில், பொன்னையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு எதிராக இருந்த இசக்கிமுத்துவை வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்படடிருந்த பொன்னையன் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராகிவிட்டு பொன்னையன் அவருடைய அண்ணன் விஜயகுமாருடன் (27) டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். இருவரும் செல்லுகுடி விளக்கு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே டூ வீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள் பொன்னையனின் டூ வீலரை மறித்து கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவளால் இருவரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். அப்போது பொன்னையனின் கழுத்தில் லேசான அரிவாள் வெட்டு விழ, வயலுக்குள் இறங்கி ஓடிவிட்டார்.

சம்பவ இடத்தைப் பார்வையிடும் திருக்கோகர்ணம் காவல்துறை
சம்பவ இடத்தைப் பார்வையிடும் திருக்கோகர்ணம் காவல்துறை

பொன்னையன் தப்பிவிட, விஜயகுமாரின் தலை, கழுத்து, நெஞ்சு என உடல் முழுவதும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல். இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்து வந்த திருக்கோகர்ணம் காவல்துறையினர், விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் கூறுகையில், ``கடந்த 2019-ல் மணமேல்குடியில் மணல் அள்ளியதைத் தட்டிக்கேட்டதற்காக, பொன்னையனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இசக்கிமுத்துவை வெட்டிப் படுகொலை செய்ததற்குப் பழிவாங்கும்விதமாக இந்தக் கொலை நடந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விஜயகுமார் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார். அந்த மர்மக் கும்பலின் முக்கிய எதிரியான பொன்னையன் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவருடைய அண்ணன் விஜயகுமார் வசமாக மாட்டிக்கொள்ள அவரைப் படுகொலை செய்திருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடிவருகிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு