Published:Updated:

`சரக்கு மட்டுமில்ல... கஞ்சாவும் அடிச்சிருந்தானுங்க!' - ரவுடிகளால் புதுச்சேரி போலீஸுக்கு நேர்ந்த துயரம்

ரௌடிகள் தாக்கியதில் கைமுறிந்த காவலர்
ரௌடிகள் தாக்கியதில் கைமுறிந்த காவலர்

கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ரவுடிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், ஊர்க்காவல் படைவீரர் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டிருப்பதுடன், மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

மதுவால் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்:

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தாலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. அதேபோல, மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டதால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் போக்குவரத்து எஸ்ஐ பிரதீபன் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன், நெல்சன் ஆகியோர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட கௌதம்
கைது செய்யப்பட்ட கௌதம்

மது போதையில் தகராறு:

அப்போது முகக்கவசம் அணியாமலும் மதுபோதையிலும் ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், வாகன ஓட்டிகளுடன் சிக்னலில் நின்றனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால், வாகனத்தைவிட்டு கீழே இறங்கும்படி ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நெல்சன் அறிவுறுத்தினர். ஆனால், மது போதையில் தன்னிலையை மறந்திருந்த அவர்கள், குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த தம்பதியுடன் தகராறில் ஈடுபட்டனர்.

போலீஸைத் தாக்கிய ரவுடிகள்:

அங்கிருந்த பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முன்வராத நிலையில், ஊர்க்காவல் படைவீரர்கள் அந்த இடத்திற்கு ஓடிச்சென்று அந்த போதை இளைஞர்களைத் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, ‘போலீஸுக்கு அவ்ளோ தைரியம் வந்துடுச்சா’ என்று கேட்டுக்கொண்டே அந்த மூன்று இளைஞர்களும் சேர்ந்து ஊர்க்காவல் படைவீரர்களைப் புரட்டி எடுத்தனர். அந்தச் சம்பவத்தைப் பார்த்த எஸ்ஐ பிரதீபன் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்தார். ஒரு போதை இளைஞர் மட்டுமே பிடிபட்ட நிலையில், மற்ற இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

கைது செய்யப்பட்ட முகேஷ்
கைது செய்யப்பட்ட முகேஷ்

தப்பிச்சென்ற ரவுடிகள்:

ஆனால், சிறிது நேரத்திலேயே திரும்பிவந்த அவர்கள், தங்களது நண்பரை விடும்படி கூறினர். அதற்குள் விரைந்துவந்த காவலர்கள் அவர்கள் மூவரையும் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் திலாஸ்பேட்டை கருணா ஜோதி நகரைச் சேர்ந்த அறிவழகனின் மகன் கௌதம் (22), சிவசங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (19), தேவராஜ் என்பவரின் மகன் முகேஷ் ((20) என்பது தெரியவந்தது.

கொலைவெறித் தாக்குதலால் கை முறிவு:

அதையடுத்து, ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்ததும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் ரவிச்சந்திரனின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றொரு வீரரான நெல்சன் என்பவர் படுகாயமடைந்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட தமிழரசன்
கைது செய்யப்பட்ட தமிழரசன்

அரசியல்வாதிகள் சிபாரிசு:

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்த சிலர், ”அந்த மூணு பசங்களும் சரக்கு மட்டுமில்ல கஞ்சாவும் அடிச்சிருந்தானுங்க. நேத்து விசாரணை நடத்தும்போதே, ’நாங்க யாரு தெரியுமா ? எங்கமேல கை வைக்கற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’னு திமிறா கேட்டானுங்க. அதைவிட, அவங்க மேல வழக்கு போடக் கூடாது... அவ்ளோ அரசியல்வாதிங்க போன் போட்டு டார்ச்சர் குடுத்துட்டாங்க” என்று புலம்புகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு