Published:Updated:

மகாராஷ்டிரா: ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு! - துணை முதல்வர் அஜித் பவாருக்கு நெருக்கடி

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் சர்க்கரை ஆலையைப் பறிமுதல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர். இந்த வங்கி ஊழல் தொடர்பாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக விசாரித்துவருகிறது.

விசாரணையில், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக் கடனுக்காக பறிமுதல் செய்த சொத்துகளை, மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு வங்கியின் இயக்குநர்களின் உறவினர்களுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதில் சதாரா மாவட்டத்திலிருக்கும் ஜரந்தீஷ்வர் சஹாரி சுகர் கார்கானாவை (ஜரந்தீஷ்வர் எஸ்எஸ்கே) குறைந்த விலைக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தச் சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அஜித் பவார்
அஜித் பவார்

இது தற்போதைய துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரின் மனைவிக்குச் சொந்தமானது. ரூ.65.75 கோடி மதிப்புள்ள சர்க்கரை ஆலையின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக் கடனுக்காக இந்தச் சர்க்கரை ஆலையை 2010-ம் ஆண்டு ஏலம் விட்டபோது `குரு கமாடிட்டி சர்வீசஸ்’ என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது. அந்த நிறுவனம் அதனை விலைக்கு வாங்கி உடனே அதனை ஜரந்தீஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டது. இந்த ஜரந்தீஷ்வர் சுகர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், ஸ்பார்க்லிங்க் சாயில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதிகப்படியான பங்கு இருக்கிறது. ஸ்பார்க் லிங்க் நிறுவனம் அஜித் பவார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமானது.

அஜித் பவார்தான் ஸ்பார்க் லிங்க் நிறுவனத்தின் மூலம் குரு கமாடிட்டி என்ற போலி கம்பெனிக்கு நிதியுதவி செய்து ஜரந்தீஷ்வர் சர்க்கரை ஆலையை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் இயக்குநர்களாக இருந்தபோது வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல் சர்க்கரை ஆலை ஏலம் விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். எனவேதான் சர்க்கரை ஆலை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜரந்தீஷ்வர் சர்க்கரை ஆலையைக் காரணம் காட்டி, இதுவரை புனே கூட்டுறவு வங்கி உட்பட பல வங்கிகளில் ரூ.700 கோடி கடன் வாங்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடியில் 70 அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் முதன்முறையாக இப்போது சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித் பவாருக்கு எதிரான நெருக்கடியை பா.ஜ.க தீவிரப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கெனவே அஜித் பவார் மீதான லஞ்சப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு