Published:Updated:

`கொலை மிரட்டலால் யாரிடமும் சொல்லவில்லை!' - ஆளும்கட்சிப் பிரமுகரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவுசெய்துள்ள சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர்  செல்வராஜ்
அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர் செல்வராஜ்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம்- பவானி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களின் இரண்டாவது மகள் சிவசங்கரி. இவருக்கும் சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பாகக் கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிய சிவசங்கரி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவசங்கரி, மகன் சரண்ராஜுடன் தன் தாய் வீட்டில் வசித்துவருகிறார். சிவசங்கரி கூலி வேலைக்குச் செல்வது, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குப் பால் கொண்டு கொடுப்பது போன்ற வேலைகள் செய்துவந்துள்ளார்.

இந்த நிலையில், அதே பகுதியில் வசித்துவரும் ஆண்டிமடம் அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர் செல்வராஜ் (65) கடந்த 6 மாதத்துக்கு முன்பு முந்திரி தோப்பில் முந்திரிக் கொட்டைகளைப் பறித்துக்கொண்டிருந்த சிவசங்கரியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று செல்வராஜ் மிரட்டியிருக்கிறார். குடும்பச் சூழல் மற்றும் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வந்துள்ளார் சிவசங்கரி.

அரியலூர் எஸ்.பி அலுவலகம்
அரியலூர் எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில் சில தினங்களாக சிவசங்கரிக்கு சோர்வும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் சிவசங்கரியை ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிவசங்கரி 6 மாத கர்ப்பமாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிவசங்கரியிடம் விசாரித்துள்ளனர். கர்ப்பத்துக்கு செல்வராஜ்தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிவசங்கரியின் தாயார் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்தார்.

அதன்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராஜ் மோகன் விசாரணை செய்துள்ளார். அப்போது, சிவசங்கரியை செல்வராஜ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் செய்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான செல்வராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர்  செல்வராஜ்
அ.தி.மு.க ஒன்றியப் பொருளாளர் செல்வராஜ்

இதுகுறித்து அரியலூர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரனிடம் பேச முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் மருதமுத்து என்பவரிடம் பேசினோம். ``செல்வராஜ் கட்சியின் மூத்த நிர்வாகி. பல வருடமாகக் கட்சியில் பணியாற்றி வருகிறார். இச்சம்பவம் குறித்து அவரிடம் பேசினேன். தன் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். போலீஸாரிடமும் பேசிவருகிறேன். அவர் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக நாங்கள் சப்போர்ட் செய்யமாட்டோம்” என்று முடித்துக்கொண்டார்.