மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துர்கா சங்கர். இவர், சேலம் ஏற்காட்டில் 1993-ல் 1.4 ஏக்கர் நிலத்தை 20 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பின்னர் அவர், மத்தியப் பிரதேசம் சென்றுவிட்டார். இந்த நிலையில், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரான சுகுமார், துர்கா சங்கருடைய இடத்துக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தைத் தன் வசப்படுத்தியுள்ளார். மேலும் பிற்காலத்தில் பிரச்னை ஏதும் வராதபடிக்கு நிலத்தைத் தன் உறவினர்கள் ஐந்து பேருக்கு விற்றுள்ளார்.
2019-ம் ஆண்டு ஏற்காட்டிலுள்ள தனது நிலத்தை விற்பதற்கு முடிவுசெய்து துர்கா சங்கர் நிலம் தொடர்பான ஆவணங்களின் நகல்களை சண்முக சுந்தரம் எனும் நிலத் தரகரிடம் கொடுத்துள்ளார். அப்போது நிலம் தொடர்பான வில்லங்கம் பார்க்கும்போது, துர்கா சங்கரின் நிலம் மற்றொருவர் பெயரில் இருந்துள்ளது. அதையறிந்து அதிர்ச்சியடைந்த துர்கா சங்கர், உடனடியாக அப்போதைய மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். சுகுமார் அரசியல்ரீதியாக முக்கிய நபர் என்றும், முன்னாள் முதல்வருக்கு வேண்டப்பட்டவராக இருந்ததாலும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு, மார்ச் 10-ம் தேதி துர்கா சங்கர் இது தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகார்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாநகர காவல் ஆணையருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா மேற்கொண்ட விசாரணையில், சுகுமார் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்தி விற்றது தெரியவந்தது. அதையடுத்து, அவர் உத்தரவின்பேரில் போலீஸார் சுகுமாரைக் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.