Published:Updated:

கேரள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சேலத்தில் இருந்து சிம் கார்டுகள் சப்ளை! - தீவிரமடையும் விசாரணை

சேலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக என்.ஐ.ஏ மூலம் வந்த தகவலை அடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீஸ்
போலீஸ் ( Representational Image )

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்து வந்ததாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள லியாகத் அலி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு போலீஸ்
தமிழ்நாடு போலீஸ்

அதன் பிறகு லியாகத் அலியைக் கேரளாவில் என்.ஐ.ஏ., போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், அதில் லியாகத் அலி பல்வேறு ரகசியத் தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. லியாகத் அலிக்கு சேலத்தை சேர்ந்த இப்ராகிம், அன்பரசன், அப்துல்ரகுமான் ஆகிய 3 பேர் மூலம் போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அப்துல்ரகுமானின் செல்போன் கடையில் 9 பேரின் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் வாங்கி அதைக் கேரளாவில் உள்ள தீவிர வாதிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சிம்கார்டுகளை குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகில் அடைப்புவிளை பாதர் தெருவை சேர்ந்த அப்துல்சலீம், இளங்கடை பகுதியைச் சேர்ந்த சையதுஅலி நவாஸ், கடலூரைச் சேர்ந்த காஜாமைதீன் ஆகியோர் சேலம் வந்து சிம்கார்டு வாங்கிக் சென்று கேரளாவில் உள்ள லியாகத் அலியிடம் கொடுத்துள்ளனர். லியாகத் அலி கேரளாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கொடுத்துள்ளார்.

செல்போன் சிம் கார்டுகள்
செல்போன் சிம் கார்டுகள்

இந்நிலையில் அப்துல்சலீம்,சையது அலி நவாஸ், காஜாமைதீன் ஆகியோர் சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும், இவர்கள் நாகர்கோவில் வழியாகத் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாகச் சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதோடு வாகன சோதனையும் செய்து வருகிறார்கள்.

`அல்கொய்தா அமைப்பும்.. ஃபேஸ்புக் `லைக்’கும்!’- என்.ஐ.ஏ ரேடாரில் திருச்சி இளைஞர்

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1512ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், சந்தேகப்படும் நபர்களைக் குறித்தும் இந்த எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். சேலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களால் சேலத்தின் உள்ள முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.