Published:Updated:

சேலம்:`கொரோனா கவச உடைபோன்று முழுவதும் மூடி வந்தார்கள்; தமிழ் பேசினார்கள்’-அதிரவைத்த முகமூடிக் கொள்ளை

கொள்ளை
கொள்ளை ( எம். விஜயகுமார் )

``முகமூடிக் கொள்ளையர்கள் கொரோனா உடையைப்போல உடல் முழுவதும் மூடி வந்தார்கள். தமிழில் பேசினார்கள். `சத்தம் பேட்டால் கொன்றுவிடுவோம். அமைதியாக இருந்தால், எங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்து சென்றுவிடுவோம்’ என்றார்கள்''

சேலம், ஆத்தூர் அருகேயுள்ள வீரகனூரில், முகமூடிக் கொள்ளையர்கள் அருகருகேயுள்ள வீடுகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்து, வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி, நகைகளையும், பணத்தையும் களவாடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி., எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.

கொள்ளை நடந்த இடம்
கொள்ளை நடந்த இடம்

ஆத்தூர், வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம், குமரன்மலை அடிவாரத்தில் வசிக்கும் குமாரசாமி வீட்டிலும், தீபன் வீட்டிலும் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து முகமூடித் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி, நகையையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

இது பற்றி வீரகனூரைச் சேர்ந்த குமாரசாமியின் மூத்த மகன் சிங்காரம், ``நான் ராயர்பாளையம் ஊருக்குள் இருக்கிறேன். எங்க அப்பா குமாரசாமி, அம்மா அமிர்தம், தம்பி வாசுதேவன் ஆகியோர் தோட்டத்திலுள்ள வீட்டில் இருந்தார்கள். அப்பாவுக்கு 72 வயது ஆகிறது. அம்மா விவரம் அறியாதவர்; உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டோடு இருக்கிறார். நேற்று நள்ளிரவு சுமார் 1:00 மணிக்கு தொடர்ந்து நாய் கத்திக்கொண்டே இருந்திருக்கிறது.

அப்பாவும் அம்மாவும் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது மறைந்திருந்த ஆறு முகமூடி திருடர்களில் ஒருவன் அப்பாவின் தலையில் கட்டையால் அடித்திருக்கிறான். அப்பா கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார். அம்மாவையும் தம்பியையும் கட்டிப்போட்டுவிட்டு பீரோவை உடைத்து மக்காச்சோளம் விற்ற பணம் ரூ. 54,000, மருந்து வாங்கவைத்திருந்த 6,000 ரூபாய் என மொத்தம் 60,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும், 13 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்'' என்றார்.

ராயர்பாளையத்தைச் சேர்த தினேஷ், ``கொள்ளை நடந்த குமாரசாமி வீட்டுக்கு அருகே வசிப்பவர் என்னுடைய நண்பர் தீபன், வயது 30. அவுங்க அப்பா பேரூராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார். தீபன், அவருடைய மனைவி, குழந்தைகள், வயதான தாய் ஆகியோர் வீட்டில் இருந்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு ஆறு முகமூடித் திருடர்கள் தீபன் வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு மனைவியின் தாலி, தோடு, செயின் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், வீட்டில்வைத்திருந்த 1.25 லட்சம் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டனர்.

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

பிறகு தீபன் குடும்பத்தினரை வீட்டுக்குள்வைத்து தாழிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். தீபன் எனக்கு போன் செய்த பிறகே வீட்டுக்கு வந்து அவர்களைத் திறந்துவிட்டேன். முகமூடிக் கொள்ளையர்கள் கொரோனா கவச உடையைப்போல உடல் முழுவதும் மூடி வந்தார்கள். தமிழில் பேசினார்கள். `சத்தம் பேட்டால் கொன்றுவிடுவோம். அமைதியாக இருந்தால் எங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்றுவிடுவோம்’ என்றுஅவர்கள் சொன்னதாக தீபன் கூறினார்’’ என்றார்.

இது பற்றி சேலம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இந்தக் கொள்ளைச் சம்பவத்தைக் கண்டறிய ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீரகனூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவல் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு இரவு ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் கொள்ளையர்களைக் கண்டுபிடித்துவிடுவோம்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு