நாகையில் சட்ட விரோதமாக மணல் கடத்திச் சென்ற மாவட்ட கவுன்சிலரின் டிராக்டர் மோதியதில் சிறுமி படுகாயமடைந்தார். மணல் கடத்தல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கவுன்சிலரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாகையில் சனிக்கிழமைதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் நாகை நகராட்சிப் பள்ளியில் படிக்கும் 20 மாணவிகள் நாகை நெல்லுக்கடைதெரு பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த நிகழ்ச்சிக்கு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, சட்ட விரோதமாக போலீஸாருக்குத் தெரியாமல் திருட்டு மணல் ஏற்றிவந்த டிராக்டர் ஒன்று குறுக்கு வழியில் நாகை நெல்லுக்கடைதெரு அருகே வேகமாக வந்தது. அந்த டிராக்டர் திடீரென மாணவிகள் ஊர்வலத்தில் புகுந்தது. அதில் நம்பியார் நகரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி தரிஷ்காமீது டிராக்டர் டயர் ஏறியதில் அவர் காலில் எலும்பு முறிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கதறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து மாணவியை மீட்ட அந்தப் பகுதி மக்கள், அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சம்பவமறிந்து அங்கு வந்த நாகை தாசில்தார் அமுதா மற்றும் போலீஸார் மணல் ஏற்றிவந்த டிராக்டரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மாவட்ட கவுன்சிலரும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் நிர்வாகியுமான சரபோஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் டிராக்டரை பறிமுதல்செய்த வருவாய்த் துறையினர் நாகை வெளிப்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாகப்பட்டினம் நகர கிராம நிர்வாக அலுவலர் வீரமணி அளித்த புகாரின் பேரில் மணல் கடத்தல் குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

நாகை மாவட்டத்தில் மணல் குவாரி இல்லாத நிலையில், திருட்டு மணல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கவுன்சிலர் சரபோஜியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட கவுன்சிலர் சரபோஜி காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார். திருட்டு மணல் ஏற்றிவந்த தன்னுடைய வாகனத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி மாவட்ட கவுன்சிலர் சரபோஜி தன் ஆதரவாளர்களுடன் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அங்கு வந்த வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் தியாகராஜன், வருவாய்த் துறை அளித்த புகாரின் பேரில் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதால் நீதிமன்றம் சென்று வாகனத்தை மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கம்யூனிஸ்ட் பிரமுகர் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தன்னுடைய வாகனத்தை மீட்க சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.