Published:Updated:

`பால்கோவா’ஆறுமுகம்! - சங்கரன்கோவில் சிறை லஞ்ச விவகாரத்தில் சிக்கிய துணை சூப்பிரண்டு

சங்கரன்கோவில் கிளைச் சிறைச்சாலை
சங்கரன்கோவில் கிளைச் சிறைச்சாலை

சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட உணவு வழங்குவது உள்ளிட்ட சலுகைகளைக் கொடுப்பதற்கு சிறையின் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பான புகாரில் துணை சூப்பிரண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறைச்சாலைகளில் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிறைச்சாலைக்குள் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் நன்னடத்தை அடிப்படையில் அநேகக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

`புழல் சிறையில் இரண்டே நாள் தங்கிய கைதிகள்..!' - பாளையங்கோட்டை சிறைக்கும் பரவிய கொரோனா

புதிய குற்றவாளிகள் வரும்போது, அவர்களால் உள்ளே இருப்பவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் சிறை நிர்வாகம் கவனமாக இருக்கிறது. அதனால், விசாரணைக் கைதிகள், ஆங்காங்கே இருக்கும் கிளைச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

`இனி எனக்கு மட்டும் பணம் கொடுங்கள்!' - கைதிக்கு சலுகை அளிக்கப் பேரம் பேசிய நெல்லை சிறைக் காவலர்

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்துக்குக் காரணமான பட்டாசு ஆலையில் கிளை மேலாளரான மாரிச்சாமி என்பவர் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். 

காவலர்கள் லஞ்சம் பெற்ற கிளைச் சிறைச்சாலை
காவலர்கள் லஞ்சம் பெற்ற கிளைச் சிறைச்சாலை

சங்கரன்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சிறைக்குள் சலுகைகள் வழங்குவதற்குச் சிறையின் தலைமைக் காவலர் வைரமணி என்பவர் லஞ்சம் கேட்ட ஆடியோ வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணைக்குப் பின்னர், தலைமைக் காவலர் வைரமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

லஞ்சம் பெற்றது தொடர்பான புகார் குறித்து சங்கரன்கோவில் கிளைச் சிறையில் உள்ள ஒன்பது காவலர்களிடம் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையின் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தினார். அதில், துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் மூன்று காவலர்கள் மட்டுமே பதில் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் வைரமணி விவகாரம் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டனர்.

Vikatan

இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட வைரமணி அளித்த வாக்குமூலத்தில், ``துணை சூப்பிரண்டு ஆறுமுகம் கூறியதன் பேரிலேயே நான் கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சம் பெற்றேன். லஞ்சம் மூலம் கிடைத்த பணத்தில் என்னிடமிருந்து துணை சூப்பிரண்டு பங்கு வாங்கிக் கொள்வார். அவர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே நான் லஞ்சம் வாங்கினேன்”  எனத் தெரிவித்திருக்கிறார்.

சங்கரன்கோவில் கிளைச் சிறையில் சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது வைரமணி பல்வேறு ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை சிறைக் கண்காணிப்பாளரான கிருஷ்ணகுமார் சிறைத்துறை டி.ஜி.பி-யான சுனில்குமார் சிங்குக்கு அனுப்பி வைத்தார். 

சங்கரன்கோவில் சிறைச்சாலை
சங்கரன்கோவில் சிறைச்சாலை

அந்த அறிக்கையின் அடிப்படையில், சங்கரன்கோவில் சிறையின் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகம், சிறைக் கைதிகளுக்கு உறவினர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களில் பால்கோவா இருந்தால் எடுத்துக்கொள்வாராம். 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆறுமுகத்தை சங்கரன்கோவிலில் உள்ள சிறைத்துறையினர் `பால்கோவா’ ஆறுமுகம் என்றே அழைக்கும் விவரமும் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது தெரியவந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு