Published:Updated:

சாத்தான்குளம்: மதுரை வந்த சி.பி.ஐ குழு - தூத்துக்குடியில் இன்று மாலை விசாரணை!

சி.பி.ஐ அதிகாரிகள்
சி.பி.ஐ அதிகாரிகள்

டெல்லியில் இருந்து 7 சி.பி.ஐ அதிகாரிகள், விமானம் மூலம் மதுரை வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள்
சி.பி.ஐ. அதிகாரிகள்

கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை மதுரை உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

சி.பி.ஐ இவ்வழக்கை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் வரையில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விசாரணையைத் துவக்கிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், அன்றிரவே எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்தனர். தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்
‘சாத்தான்’ போலீஸ்! - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி

இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் 12 குழுக்களாகப் பிரிந்து சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை, பஜார், உயிரிழந்த ஜெயராஜின் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, சி.பி.ஐ 3 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்ததுடன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் விசாரணைக் குழு அமைத்த‌து.

சாத்தான்குளம்: `தமிழகம் வரும் 7 சி.பி.ஐ அதிகாரிகள் கொண்ட குழு’ - நாளை முதல் விசாரணை

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக் குழு, இன்று விசாரணையைத் தொடங்குகிறது. இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த 7 பேர் கொண்ட சிபிஐ குழு, தூத்துக்குடி செல்கிறது. சாத்தான்குளம் வழக்கில் இன்று மாலை சிபிசிஐடியிடம் இருந்து ஆவணங்களைப் பெறும் இந்தக் குழு, உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று தெரிகிறது.

சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர்
சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர்

தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், விசாரணை செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சி.சி.டி.வி வீடியோ பதிவுகள் ஆகியவற்றை இன்று மாலை சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். தற்போது ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

சாத்தான்குளம்: `அனுமதித்த  அதிகாரிகள்!' -அதிர்ச்சி கொடுத்த கொரோனா தன்னார்வலர்கள்
சி.பி.ஐ அதிகாரிகள்.
சி.பி.ஐ அதிகாரிகள்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக, டெல்லியில் இருந்து கிளம்பிய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ விசாரணைக் குழு மதியம் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று மாலை தூத்துக்குடி சென்று விசாரணையைத் தொடங்க உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு