Published:Updated:

சாத்தான்குளம்: `நீண்ட விசாரணை; 15 நாள் காவல்!’- 3 பேர் கைது விவகாரத்தில் என்ன நடந்தது?

ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்
ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதை கொலைவழக்காக நேற்று பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் 3 பேர் என 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள எஸ்.ஐ ரகு கணேஷின் வீட்டில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

இதையடுத்து மற்ற காவலர்களையும் கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஏட்டு முருகன் புளியம்பத்தூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆய்வாளர் ஸ்ரீதர், நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் மாவட்டத்தை விட்டு வெளியேற முயன்ற நிலையில் பிடிபட்டார். எஸ்.ஐ பாலகிருஷ்ணையும் மற்றொரு காவலரையும் சிபிசிஐடி போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு பிடித்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

சாத்தான்குளம்: `ஊர் ஊராக இடம் மாறிய ஆய்வாளர் ஸ்ரீதர்’ -நள்ளிரவில் நடந்த சேஸிங்!

முதலில் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாத்தான்குளம் காவல்நிலையப் பொறுப்பாளர் என்ற முறையில் நடந்த சம்பவங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் என்ற முறையில் காவல்நிலையத்தில் உங்களுக்குத் தெரியாமல் வழக்குகள் பதிவாகவோ அல்லது அதுதொடர்பான மற்ற சம்பவங்களோ நடக்க வாய்ப்பில்லையே என்று விசாரணையின்போது கேட்கப்பட்டதாகவும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஆய்வாளர் ஸ்ரீதர் திணறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழைத்துச் செல்லப்படும்  போலீஸார்
அழைத்துச் செல்லப்படும் போலீஸார்

இதையடுத்து, எஸ்.ஐ பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவரிடமும் எஸ்.ஐ ரகு கணேஷிடமும் நீங்களும் இந்த ஈடுபாடு காட்ட என்ன காரணம்? சாதிரீதியான பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார்களே? நீங்கள் இருவரும்தான் அங்கு சென்றீர்களா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து, தலைமைக் காவலர் முருகனிடம், அவர்களை நீங்களும் சேர்ந்து தாக்கியதாகச் சொல்கிறார்களே? உண்மையா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மூன்று பேராலும் எந்தப் பதிலும் சொல்லமுடியவில்லை என்கிறார்கள்.

காலையிலேயே நீதிமன்றத்தில் அவர்கள் மூவரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.30 மணிக்கு மேலும் விசாரணை நீண்டது. மாலை 6.50 மணி வாக்கில் வண்டியில் ஏற்றப்பட்ட மூவரும் 7.20 வாக்கில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், சுமார் 8.15 மணியளவில் அவர்கள் மூவரும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

நீதிபதி ஹேமா முன்னிலையில் போலீஸார் மூவரும் ஆஜர்படுத்தப்படுகிறார்கள் என்ற தகவல் பரவியதும், அப்பகுதியில் வழக்கறிஞர்கள் திரண்டனர். விசாரணையின்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாலும், ஏற்கெனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி பிரதாபன், ஏ.டி.எஸ்.பி குமார் ஆகியோர் மாஜிஸ்திரேட்டுக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்காததாலும் அதிருப்தியில் இருந்த வழக்கறிஞர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிடும் திட்டத்தோடு அப்பகுதியில் திரண்டனர்.

சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு!  -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட மூவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். வழக்கறிஞர்கள் திரண்டிருந்ததால், நீதிபதி உத்தரவிட்டவுடன் அவர்களை ஏற்றிக்கொண்டு போலீஸ் வாகனம் அப்பகுதியை விட்டு விரைவாகக் கிளம்பியது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் பெண் தலைமைக் காவலர் ஆகியோர் அரசு தரப்பு சாட்சியமாக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், மற்றொரு காவலரான முத்துராஜும் அப்ரூவராக மாற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு