Published:Updated:

சாத்தான்குளம்: `7 மணி நேரம்; உணவுக்குக்கூட வெளியே செல்லவில்லை' -சிபிஐ விசாரணையின் முதல் நாள்

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ அதிகாரிகள் குழு சாத்தான்குளத்தில் மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கைது செய்யப்பட்ட 10 போலீஸார்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை மதுரை உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் வரையில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டது நீதிமன்றம்.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்

சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீஸார், அன்றிரவே எஸ்.ஐ ரகு கணேஷை கைது செய்தனர். தொடர்ந்து ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்ளிட்ட போலீஸார் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் 12 குழுக்களாகப் பிரிந்து சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை, பஜார், உயிரிழந்த ஜெயராஜின் வீடு, கோவில்பட்டி கிளைச்சிறை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

8 பேர் அடங்கிய சி.பி.ஐ அதிகாரிகள் குழு:

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, 3 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்ததுடன், குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்களான சுஷில்குமார் வர்மா, சச்சின், ஏட்டு அஜய்குமார் காவலர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் ஐ.நா சபை வரை கொண்டு செல்லப்பட்டதால்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுகுறித்து அறிக்கை கேட்டுள்ளார். இதையடுத்து மத்தியரசும் அதிக தீவிரம் காட்டுகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் போலீஸார் என்பதால், விசாரணையில் கருணை காட்டிவிடக் கூடாது என்பதால்தான் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகளை நியமித்ததாகச் சொல்லப்படுகிறது.

நேற்று (10.7.20) சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் அலுவலகத்தில், மாலை 6 மணியளவில் இவ்வழக்கு சம்பந்தமாக இதுவரை சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், விசாரணை செய்யப்பட்ட சாட்களின் வாக்குமூலங்கள், சிசிடிவி வீடியோ பதிவுகள் ஆகியவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் குழுவிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஒப்படைத்தனர்.

சி.பி.ஐ அதிகாரிகள்
சி.பி.ஐ அதிகாரிகள்

இந்தி தெரிந்ததால் எளிதான விசாரணை

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய சி.பி.ஐ குழுவினர் இன்று காலை 11.20 சாத்தான்குளம் வந்தனர். ஜெயராஜின் இல்லத்தில் சரியாக 11.35 மணிக்கு விசாரணையைத் தொடங்கினர். ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சிஸ், பியூலா, அபிஷா, மருமகன்கள், ஜெயரானின் சகோதரி, மைத்துனர், செல்வராணியின் சகோதரர்கள், வழக்கறிஞர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இவ்விசாரணைக் குழுவுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் தொடர்பு அதிகாரிகளாக வருமான வரித்துறை ஆய்வாளர் செல்வபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ அதிகாரிகளில் இரண்டு பேருக்கு தமிழ் உள்ளிட்ட 3 மொழிகள் தெரியும் என்பதாலும், ஜெயராஜின் மூத்தமகள் பெர்சிஸின் கணவரான அகஸ்டின் மற்றும் பென்னிக்ஸின் மாமா ஜோசப்பிற்கும் இந்தி தெரியும் என்பதாலும் விசாரணை எளிதாக நடந்தது.

உணவுக்குக்கூட வெளியில் செல்லவில்லை

ஜெயராஜின் மனைவி செல்வராணி விசாரணையின்போது, இடையிடையே அழுததால் அவரிடம் விசாரணை நடத்த தாமதமானது. மூத்தமகள் பெர்சிஸுக்கு அம்மை போட்டிருந்த காரணத்தால், அறைக்கு உள்ளே இருந்தபடி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிகாரிகள் உணவுக்குக்கூட வெளியில் செல்லவில்லை. உதவியாளரை சைவச்சாப்பாடு வாங்கி வரச்சொல்லி ஜெயராஜின் இல்லத்தில் வைத்து சாப்பிட்டனர். பின்னர், மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

மறைக்காமல் தெரிந்தவற்றைச் சொல்லுங்கள்

ஜெயராஜும் பென்னிக்ஸும் தாக்கப்பட்ட அன்று என்ன நடந்தது? போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது என்ன? அவர்களின் உடல் நிலையில் ஏற்பட்டிருந்த காயங்களின் தன்மை எப்படி இருந்தது? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. 'இச்சம்பவம் குறித்து எதையும் மறைக்காமல் தெரிந்தவற்றைச் சொல்லுங்கள்' என ஏ.டி.எஸ்.பி விஜய்குமார் சுக்லா தைரியம் சொல்லியுள்ளார். அத்துடன், சி.பி.சி.ஐ.டி அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தவற்றை ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், ஏதும் மாறுதல் இருந்தால் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

வெற்றிமாறனின் `விசாரணை' லேடி கான்ஸ்டபிளும் சாத்தான்குளம் ரேவதியும்?!

சாத்தான்குளம் மருத்துவரிடம் விசாரணை!

வீட்டில் இருந்து 4 அதிகாரிகள் மட்டும், மாலை 3.55 மணி முதல் 5.45 மணி வரை சாத்தான்குளம் மருத்துவமனையில் ஆய்வு செய்து தலைமை மருத்துவர் ஆத்திகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயராஜ், பென்னிக்ஸை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது அவர்களின் நிலை என்ன? காயங்களின் தன்மை என்ன? என்றெல்லாம் கேட்கப்பட்டு, மருத்துவ அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை

நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு

காலை 11.35-க்கு தொடங்கிய விசாரணை, மாலை 6.25 மணி வரை தொடர்ந்தது. "அப்பா, தம்பி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணையை தாமதப்படுத்தாமல் அடுத்தடுத்து வேகமாக நடத்தி 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இப்போ சி.பி.ஐ அதிகாரிகளும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். எங்களுக்கு நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களோட கருத்து. சி.பி.ஐ விசாரணையில் எல்லாத்தையும் விளக்கமாச் சொல்லியிருக்கோம்" என்றனர் ஜெயராஜின் குடும்பத்தினர்.

நீதிபதி பாரதிதாசன்
நீதிபதி பாரதிதாசன்

3 வது முறை விசாரணை நடத்திய நீதிபதி

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறைக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் மூன்றாவது முறையாக சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் மற்ற அறைகளில் இருந்த கைதிகளிடம், "இருவரும் சிறைக்குள் அழைத்து வரப்பட்டபோது என்ன நிலையில் இருந்தார்கள். சிறையில் போலீஸார் தாக்கினார்களா?" என தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் சிறை கண்காணிப்பாளர், வார்டன்கள் என 3.25 மணிநேரம் நடைபெற்றது. மேலும், கோவில்பட்டி கிளைச் சிறையில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம்: முதல் தகவல் அறிக்கை; முக்கிய தடயங்கள்!   - வேகமெடுத்த சிபிஐ விசாரணை
அடுத்த கட்டுரைக்கு