Published:Updated:

சாத்தான்குளம்: `ஜாமீன் கேட்கும் காவலர்கள்..!’ - விடாது விரட்டும் சி.பி.ஐ

சி.பி.ஐ
சி.பி.ஐ

கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸார், தொடர்ந்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிவருவதும், அதற்கு எதிராக சி.பி.ஐ, அவர்களை விசாரிப்பதில் முனைப்பு காட்டுவதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் காவல்நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக, ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய ஐவரை, மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

சி.பி.ஐ
சி.பி.ஐ

முன்னதாக, ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவரும், ஜாமீன் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை அறிந்த சி.பி.ஐ அதிகாரிகள், அவசர அவசரமாக, அன்றைய தினமே, மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், ஐவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து, ஆய்வாளர் ஸ்ரீதர், தான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

வேகமெடுத்த சிபிஐ விசாரணை..! சாத்தான்குளம் வட்டாரத்தில் பரபரப்பு! | Sathankulam

இது ஒருபுறம் என்றால், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருடைய மனு, நாளை காலை விசாரனைக்கு வருகிறது. இதற்கிடையில், சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன், தூத்துக்குடி நீதிமன்றத்தில், சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக, அனைத்து விவகாரங்களும், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அதை அடுத்து, சி.பி.ஐ விசாரணை அதிகாரியான மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா கையெழுத்திட்ட அறிக்கை இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு மதுரைக்கு மாற்றப்படும் பட்சத்தில், சி.பி.ஐ விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றே கூறப்படுகிறது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

இந்நிலையில், சி.பி.ஐ தரப்பில் காவலில் எடுத்து விசாரித்துவரும் ஐவரை, இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறது சி.பி.ஐ. தொடர்ந்து அடுத்த ஐந்து நபர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து ஜாமீன் மனுத்தாக்கல் செய்வதும், அவர்களை விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ முனைப்புக் காட்டுவதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது, இனியும் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தான்குளம் முதல் ஸ்வப்னா வரை... விசாரணையில் புது திருப்பம்! | The Imperfect Show 13/7/2020
அடுத்த கட்டுரைக்கு