விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம், பத்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 270-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 16-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் இந்தப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகள் பேசி பாலியல் சீண்டல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திடீரென பள்ளி முன் கூடி முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் தொடர்பாக தகவலறிந்த விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் தாமோதரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சற்று சமாதானம் ஆகினர்.

மேலும் இது தொடர்பாக, பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சாத்தூர் தாலுகா போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.