Published:Updated:

கொடநாடு வழக்கு: `என்கிட்ட வாங்கின 4 செல்போன் எங்கே?!’ - நீதிமன்றத்தில் போலீஸாரிடம் சயான் வாக்குவாதம்

சயான்
சயான்

``என்கிட்ட இருந்து வாங்கின நாலு செல்போனை கோர்ட்டுலயும் ஒப்படைக்கலை, என்கிட்டயும் திருப்பிக் கொடுக்கலை. அப்போ என்ன மாயம் பண்ணீங்க" என சயான் நீதிமன்றத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக மறைந்த முன்னாள் முதல்வரின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. சேலம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் கனகராஜ் இறந்தநிலையில், மற்றொரு வாகன விபத்தில் படுகாயத்துடன் உயிர்தப்பிய சயானை முதன்மைக் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். சயான் மூலம் மட்டுமே இந்த வழக்கின் மர்மங்கள் வெளிவர முடியும் என்பதால், ஜாமீனில் உள்ள சயானிடம் கடந்த 17-ம் தேதி ஊட்டியில் மூன்று மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலம் இன்னும் நீதின்றதில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படவில்லையென்றாலும், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவருகிறது.

சயான்
சயான்

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு வரும் 2-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சஞ்சய்பாபா. வழக்கு விசாரணைக்காக சயான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த சயான் காவல்துறையினரிடம், ``என்கிட்ட இருந்து பிடுங்குன செல்போனை கோர்ட்டுலயும் ஒப்படைக்கலை. என்கிட்டயும் திருப்பிக் கொடுக்கலை. அப்போ என்ன மாயம் பண்ணீங்க. ரெண்டாம் தேதிக்குள்ள செல்போனைத் திருப்பி கொடுக்கலைன்னா கோர்ட்டுல முறையிடுவேன்" என்றார். செய்தியாளர்கள் முன்னிலையில் சயான் இப்படிக் கேட்டதால் காவல்துறையினர் மழுப்பிச் சமாளித்துவிட்டனர்.

கொடநாடு: `கருணைக் கொலைகூட செய்துவிடுங்கள்; அரசியல் வேண்டாம்!’- நீதிமன்றத்தில் சயான் ஆவேசம்

சயானின் செல்போன் விவகாரம் தொடர்பாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடம் பேசினோம். ``சயானுக்கு நடந்த விபத்துல அவரோட மனைவி, மகள் ரெண்டுபேரும் இறந்துட்டாங்க. அவர் படுகாயத்தோட சுயநினைவில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவரோட செல்போனை போலீஸ் கைப்பற்றியிருக்காங்க. அந்த போன்லதான் கனகராஜும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ இருக்கறதா சொல்றாங்க. இப்போவரைக்கும் அந்த போனை கோர்ட்டுல ஹேண்ட் ஓவர் பண்ணலை. இந்த விவகாரத்தை கோர்ட்டுல கேள்வியாவே எழுப்புனோம். அப்புறம் ஜாமீன்ல இருந்த சயானை டெல்லிலருந்து கூட்டிட்டு வரும்போது ஒரு ஐபோன் உள்ளிட்ட ரெண்டு போனை பறிமுதல் பண்ணியிருக்காங்க. 2019 -ல ரெண்டு செல்போனை வாங்கியிருக்காங்க. இதுல என்ன வேடிக்கைன்னா எந்த போனையும் கோர்ட்டுல ஒப்படைக்கலை. சயான்கிட்டயும் கொடுக்கலை. இதுவே ரொம்ப மர்மமா இருக்கு. அடுத்த விசாரணையில இந்தக் கேள்வியை எழுப்புவோம்"என்றார்.

ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றம்
ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றம்

இந்த விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``எந்தத் தேதியில் சயானிடமிருந்து எந்த காவல்துறை அதிகாரி செல்போனைப் பறிமுதல் செய்திருக்கிறார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சயானின் செல்போனில் இருக்கும் ஆதரங்கள் வெளியானால், இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளிகள் சிக்க வாய்ப்பு இருப்பதால், காவல்துறையினர் திட்டமிட்டே செல்போன்களை கைப்பற்றியுள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கொடநாடு வழக்கு: ``மீண்டும் என் உயிருக்கு அச்சுறுத்தல்!'' - பாதுகாப்பு கேட்கும் சயான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு