திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட குண்டடம் ஒன்றியத்தில் தமிழக அரசால், வீடு கட்டுவோருக்கு ஒரு சிமென்ட் மூட்டை ரூ.210 என மானிய விலையில் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஒன்றியத்தில் 2021-ம் ஆண்டிலிருந்து சிமென்ட் மூட்டைகளுக்குப் பணம் கட்டிய விண்ணப்பதாரர்கள் பெயரில் ரசீது கொடுத்துவிட்டு, வெளிச்சந்தையில் ரூ.310-க்கு சுமார் 1,500 சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், குண்டடம் வட்டாார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், மேற்பார்வையாளர் கந்தசாமி, சிமென்ட் கிடங்கு காப்பாளர் மோசஸ் ஆகியோர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அரசு சிமென்ட்டுக்குப் பணம் கட்டிய தங்களுக்கு சிமென்ட் மூட்டைகளை வழங்காமல், வெளிச்சந்தையில் விற்பனை செய்துவிட்டதாகக் கூறி செங்காளிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன், கரிச்சிகாட்டுபுதூர் பகுதியைச் சார்ந்த ரகு, அர்ச்சனாதேவி, குங்குமபாளையம் நந்தவனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னிமலை என 10-க்கும் மேற்பட்டோர் குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் விஷப் பாட்டில்களுடன் நேற்றிரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பயனாளி லோகநாதன் நம்மிடம் பேசுகையில், ``வீடு கட்டுவதற்காக, கடந்த நவம்பர் மாதம் 370 அரசு சிமென்ட் மூட்டைகள் வேண்டி குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். முதற்கட்டமாக 70 மூட்டைகள் எனக்கு வழங்கப்பட்டன. அதன் பின்னர், 300 மூட்டைகளுக்கு தலா ரூ. 210 வீதம் ரூ.63,000 வங்கியில் செலுத்தினேன். ஆனால், அதன் பிறகு எனக்கு சிமென்ட் மூட்டைகள் தரப்படவில்லை.
அதே நேரத்தில் என்னுடைய பெயரில் ரசீதை போட்டுவிட்டு, வெளிச்சந்தையில் ரூ.300-க்கு சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோல், சுமார் 2,500 சிமென்ட் மூட்டைகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், பலரின் வீடு கட்டும் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்திடம் பேசினோம். ``குண்டடம் ஊராட்சியில் அரசு சிமென்ட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். எவ்வளவு சிமென்ட் மூட்டைகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். விரைவில், பணம் கட்டியவர்களுக்கு சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படும்" என்றார்.