Published:Updated:

20 ஆண்டுகளாக ஒருங்கிணைப்பாளர்; பல கோடி மோசடி... சேலம் சுய உதவிக் குழுவைச் சுற்றும் சர்ச்சை!

போராட்டம்
போராட்டம் ( எம். விஜயகுமார் )

`கடன் தொகை முழுமையாக வட்டியோடு திருப்பி செலுத்திய பின்பு பிடித்தம் செய்த தொகையைத் திருப்பித் தருவார்கள்.'

களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவிலிருந்து பிரிந்து சென்று ஏஸ் பவுண்டேஷன் தொடங்கி இருக்கும் சிவராணி உட்பட அவருடைய குழுவினர் பல கோடி மோசடி செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பத்மஶ்ரீ மற்றும் தமிழக அரசால் ஒளவையார் விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை மற்றும் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதுபற்றி மதுரை சின்னப்பிள்ளையிடம் கேட்டதற்கு, ''தானம் அறக்கட்டளையின் கீழ் களஞ்சியம் பெயரில் தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் 50,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கிறார்கள். இதில் 20 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அறக்கட்டளை தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளராக சிவராணி இருந்தார்.

சின்னப்பிள்ளை
சின்னப்பிள்ளை
எம். விஜயகுமார்

அவர் 2019 பிப்ரவரியில் ஏஸ் பவுண்டேஷன் தொடங்கி பல கோடி மோசடி செய்துள்ளார். அதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏழை கிராமப்புறப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தை மீட்டுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வரைச் சந்தித்து புகார் கொடுப்போம்'' என்றார்.

இதுதொடர்பாகத் தானம் அறக்கட்டளையின் சேலம் மண்டல தற்போதைய ஒருங்கிணைப்பாளர் லோகமாதா பேசுகையில், ''சேலம் மண்டலத்தில் 5,000 குழுக்கள் இருக்கின்றன. இதில் 52,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். குழுக்கள் ஆரம்பிக்கும் போது வங்கிக் கணக்கு தொடங்கி அதில் வைப்புத் தொகை வைத்திருப்பார்கள். குழுவில் உள்ளவர்கள் கடன் பெறும்போது குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். கடன் தொகை முழுமையாக வட்டியோடு திருப்பி செலுத்திய பின்பு பிடித்தம் செய்த தொகையைத் திருப்பி தருவார்கள். ஆனால், கடன் தொகை முழுமையாகக் கட்டிய பின்பும் பிடித்தம் செய்த தொகை கொடுக்கவில்லை.

செலுத்திய தவணைத் தொகையைக் கடனில் வரவு வைக்காமல் முதலீட்டில் வரவு வைத்து கடனும் வட்டித் தொகையும் அப்படியே இருப்பதாகக் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதிக கடன் பெற்ற பெண்களிடம் வீட்டுப் பத்திரம், காட்டுப் பத்திரங்களை வாங்கிக்கொண்டு கடனை அடைத்தும் அதைத் திருப்பி தரவில்லை. களஞ்சியம் பெயரில் சில உறுப்பினர்களை ஏஜென்டாக நியமித்து பணம் வசூலித்து உறுப்பினர்களுக்குத் தெரியாமல் ஏஸ் பவுண்டேஷன் பெயரில் வரவு வைத்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள்.

இதனால் ஏழைக் கிராமப்புற பெண்கள் பாதிக்கப்பட்டு சேலம் ஆத்தூர், தலைவாசல், வீராணம், அன்னதானப்பட்டி எனப் பல கிராமங்களில் உள்ள களஞ்சியம் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதனால் காவல்துறை ஏஸ் பவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
எம். விஜயகுமார்

இதுதொடர்பாக ஏஸ் பவுண்டேஷன் நிர்வாகி சிவராணி கூறியதாவது, ''நான் தானம் அறக்கட்டளையின் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளராக 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். நாங்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுய நிதி குழுக்களை உருவாக்கி 100 முதல் 500 குழுக்கள் சேர்ந்த பிறகு, அறக்கட்டளை தொடங்குவோம். சேலம் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குழுக்களும் 10 அறக்கட்டளைகளும் இருக்கின்றன.

அறக்கட்டளை தொடங்கும்போது 3 ஆண்டுகளுக்கு வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அன்பளிப்பாகப் பல கோடி தருவார்கள். அதிலிருந்து 3.2 கோடி தானம் அறக்கட்டளையின் துணை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறோம். தொடர்ந்து நன்கொடை கேட்டதால் கொடுக்க முடியாது என்று 42 வட்டார குழுக்கள் வெளியே வந்து ஏஸ் பவுண்டேஷன் உருவாக்கி இருக்கிறோம். எங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்'' என்றார்.

பின் செல்ல