Published:Updated:

சிறுமியிடம் பாலியல் சீண்டல்! - ராமேஸ்வரம் காவலருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை

ராமேஸ்வரத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சரவணன்
சரவணன்

ராமேஸ்வரத்தில், தனிப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றிவருபவர், சரவணன் (44). ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வரும் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்களை ராமேஸ்வரம் கோயிலுக்கு அழைத்துசென்று சாமி தரிசனம் செய்யவைக்கும் பணிதான் இவரது பிரதான பணியாகும். கடந்த 4 ஆண்டுகளாகத் தனிப்பிரிவில் பணியாற்றிவந்தவர் சரவணன், இங்குள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இந்த நிலையில், கடந்த 2018 ஜனவரி மாதம் 23-ம் தேதி காவலர் குடியிருப்பில் வசித்துவரும் மற்றொரு காவலர் ஒருவரின் மகளான 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், தனிப்பிரிவில் பணியாற்றிய சரவணனை வெளியூறுக்கு மாறுதல்செய்து, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

`அந்தப் பெண்ணுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை'-பாலியல் கொடுமையால் விபரீத முடிவெடுத்த புதுவைப் பெண்

இந்த நிலையில், சரவணனின் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமியின் தாய், ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 4-ம் தேதி சரவணனின் மீது புகார் அளித்தார். இதையடுத்து, சரவணன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்ய முயன்றனர். ஆனால், தன்மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த சரவணன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, தலைமறைவான தலைமைக் காவலர் சரவணனை ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் சில மாதங்களுக்குப் பின் கைது செய்தனர்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமைக் காவலர் சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ. 9,000 அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.