Published:Updated:

ராமநாதபுரம்: நடுக்கடலில் சிக்கிய ரூ.5 கோடி கடத்தல் தங்கம்! - அதிர்ச்சித் தகவல்

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம் ( உ.பாண்டி )

சுங்கத்துறையினர், அவர்கள் கடத்திவந்த தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்தநிலையில் அவற்றைக் கணக்கில் காட்டாமல், பெயரளவுக்கு மஞ்சள் மூட்டைகள் மட்டும் சிக்கியதாக வழக்கு பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது.

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் மண்டபம் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடத்தல் தங்கக்கட்டிகள்
கடத்தல் தங்கக்கட்டிகள்
மாதிரிப் படம்

கடந்த சில மாதங்களாக தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள் ஆகிவை கடத்தப்பட்டு வருகின்ரன. இதற்கு ஈடாக இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளைக் கடத்தல் கும்பல் கடத்திவருகிறது. கடற்படை, கடலோரக் காவல் படை, சுங்கத்துறை மற்றும் மத்திய மாநில புலனாய்வுப் பிரிவுகள் என ஏராளமான பாதுகாப்புப் பிரிவுகள் கடலோரப் பகுதிகளைக் கண்காணித்துவரும் நிலையிலும், கடத்தல் சம்பவங்களும் குறைவின்றி நடந்துவருவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் அந்தப் பகுதியினர். பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் இது போன்ற கடத்தல் கும்பல்களை அவ்வப்போது பிடித்துவரும் நிலையில், கடல்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதில் முக்கியப் பணியாற்ற வேண்டிய சுங்கத்துறையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

தங்கம் கடத்தி வரப்பட்ட படகு!
தங்கம் கடத்தி வரப்பட்ட படகு!
உ.பாண்டி

சில மாதங்களுக்கு முன்னர் மண்டபம் மன்னார் வளைகுடா பகுதியில் கடத்தல் கும்பல் ஒன்றைப் பிடித்த சுங்கத்துறையினர், அவர்கள் கடத்திவந்த தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்த நிலையில் அவற்றைக் கணக்கில் காட்டாமல், பெயரளவுக்கு மஞ்சள் மூட்டைகள் மட்டும் சிக்கியதாக வழக்கு பதிவு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தநிலையில் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடியிலுள்ள மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து வருவாய்p புலனாய்வு பிரிவினர் மண்டபத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படையுடன் இணைந்து நேற்று இரவு மன்னார் வளைகுடாவிலுள்ள மனாலி தீவுப் பகுதிகளில் கண்காணித்துவந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் வந்த நாட்டுப்படகு ஒன்றைக் கண்டனர். உடனடியாக அந்தப் படகைச் சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் மற்றும் வருவாய்ப் புலனாய்வு பிரிவினர் அந்தப் படகைச் சோதனையிட்டனர். இந்தச் சோதனையின்போது படகில் மறைத்துவைத்திருந்த தங்கக்கட்டிகள் சிக்கின.

சுங்க அலுவலகத்துக்குக்  கொண்டுவரப்பட்ட படகு.
சுங்க அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்ட படகு.
உ.பாண்டி

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த 5 பேரை கைது செய்து மண்டபம் கடலோரக் காவல் படை முகாமிற்கு கொண்டு வந்தனர். அங்கு பறிமுதல் செய்த தங்கத்தினை ஆய்வு செய்த போது சுமார் 5 கோடி ருபாய் மதிப்பிலான 9.700 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.

இதையடுத்து தங்கம் கடத்திவந்தவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ராசிக், பைஸ் அகமது, முகம்மது பாரூக், ஜெய்னுல் பயாஸ்கான், ஜாசிம் அகமது ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களிடம் தங்கத்தைக் கொடுத்தனுப்பியது யார்... இந்தத் தங்கத்துக்கு மாற்றாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு எதைக் கடத்திச் சென்றனர் என்பது குறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்.
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்.
உ.பாண்டி

தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துவரும் நிலையில், இலங்கையலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடத்திவரப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு