Published:Updated:

பீலா ராஜேஷ் மீது புகார் கொடுத்தது ஏன்? - சொத்துப்பட்டியலை விவரிக்கும் சமூக ஆர்வலர் செந்தில்

பீலா ராஜேஷ் ஐஏஎஸ்
பீலா ராஜேஷ் ஐஏஎஸ்

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் தற்போதைய வணிகவரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷ், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் ஆதாரங்களுடன் புகாரளித்துள்ளார்.

பீலா தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், அப்போதைய சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷும் கொரோனா அப்டேட்ஸ்களை மீடியாக்களுக்குத் தெரிவித்து வந்தனர். திடீரென அமைச்சர் விஜயபாஸ்கர், பேட்டி கொடுக்காமல் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்த பீலா ராஜேஷ் குறித்த தேடல் இணையதளத்தில் அப்போது அதிகமாக இருந்தது.

பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்
பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தினமும் பீலா ராஜேஷ் பேட்டியளித்து வந்தார். திடீரென அவர் பேட்டியளிக்காமல் தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்தார். அப்போது நிருபர்களே பீலா ராஜேஷ் குறித்த கேள்வியை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் கேட்டனர். அந்தளவுக்கு கொரோனா காலகட்டத்தில் பீலா ராஜேஷ் பிரபலமாகியிருந்தார். இந்தச் சூழலில் கொரோனா குறித்த தகவல்களில் குளறுபடி என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அதன்பிறகு, திடீரென சுகாதாரத்துறைச் செயலாளர் பீலாராஜேஷ் மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் பீலா ராஜேஷ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான செந்தில்குமார், ஆதாரங்களுடன் மத்திய, மாநில விஜிலென்ஸ் கமிஷனர், மத்திய, மாநிலச் செயலாளர்கள், மத்திய பணியாளர் மற்றும் பொது குறை தீர்வு அமைச்சகம் ஆகியோருக்கு ஜூன் 22-ம் தேதி மனு ஒன்றை அனுப்பினர். அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் மற்றும் பொதுகுறை தீர்வு அமைச்சகத்திலிருந்து சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. இது, தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

இதுகுறித்து செந்தில்குமாரிடம் பேசினோம் `` பீலாராஜேஷ், 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ஜ். இவரின் கணவர் ராஜேஷ்தாஸ், 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ஜ். தற்போது பீலா ராஜேஷ், வணிகவரித்துறைச் செயலாளராக உள்ளார். முன்னதாக அவர் நகர ஊரமைப்பு இயக்கத்தின் கமிஷனராகவும் சுகாதாரத்துறைச் செயலாளராகவும் பணியாற்றினார். பீலா ராஜேஷ், சென்னை தையூரில் பண்ணை வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல பீலா ராஜேஷும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார்.

பீலா ராஜேஷுக்கு சென்னை கொட்டிவாக்கத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் 5,000 சதுர அடியில் தனி வீடு உள்ளது. சென்னை சூளைமேட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றும் உள்ளது. 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 3.98 ஏக்கரில் விவசாய நிலம், 7,500 சதுர அடியில் வீடும் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 2,100 சதுர அடியில் பிளாட் உள்ளது. சென்னை விருகம்பாக்கம், நெற்குன்றத்தில் 2,500 சதுர அடியில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

சூளைமேடு பிளாட் வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார். கொடைக்கானல் பிளாட் வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கிடைப்பதாகவும் நெற்குன்றம் பிளாட் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கிடைப்பதாகவும் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொடைக்கானல் பிளாட் மூலம் அவர் குறிப்பிடும் அளவுக்கு வாடகை கிடைக்க வாய்ப்பில்லை. நெற்குன்றம் வீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வாடகை கிடைக்க வாய்ப்பில்லை.

2012-ல் தையூரில் 3.98 ஏக்கர் நிலத்தை பீலா ராஜேஷ் வாங்கியுள்ளார். அந்த ஆண்டில் தையூரில் ஒரு சென்ட்டின் விலை 2 லட்சம் ரூபாயாகும். அந்த வகையில் நிலத்தின் மதிப்பு ரூ.8 கோடியாகும். அந்த இடத்தை ரூ.40 லட்சத்துக்கு வாங்கியதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவலாகும். தையூர் இடத்தில் 7,500 சதுர அடியில் நீச்சல் குளம், செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் வீடு கட்டப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூ.25 கோடியாகும். அந்த வீடு சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

விஜிலென்ஸ்
விஜிலென்ஸ்

பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் காவல் துறையில் கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றுகிறார். வீடு கட்டுமானப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக பீலா ராஜேஷ் சொத்துகளை குவித்துள்ளார். இதற்கு காவல் அதிகாரி ராஜேஷ்தாஸும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் குவித்துள்ள சொத்துகள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும்” என்றார்.

சமூக ஆர்வலரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில் குமாரிடம், பீலா ராஜேஷ் குறித்த சொத்துவிவரங்களை வெளியிட்டதற்கு குறிப்பிடும் வகையில் காரணம் உள்ளதா என்று கேட்டோம்.

``நான் ஏற்கெனவே பல சமூக பிரச்னைகளை வெளியில் கொண்டு வந்துள்ளேன். பீலாராஜேஷ் சொத்து குவித்த தகவல்கள் கிடைத்ததும் அதை வெளியில் கொண்டு வந்தேன். வாடகை வருமானம் என்று பீலா ராஜேஷ் கூறிய தகவல் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்.

செந்தில்குமார் கொடுத்த புகார்
செந்தில்குமார் கொடுத்த புகார்

தலைமைச் செயலாளராக ராமமோகனராவ் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தபோதுகூட நான் இந்தச் சோதனையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறியிருந்தேன். அதைப்போலதான் நடந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு நானும் ஒரு காரணம். அடுத்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குள் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கவுள்ளோம்” என்றார்.

பீலா ராஜேஷிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவரது எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் நேற்றே தகவல் தெரிவித்திருந்தோம். அவரின் விளக்கத்துக்காகக் காத்திருந்தும் பலன் கிடைக்கவில்லை. அவரது தரப்பு விளக்கத்தைத் தரும்பட்சத்தில், பரிசீலனைக்குப் பிறகு அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு