Published:Updated:

புகாரை வாபஸ் வாங்கிய சில மணி நேரத்திலேயே..! - கோவை இளைஞரால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்

கொலை
கொலை

கோவையில் குடிப்பதற்கு பணம் தராததால், தாய் தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, விராலியூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரின் மனைவி துளசி. இந்தத் தம்பதிக்கு நான்கு மகள்களும் கார்த்திகேயன் என்ற மகனும் இருக்கின்றனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

இவருக்கு புவேனஸ்வரி என்ற மனைவியும், நிரஞ்சன் என்ற 5 வயது மகனும் இருக்கின்றனர். இதனிடையே, கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கோபித்துக்கொண்டு மனைவியும் மகனும் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால், குடிப்பதற்கு காசுகேட்டு, அடிக்கடி தன் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை குடிபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்தி, பெற்றோருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி, அரிவாளல் தன் தாய் துளசியின் காலில் வெட்டியுள்ளார்.

துளசி
துளசி

இதுகுறித்து ஆலாந்துறை காவல்நிலையத்தில் சுந்தரம் புகாரளித்திருந்தார். மேற்படி, துளசி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் இருந்து துளசி நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். இதனிடையே, மனம் மாறிய சுந்தரம் வழக்குப் பதிய வேண்டாம் என்று சொல்லி, கார்த்தி மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார். இரவு வீட்டுக்கு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்தி மீண்டும், குடிப்பதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.

சுந்தரம்
சுந்தரம்

ஆனால், இருவரும் மறுத்துவிட்டனர். ஆத்திரமடைந்த கார்த்தி அதிகாலை அரிவாளால் இருவரையம் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அக்கம் பக்கத்தினர் காலை பார்த்தபோது இருவரும் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், பெற்றோரைக் கொன்ற கார்த்தி தப்பியோடிவிட்டார்.

சுந்தரம், துளசி சடலமாக
சுந்தரம், துளசி சடலமாக

அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடிப்பழக்கத்தால், ஒருவர் தன் பெற்றோரையே கொலை செய்த சம்பவம் கோவையில் பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல