Published:Updated:

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கொலைகள்

கஞ்சா போதையில் அங்கு வந்த சிறுவன், அங்கிருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டிருக்கிறான். சிறுவனை மடக்கிப்பிடித்த அருள், விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மறைத்துவைத்திருந்த கத்தியால் அருளின் தோள்பட்டையில் வெட்டியிருக்கிறான் சிறுவன்

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

கஞ்சா போதையில் அங்கு வந்த சிறுவன், அங்கிருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டிருக்கிறான். சிறுவனை மடக்கிப்பிடித்த அருள், விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மறைத்துவைத்திருந்த கத்தியால் அருளின் தோள்பட்டையில் வெட்டியிருக்கிறான் சிறுவன்

Published:Updated:
கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
கொலைகள்

“கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” என்று கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கடுமையாக விமர்சித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடமிருந்து ஒரு விளக்கமும் வந்தது. அதில், ‘கடந்த ஏழு மாதங்களில் 940 கொலைகள் நடந்துள்ளன. இதேபோல 2021-ம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1,041 கொலைகளும் நடந்துள்ளன. 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என்று ‘அடடே’ விளக்கமளித்தார் சைலேந்திரபாபு. இதில், 2020-ம் ஆண்டின் டேட்டா என்ன ஆனது என்று ஏனோ அவர் குறிப்பிடவில்லை. அ.தி.மு.க ஆட்சியைவிட, தி.மு.க ஆட்சியில் கொலைகள் குறைவாகவே நடந்திருப்பதாக இந்த விளக்கம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது. எத்தனை கொலைகள், யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிகமாக நடந்தன என்பதை நிறுவுவதில் இல்லை பிரச்னை. போலீஸ்மீது துளியும் அச்சமில்லாமல், சட்டத்தின்மீது பயமே இல்லாமல், கொடூரமாக வெட்டவெளியில், பட்டப்பகலில் கொலை நடக்கும்விதம்தான் பிரச்னைக்குரியது. கடந்த ஆகஸ்ட் மாதம், 31 நாள்களில் மட்டும் நிகழ்ந்திருக்கும் 133 கொடூரக் கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்திருக்கின்றன. இந்த செப்டம்பர் முதல் வாரத்தில் மட்டும் 23 கொலைகள் நடந்துள்ளன. பிரச்னையின் வீரியம் புரிந்திருந்தும், குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது!

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

காவல்துறை மீது பயமே இல்லை!

சென்னை அம்பத்தூர், அன்னை சத்யா நகர் - எம்.கே.பி நகரைச் சேர்ந்த இரண்டு தரப்பு இளைஞர்களுக்கு இடையேயான மோதலில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு அருகிலேயே கார்த்திக் என்பவரை வெட்டிச் சாய்த்தது ஒரு கும்பல். இதே பாணியில், சென்னை மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு அருகிலேயே சுகன், விக்கி என்கிற இருவரை ஆகஸ்ட் 23-ம் தேதி இரவு, கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறது மற்றொரு கும்பல். இரண்டுமே நன்கு திட்டமிடப்பட்ட பழிக்குப் பழி சம்பவங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த மாதத்தில் மட்டும் ஐந்து கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் கொடூரமாக, ஆகஸ்ட் 4-ம் தேதி, சோளிபாளையம் அருகே முத்துலட்சுமி எனும் மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு, 30 பவுன் நகை மற்றும் 10 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆசிரியை ரஞ்சிதம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சுயம்புகனி ஆகியோர் நகைக்காகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். ராணிப் பேட்டை மாவட்டம், ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவைச் சேர்ந்த கலையரசன், அங்குள்ள விளாரி ஏரியில் திருட்டுத்தனமாக மீன் பிடித்திருக்கிறார். இந்தத் தகராறில், ஏரியைக் குத்தகைக்கு எடுத்திருந்த தரப்பினரால் கலையரசன் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தால் வீடுகள் சூறையாடப்பட்டு ஒரு கிராமமே களேபரமானது.

சென்னை மயிலாப்பூர் ரௌடி சிவக்குமார் கொலை வழக்கு விசாரணைக்காக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரௌடி மதுரை பாலா செப்டம்பர் 5-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, பாலாவை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொல்ல முயன்றது. பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலர் பாரதி, மதுரை பாலாவுக்கு விழவேண்டிய கத்திக் குத்தைத் தன்னுடைய கையில் வாங்கியதால், கண்சிமிட்டும் நேரத்தில் உயிர் தப்பினான் பாலா. நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால், வழக்கு விசாரணைக்காக வந்திருந்தவர்களெல்லாம் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அதே தினத்தில், மனைவியோடு மார்க்கெட்டுக்கு வந்த திருவான்மியூரைச் சேர்ந்த பிரபல ரௌடி ஓலை சரவணன் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். இப்படி, காவல் நிலைய வாசலிலும், நீதிமன்ற வளாகத்திலும் ஆட்டை வெட்டுவதுபோல மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். எங்கிருந்து வருகிறது அவ்வளவு தைரியம்?

கலக்கத்தில் கரைவேட்டிகள்... பாதுகாப்பில்லாத காக்கிகள்!

தூத்துக்குடி மாவட்டம், திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ். கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து தனது தோட்டத்துக்குச் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் கார்த்திக்கும் ஒரு சிறுவனும் சேர்ந்து கொலைசெய்தது தெரியவந்தது. அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் பி.பி.பாளையத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் நரசிம்ம மூர்த்தியும் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு காய்கறி வாங்கிக்கொண்டு வீடு திரும்பியபோது, ஒரு மர்மக் கும்பல் அவரை அடித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜெ.ஜெ. நகர்ப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மோகன், சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல, ஆகஸ்ட் 10-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்கரைப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஜெயக்குமாரை நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொலைசெய்திருக்கிறது.

கரைவேட்டிகளுக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கும் பாதுகாப்பற்ற சூழலைத்தான் தமிழ்நாடு காவல்துறையினர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கடலூர் உதவி ஜெயிலர் மணிகண்டன் என்பவர், கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரெளடி எண்ணூர் தனசேகரனிடமிருந்து செல்போன்களைக் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி பறிமுதல் செய்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த தனசேகரன், சிறையிலிருந்தபடியே தன் ஆட்களை ஏவி, ஜெயிலர் குடியிருப்பிலுள்ள மணிகண்டனின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம், போலீஸ் வட்டாரத்தையே கதிகலங்க வைத்துவிட்டது. தனக்குக் குடைச்சல் தரும் போலீஸாரை மிரட்டுவதற்காக, மணிகண்டனின் குடும்பத்தையே தீயில் பொசுக்குவதற்கு ஆட்களை ஏவியிருக்கிறார் தனசேகரன்.

சமீபத்தில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே அருள் என்ற காவலர் மஃப்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கஞ்சா போதையில் அங்கு வந்த சிறுவன், அங்கிருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் கேட்டிருக்கிறான். சிறுவனை மடக்கிப்பிடித்த அருள், விசாரித்துக் கொண்டிருக்கும்போதே மறைத்துவைத்திருந்த கத்தியால் அருளின் தோள்பட்டையில் வெட்டியிருக்கிறான் சிறுவன். கடந்த 23-ம் தேதி, செங்கல்பட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்த ரயிலின் பெண்கள் பெட்டியில் மதுபோதை ஆசாமி ஒருவன் ஏறியிருக்கிறான். பெண் போலீஸான ஆசிர்வா அவனை இறங்கச் சொல்லவும், ஆத்திரமடைந்தவன் கத்தியால் ஆசிர்வாவின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் குத்திவிட்டுத் தப்பிவிட்டான். மூன்று நாள் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகே, அவனைக் கைதுசெய்தது போலீஸ். கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி, நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவில், பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த போலீஸ் ஏட்டு சதீஷை அடித்துத் துவைத்ததோடு அவரின் சட்டையையும் கிழித்திருக்கிறது ஒரு கும்பல்.

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

“ஏம்பா குடிக்குறீங்க..?” கேள்வி கேட்டால் கொலை!

‘குற்றம் செய்பவர்களுக்கு போலீஸ்மீது துளியும் அச்சமில்லை’ என்பதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்தும் நிலையில், மற்றொருபுறம் போதையில் நடந்திருக்கும் கொலைகளும் நம்மைப் பதைபதைக்கவைக்கின்றன. இந்தக் குற்றச் செயல்களில் பெருமளவில் சிறார்கள் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு விஷயம்.

மதுரை எல்லீஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். வீட்டின் அருகிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே சிறுவர்கள் சிலர் மது அருந்தியுள்ளனர். `ஏண்டா இந்த வயசுலேயே குடிச்சு நாசமாப் போறீங்க’ என்று கண்டித்திருக்கிறார் பிரகாஷ். அடுத்த நாள் (ஆகஸ்ட் 28) பிரகாஷின் வீட்டுக்கு வந்த அந்தச் சிறுவர்கள், பிரகாஷைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதைத் தடுக்கவந்த பிரகாஷின் சித்தி வாசுகியின் காலில் வெட்டியிருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்த நிலையில், கொலை வழக்கில் ஆறு சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பகுதியில் செயல்படும் ஹோட்டலுக்கு, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு அதீத மதுபோதையில் வந்த மூன்று சிறுவர்கள் ஓசியில் பரோட்டா கேட்டுள்ளனர். ஹோட்டலின் உரிமையாளர் கருப்பசாமி தர மறுக்கவும், வாய்த்தகராறு ஆகியிருக்கிறது. கடையின் பரோட்டா மாஸ்டர், அந்தச் சிறுவர்களைத் தட்டிக்கேட்டிருக்கிறார். அடுத்த நாள், ஹோட்டலில் பணியை முடித்துவிட்டு, மாஸ்டர் உட்பட நான்கு பேர் ஆசிரியர் காலனி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த கும்பல் அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் பரோட்டா மாஸ்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடன் வந்த மூவர் பலத்த காயமடைந்தனர். இந்தக் கொலை தொடர்பாக, நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேட்டுப் பாளையத்தில், பட்டப்பகலில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த மூன்று இளைஞர்கள், முன்விரோதம் காரணமாக அங்கு பணிபுரியும் கேஷியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டைப் பகுதியில் 19 வயது இளைஞர் சக்திவேல், தன்னிடமிருந்த கூலிங் கிளாஸைக் கொடுக்காமல் அடம்பிடித்ததற்காக, மண்டை பிளக்கும் அளவுக்கு மது பாட்டில்களால் தாக்கியிருக்கிறார்கள் ‘எமகாதக’ நண்பர்கள். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் உயிரிழந்துவிட்டார்.

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!
31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

31 நாள்களில்... 133 கொலைகள்!

இப்படி, முன்விரோதம், கொள்ளை, சொத்துத் தகராறு, குடும்பப் பிரச்னை, போதையில் எனத் தமிழ்நாட்டில் கொலைக் குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. காவல்துறையின் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 31 நாள்களில் 133 கொலைகள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள் காவல்துறையின் மூத்த அதிகாரிகள். அதில், ரௌடிகளுக்குள் நடந்த மோதலில் நான்கு கொலைகளும், பழிக்குப் பழியாக ஒன்பது கொலைகளும், கள்ளக்காதல் விவகாரத்தில் எட்டு கொலைகளும், மதுபோதையில் 28 கொலைகளும் நடந்திருக்கின்றன. குடும்பத் தகராறில் 38 கொலைகள், நிலத்தகராறில் ஐந்து கொலைகள், இதர காரணங்களுக்காக மீதிக் கொலைகள் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “31 நாள்களில் 100-க்கும் மேற்பட்ட கொலைகள் என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம்தான் என்றாலும், இதில் பல கொலைகள் உணர்ச்சிவயப்படுதலாலும், குடும்பப் பிரச்னை காரணமாகவும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும், இவற்றை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. காவல்துறைமீது அச்சமற்ற சூழல் குற்றவாளிகளிடம் இருப்பதைத்தான், சமீபகாலக் கொலைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு.

தமிழ்நாடு காவல்துறையில், நுண்ணறிவுப் பிரிவு, உளவுத்துறை, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோரிடமிருந்து டி.ஜி.பி அலுவலகம் முதல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் வரை புலனாய்வு அறிக்கைகள் தினம்தோறும் அளிக்கப்படுகின்றன. அரசியல் தொடங்கி அன்றாட நிகழ்வுகள், ரௌடிகள் நடமாட்டம், சமூகவிரோதச் செயல்கள் வரையில் இவர்கள் முன்கூட்டியே கொடுக்கும் தகவலின் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த உளவுச் சேகரிப்புப் பணியில் இருக்கும் சிலர், ரெளடிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு சீக்ரெட் ரிப்போர்ட்டுகளை ‘லீக்’ செய்வது வாடிக்கையாக இருக்கிறது.

31 நாள்கள்... 133 கொலைகள்! - அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, செங்கல்பட்டில் விநாயகர் சிலை வழிபாட்டில் நடந்த மோதலில், சரக்கு வேன் டிரைவரான ராஜேஷ்கண்ணா என்பவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். ராஜேஷ் கண்ணாவின் டீமுக்கும் பார்த்திபன் என்பவரின் டீமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பழிக்குப் பழி வாங்க ராஜேஷ் கண்ணா கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலை நடப்பதற்கு முன்பு, உளவுத்துறை சரியாக ரிப்போர்ட் கொடுத்திருந்தால் சம்பவத்தையே தடுத்திருக்க முடியும். ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், சிறையிலிருக்கும் ரௌடி களையும், வெளியிலிருக்கும் ரௌடிகளையும் கண்காணிக்க வேண்டும். ஆனால் அந்தப் பிரிவிலிருக்கும் சில கறுப்பு ஆடுகள் இதைச் செய்வதே இல்லை. காவல்துறை உயரதிகாரிகளும் அலட்சியமாக இருப்பதால், சட்டம்-ஒழுங்கைப் பேணுவது சந்தி சிரிக்கிறது” என்றனர்.

அச்சத்தில் தமிழகம்... அலட்சியத்தில் காவல்துறை!

மாநில குற்ற ஆவணக் காப்பகத்திலிருந்து கிடைத்த 133 கொலைகள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக நாமும் ஆய்வுசெய்தோம். பல கொலைகள் எந்தவித அச்சமும் இல்லாமல், ‘போலீஸ் என்ன பண்ணிடும்?’ என்கிற மிதப்பிலேயே நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. உதாரணமாக, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் லிமிட்டில், மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் என்ற தொழிலாளியை, பீடி கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலைசெய்திருக்கிறார். வேலூர் அக்சீலியம் கல்லூரி ரவுண்டானா அருகே, முடிவெட்டிவிட்டுப் பணம் தர மறுத்தவரை, கத்தியால் கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறார் சலூன்கடை தொழிலாளி விஜயராகவன். சென்னையில், பாலியல் தொழில் புரோக்கருக்கும் தொழிலதிபர் பாஸ்கரன் என்பவருக்கும் இடையிலான வாக்குவாதத்தில், வார்த்தை முற்ற பாஸ்கரன் அடித்துக் கொலைசெய்யப்பட்டு, பாலீத்தீன் பையில் சுற்றி சாலையோரம் வீசப்பட்டார். ‘குற்றம் செய்தால் போலீஸ் பிடிக்கும். தண்டிக்கப்படுவோம்’ என்கிற பய உணர்ச்சியே இல்லாமல், ஆளாளுக்குக் கத்தியைத் தூக்குவது தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

இப்படி அன்றாடம் தமிழ்நாட்டில் கொலைக் குற்றம் அதிகரிப்பது தொடர்பாக, தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் கடந்தகாலங்களில் கொலைகளின் மாத சராசரி என்பது 140-லிருந்து 145 வரை. இந்தச் சராசரி எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த எட்டு மாதங்களில் 101 கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன. முன்பு நடந்ததுபோல சாதி, மதத் தகராறோ கொலைகளோ இப்போது கிடையாது. பல குற்றங்கள், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்னை, உறவினர் பிரச்னை, மது போதையில்தான் நடந்திருக்கின்றன. முன்விரோதம் காரணமாக அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கொலைகள் நடந்தது உண்மைதான். அந்தக் குற்றங்களையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சென்னையைச் சுற்றியுள்ள பல முக்கியக் குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். ரௌடிகளின் சொத்துகளையும், வங்கிக் கணக்குகளையும் முடக்கும் பணியும் நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க, காவலன் உதவி ஆப், சிசிடிவி கேமரா போன்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் ஆன்லைனில், வாட்ஸ்அப்பில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரௌடிகள் தடுப்புப் பிரிவு போலீஸார், குற்றப் பின்னணியில் உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், முன்பு நடத்தியதைப்போல மீண்டும் ஒரு ரௌடி வேட்டை விரைவில் நடத்தப்படும். குற்றமில்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது” என்றார்.

வெறும் எண்ணிக்கை ஒப்பீட்டை மட்டும் வைத்து டி.ஜி.பி தன் கடமையிலிருந்து நழுவப் பார்க்கிறார். அது அவரின் பொறுப்புக்கு அழகல்ல. நடக்கும் கொலைச் சம்பவங்கள் காவல்துறையின் நிர்வாக அலட்சியத்தையே காட்டுகின்றன. பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதிலும், குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதிலும் காவல்துறை தவறிவிட்டது. உடனடியாக டி.ஜி.பி-யும், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிலைக்குப் பொறுப்பேற்று, தமிழகத்தில் இனியேனும் ரத்தம் சிந்தாதவாறு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்!