Published:Updated:

எகிறுது க்ரைம் ரேட்! - எங்கே செல்கிறது தமிழகம்?

க்ரைம் ஸ்பெஷல்

பிரீமியம் ஸ்டோரி
ஜூலை 18, 1993... அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி பிரச்னைக்காக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

பதறிப்போன போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சென்னையின் ஒட்டுமொத்த போலீஸையும் மெரினாவில் குவித்தனர். மூன்று நாள்கள் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய அளவில் எந்த ஒரு க்ரைம் சம்பவமும் நடக்கவில்லை. அப்போதைய உள்துறை உயரதிகாரி ஒருவர், ‘‘நீங்க எல்லாரும் இங்கே இருக்கீங்க. பெரிய அளவில் எந்த க்ரைம் சம்பவங்களும் நடக்கவில்லை. க்ரைம் ஃப்ரீ சிட்டியாக சென்னை மாறிவிட்டது!’’ என்று போலீஸாரைப் பார்த்து கிண்டலாகச் சொன்னார்.

எகிறுது க்ரைம் ரேட்! - எங்கே செல்கிறது தமிழகம்?

அதாவது, ‘ரௌடிகளைக் கையில் வைத்துக்கொண்டு மாமூலுக்காகக் குற்றத்தில் ஈடுபடுத்துவதே போலீஸார்தான். அவர்கள் மெரினாவில் இருந்ததால், சென்னையில் குற்றம் குறைந்துவிட்டது’ என்ற பொருள்பட அந்த அதிகாரி கூறினார். இந்தச் சம்பவத்துக்கும் இப்போது நாம் பார்க்கப்போகும் `பகீர்’ சம்பவங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

இறங்கி, ஏறிய குற்றங்கள்!

கடந்த மார்ச் 25-ம் தேதி... ஊரடங்கு உத்தரவு அமலான பிறகு, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்தன. தமிழகத்தின் ஒட்டுமொத்த போலீஸாரும் கொரோனா தடுப்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். செக்போஸ்ட்டுகள், வாகன சோதனைகள், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தேடுதல்... என்று போலீஸாரின் பணி வழக்கமான சட்டம்-ஒழுங்கு, குற்றப் புலனாய்வுகளிலிருந்து மாறுபட்டிருந்தது. போலீஸார் அனைவரும் வீதிகளிலேயே குவிந்திருந்ததால், ஆயிரத்துக்கும் மேலான ரௌடிகள், அப்படி அப்படியே அமைதியாகிவிட்டனர்.

தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் தமிழக அரசு கொரோனா ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்தது. தனிநபர் வாகனப் போக்குவரத்தும் தடையில்லாமல் நடக்க ஆரம்பித்துள்ளது. தற்காலிகமாகப் போடப்பட்ட செக்போஸ்ட்டுகள் திறந்துவிடப்பட்டன. கொரோனா பணிக்குச் சென்றிருந்த போலீஸார், படிப்படியாகப் போலீஸ் பணிக்குத் திரும்பி, வழக்கமான சட்டம்-ஒழுங்கு, க்ரைம் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் க்ரைம் ரேட் எகிற ஆரம்பித்துவிட்டது. கொரோனா பீதியால் பதுங்கியிருந்த ரௌடிகள் மீண்டும் அரிவாள், கத்திகளுடன் பொது இடங்களில் சுற்ற ஆரம்பித்துள்ளனர்.

எகிறுது க்ரைம் ரேட்! - எங்கே செல்கிறது தமிழகம்?

ரௌடிகள், கூலிப்படையினருடன் கூட்டணி போட்டுக்கொண்டு, சில உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அடிக்கும் கொட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேர்மையான பல அதிகாரிகள், சின்சியாரிட்டி காரணமாகக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு கொரோனா தொற்றை வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். இப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை மட்டுமே இரண்டாயிரத்தைத் தாண்டுகிறது. தடுப்பதற்கு ஆளும் இல்லாமல், சில காக்கிகளின் ஆசீர்வாதத்துடன் ரௌடிகள் தைரியமாகக் களத்தில் இறங்கிவிட்டார்கள் என்றே தெரிகிறது. தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் எந்த அளவில் நடக்கின்றன? ஒரு லைவ் ரிப்போர்ட் திரட்டினோம்.

திருநெல்வேலி ‘லைவ்’ கொள்ளை!

திருநெல்வேலியில் ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி எதிரே, பட்டப்பகலில் நடைபெற்ற ஒரு கொள்ளை முயற்சி சம்பவம் சமீபத்தில் பரபரப்பானது. அந்த வழியே வந்த ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து ஒன்பது பவுன் நகையை பைக்கில் வந்த மூவர் பறிக்க முயன்றனர். நகையைப் பறிக்கவிடாமல் அந்தப் பெண் மல்லுக்கட்டினார். சத்தம் கேட்டு உதவிக்கு வந்த ஒருவர், பைக் ஆசாமிகளைப் பிடிக்க ஓடினார். அவரை நோக்கி அரிவாளை வீசி வெட்ட முயன்ற பைக் ஆசாமிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்துவிட்டனர். இந்தச் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதேபோல், நெல்லை-குமரி நான்குவழிச் சாலையில், ரெட்டியார்பட்டி மலையைக் குடைந்து சாலை அமைக்கப்பட்டிருக்கும். அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு வழிப்பறி கும்பல், தனியாக வரும் குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களை மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளனர். இதுவரை புகார் எதுவும் வராத நிலையில், சமீபத்தில் காதலர்கள் இருவரை மிரட்டி நகை, பணத்தைப் பறித்ததுடன், அந்த மிரட்டல் சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ வெளியாகி வைரலானதால், வழிப்பறி கும்பலை நெல்லை பெருமாள்புரம் போலீஸார் தேடிவருகிறார்கள்.

திருப்பூர் `திகுதிகு...’

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, 20 வயதுக்கும் குறைவான டீன் ஏஜ் இளைஞர்கள் கையில் கத்தி விளையாடுகிறது. ‘பைக்கை மெதுவா ஓட்டினா என்னப்பா?’ என்று கேட்ட மளிகைக் கடைக்காரரை அரிவாளால் தாக்குவது, நண்பர்களுக்கு இடையிலான சாதாரண பிரச்னைகளுக்கே கத்திக்குத்தில் ஈடுபடுவது என திருப்பூர் இளைஞர்கள் சிலரின் வன்முறை வெறியாட்டம் உச்சத்தில் செல்கிறது. இத்தகைய இளைஞர்களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஒரு சில அமைப்புகள், அவர்களைக் கூலிப்படைகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றன. ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எகிறுது க்ரைம் ரேட்! - எங்கே செல்கிறது தமிழகம்?

அலறும் அரக்கோணம்!

அரக்கோணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே பங்கு பிரிப்பதில் தகராறு. பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஒருவரைக் கொன்றுவிட்டனர். உடலை பெட்ஷீட்டில் சுற்றி, பாறாங்கல்லைக் கட்டி கிணற்றில் தூக்கிப்போட்டனர். பெட்ஷீட் விலகவும் பாறாங்கல் தண்ணீருக்குள் சென்றது. உடல் மேலே மிதந்தது. கொலையாளிகளை போலீஸ் பிடித்தது. அதேபோல, இன்னொரு கூலிப்படை கொலைவெறியுடன் ஆள்மாறாட்டத்தில் அப்பாவி ஒருவரைப் போட்டுத்தள்ளியது.

மிரளுது மயிலாடுதுறை!

மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவர் வேறு ஓர் ஊரில் சிறைச்சாலையில் இருக்கிறார். அவரிடமிருந்து பணக்காரர்களுக்கு செல்போனில் செய்தி வரும். அப்படிச் செய்தி வரப்பெற்றவர்கள், ரௌடி கேட்ட பணத்தைக் கூலிப்படை ஆட்களிடம் தர வேண்டும். மறுத்தால் கொலைதான். அப்படி, ஒரு பெரும்புள்ளியிடம் கூலிப்படையினர் பணம் பெற்றுக்கொண்டு செல்லும்போது, வழியில் யதேச்சையாக போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஆனால், பணம் கொடுத்த பெரும்புள்ளியோ உயிர் பயத்தில், ‘நான் பணம் கொடுக்கவில்லை’ என்று அமைதியாகிவிட்டார். போலீஸுக்கு என்ன நடந்தது என்று தெரியும் என்றாலும், மேற்கொண்டு நடவடிக்கை இல்லை.

தமிழகத்தை மிரட்டும் புதுச்சேரி டீம்!

முன்பெல்லாம் தூத்துக்குடியைப் பூர்வீகமாகக்கொண்ட கூலிப்படையினர்தான் தமிழகம் முழுக்க குற்றச் சம்பவங்களைச் செய்துவந்தனர். அந்தநிலை மாறி, தற்போது புதுச்சேரி டீம் கொடிகட்டிப் பறக்கிறது. போலீஸ் ரெக்கார்டுபடி, `கொலையில் மட்டும் ஈடுபடுபவர்கள் 365 பேர். கொலை முயற்சி, அடிதடி பிரச்னைகளில் ஈடுபடுபவர்கள் சுமார் 750 பேர்’ எனப் புதுச்சேரி கூலிப்படையினர் கதிலங்கவைக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியில் அருண் ரௌடி கோஷ்டியினர், முரளி மற்றும் சந்துரு என்கிற இரு ரௌடிகளை வெட்டிச் சாய்த்தனர். புதுச்சேரி கூலிப்படையில் 10-க்கும் மேற்பட்ட ரௌடி கோஷ்டிகள் உள்ளன. இவர்களுக்கு இடையேயான மோதலில் 15 பேர் வரை இறந்துள்ளனர்.

கூலிப்படையினருக்கு அரசியல்வாதிகளின் அரவணைப்பும் கிடைத்துவிடுவதால், போலீஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எழிலரசி - பாலாஜி - சி.டி.மணி
எழிலரசி - பாலாஜி - சி.டி.மணி

காரைக்காலில் பிரபல பெண் தாதா எழிலரசி அரங்கேற்றிய மூன்று கொலைகள் அனைவருக்கும் தெரியும். தற்போது, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் எழிலரசியை போலீஸ் தேடவும், அவர் தலைமறைவாகிவிட்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வி.ஐ.பி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இரண்டு பிரமுகர்கள் என மூவர் எழிலரசியின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். தன் கணவரின் சொத்துகளை அபகரித்தவர்களை வஞ்சம் தீர்ப்பதாக சொல்லித் திரிகிறார் எழிலரசி

சென்னை ‘சம்பவ’ம்!

சென்னை மாநகரத்தில் தற்போது ‘லைவ்’ ஆக உள்ள ரௌடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 7,650. மாநகரத்தில் யார் `நம்பர் ஒன்’ ரௌடி என்பதற்கான ரேஸ் உச்சத்தில் இருக்கிறது. ரௌடி கோஷ்டியில், காக்கா தோப்பு பாலாஜி, சி.டி.மணி இருவரும்தான் இதுநாள்வரையில் பெரிய கைகள். சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் சொகுசு கார் ஒன்றில் அண்ணா சாலையில் பயணிக்கும்போது அவர்களைப் பின்தொடர்ந்த கும்பல் ஒன்று, சொகுசு காரின் மீது வெடிகுண்டுகளை வீசியது. ரோட்டின் எதிர்ப்பக்கத்தில் பாய்ந்து தப்பிய காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

சென்னையைப் பதறவைத்த இந்தச் சம்பவத்தை அரங்கேற்ற ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர்... ‘சம்பவ’ என்கிற அடைமொழியோடு பவனிவரும் ஒரு ரௌடி. ரௌடிகள் வட்டாரத்தில் சர்வசாதாரணமாக உச்சரிக்கப்படும் ‘சம்பவ’க்காரரை இதுநாள்வரை சென்னை போலீஸ் நேரில் பார்த்தது கிடையாது. கடந்த ஒரு வருடகாலமாக ‘சம்பவ’க்காரரை போலீஸ் தேடிக்கொண்டே இருக்கிறது. ‘‘சார்... இப்பத்தானே உங்க பக்கத்துல நின்னாரு. கவனிக்கலையா?’’ என்று போலீஸாரிடம் ரௌடிகள் கிண்டலடிப்பார்கள். சென்னை போலீஸ் ரெக்கார்டுகளில் அவரது படம் இல்லை. சட்டம் தெரிந்தவரான இவர், போலீஸுக்கு நன்றாக தண்ணீர் காட்டவும் தெரிந்தவர். சென்னை மாநகரத்தில் இப்போதைக்கு `நம்பர் ஒன்’ இடத்தை நோக்கி முந்திக்கொண்டிருப்பவர் ‘சம்பவ’க்காரர்தான்!

திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருக்கிறது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் குடியிருக்கும் இளைஞர் ஒருவருக்கு அங்குள்ள செக்யூரிட்டியுடன் சின்னப் பிரச்னை. தன்னைப் பற்றி பயம் வர வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து, தரையில் அடித்துள்ளார். அது வெடித்துச் சிதறியதில் குடியிருப்புவாசிகள் வெலவெலத்துப் போய்விட்டனர். போலீஸார் பிடித்து விசாரித்ததில், ஒரு பெரிய கஞ்சா வியாபாரியின் பெயரைச் சொன்ன இளைஞர், “ரௌடின்னா பயம் வரணும் சார். சும்மா உதார் விட்டுட்டு இருந்தா மதிக்க மாட்டாங்க. அதான் குண்டு வீசுனேன்’’ என்று கூலாகச் சொல்லியுள்ளார். கஞ்சா பார்ட்டியிடம் மாமூல் கரெக்டாக வந்துவிடுவதால், அந்த இளைஞர்மீது வெடிகுண்டு விஷயத்தைத் தவிர்த்து வேறு பிரிவுகளில் வழக்கு போட்டு அமுக்கிவிட்டது போலீஸ்.

`இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க போலீஸுடன் ரௌடிகள் போட்டுள்ள மறைமுக ஒப்பந்தம்தான் பிரதான காரணம்’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இதுபோக, பிரபல ரௌடிகள் பலரும் தேசியக் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருவது அடுத்த காரணமாகச் சொல்லப்படுகிறது. சேலத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவர் அண்மையில் தேசியக் கட்சி ஒன்றில் இணைந்தது சர்ச்சையானது. கடந்த வாரம் நெற்குன்றத்தை அடைமொழியாகக் கொண்ட ஒரு ரௌடியும், படப்பையை அடைமொழியாகக் கொண்ட இன்னொருவரும் அதே தேசியக் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர். இருவருமே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்து பார்ட்டிகள்.

எகிறுது க்ரைம் ரேட்! - எங்கே செல்கிறது தமிழகம்?

டன் கணக்கில் கஞ்சா, குட்கா!

ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சென்னையின் வடக்கு, மேற்கு மண்டலங்களில் பிடிபட்ட கஞ்சா எவ்வளவு தெரியுமா? 679 கிலோவுக்கும் அதிகம். 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. குட்கா மட்டும் சுமார் 700 கிலோ பிடிபட்டுள்ளது. இவற்றைக் கடத்தியவர்கள், விற்பவர்கள் என்று 183 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இவ்வளவு அயிட்டங்கள் எங்கேயிருந்து கிடைத்தன? இதெல்லாமே உள்ளூர் போலீஸாருக்கு நன்றாகவே தெரியும். போலீஸாருடன் இருந்த நட்புதான் ரௌடிகளுக்குக் கைகொடுத்துவந்தது. இந்த நிலையில், புதிதாக வந்த உயர் போலீஸ் அதிகாரி சாட்டையைக் கையிலெடுக்க, மேலே சொன்ன ரௌடிகள் சிக்கியுள்ளனர். `போலீஸ் கணக்கே இவ்வளவு என்றால், கணக்கில் வராத கஞ்சா, குட்கா டன் கணக்கில் இருக்கும்’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

தமிழகத்தில் எகிறிவரும் க்ரைம் ரேட் விவகாரம் குறித்து கருத்து கேட்க டி.ஜி.பி-யான திரிபாதியைத் தொடர்புகொண்டும், அவரைப் பிடிக்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியை போனில் தொடர்புகொண்டபோது அவரின் உதவியாளர் பேசினார். ‘‘சார் பிஸியாக இருக்கிறார். திரும்ப அழைப்பார்’’ என்றார். இதழ் அச்சுக்குப் போகும் வரை அவரிடமிருந்து பதில் இல்லை.

போலீஸார், நீதித்துறை இரு துறையினரும் ஒரே அலைவரிசையில் பணியாற்றினால்தான் ரௌடிகளை ஒழிக்க முடியும். ஆனால், சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு இந்த அலைவரிசை விரிசல் கண்டுவிட்டது. போலீஸ்-ரௌடி கூட்டணியில் அதிகரிப்பது க்ரைம் ரேட் மட்டுமல்ல, காக்கிகள் மீதான மக்களின் அவநம்பிக்கையும்தான். இந்தக் களங்கத்தைத் துடைத்து, மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு