Published:Updated:

`டி.என்.ஏ சோதனை; கஸ்டடி விசாரணை!’ - க்ளைமாக்ஸை நெருங்கும் அங்கொட லொக்கா வழக்கு?

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு பல்வேறு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா என்று மோஸ்ட் வான்டட் குற்றவாளியாக வலம் வந்தார். இலங்கை போலீஸ் நெருக்கடியால் சில ஆண்டுகளுக்கு முன்பு லொக்கா சட்ட விரோதமாக இந்தியாவில் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு மதுரை வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். தொடர்ந்து, லொக்கா பெங்களூரு, சென்னை, கோவை என்று சுற்றியுள்ளார்.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு சேரன்மாநகர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண் அவரை அடிக்கடி வந்து பார்த்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் மாதம் கோவை வந்த அவர், ஊரடங்கு காரணமாகத் திரும்பி இலங்கை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

தாதா அங்கொட லொக்கா: `போலீஸுக்கு மிரட்டல்; பிளாஸ்டிக் சர்ஜரி’ - இலங்கையின் சந்தேகங்கள்

இதனிடையே, அங்கொட லொக்காவுக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்காக மதுரை சிவகாம சுந்தரி ஆதார்கார்டு கொடுத்திருந்தார். அதில், பிரதீப்சிங் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அங்கொட லொக்கா
அங்கொட லொக்கா

தொடர்ந்து விசாரித்ததில், அந்த ஆதார் போலி என்று தெரியவந்தது. மேலும், இலங்கையிலும் ஒரு தாதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டுமெனக் கூறியிருந்தனர். அதன்பிறகுதான், உயிரிழந்தது பிரதீப்சிங் இல்லை, அங்கொட லொக்கா என்று தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார், சிவகாமசுந்தரி, தியோனேஸ்வரன், அமானி தான்ஜி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், அங்கொட லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்தத் தகவலும் வெளியானதால், அவரது மரண வழக்கில் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இலங்கையிலும், அவரது மரணத்தை உறுதி செய்யவில்லை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவரது உடலுக்கு நடந்த பிரேதப் பரிசோதனை ரிப்போர்டில், “அவரது கை விரல்கள், கால் விரல் நீல நிறமாக இருந்தன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன், பின் லொக்கா
பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன், பின் லொக்கா

இதன்மூலம், லொக்கா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதேநேரத்தில் உடலில் காயங்கள் ஏதுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டி.என்.ஏ சோதனைக்காக அங்கொட லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகள், லொக்காவின் கைரேகை மாதிரிகள் இலங்கையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில், லொக்காவின் கூட்டாளி அசிந்த ஹேமதிலங்கே அங்குள்ள போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமானி தான்ஜி, சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூன்று பேரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து, அவர்கள் மூன்று பேரையும் 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

15-ம் தேதி மதியம் 2 மணிக்கு முன்பாக அவர்கள் 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அங்கொட லொக்கா வழக்கில் விரைவில் மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு