Published:Updated:

`இன்னொரு காவலர் பணியில் இருந்திருந்தால்....!’ - எஸ்.எஸ்.ஐ வில்சனின் மனைவி கண்ணீர்

எஸ்.எஸ்.ஐ வில்சனின் மனைவி
எஸ்.எஸ்.ஐ வில்சனின் மனைவி

``அவருக்கு அங்கு எந்த முன் விரோதமும் இல்லை. டியூட்டி நேரத்திற்கு முன்பாகவே பணிக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கைகொண்டவர் எனது கணவர்” என்று வில்சனின் மனைவி கண்ணீருடன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழக போலீஸ், கியூ பிரிவு போலீஸ் மற்றும் கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி சென்னை சென்று தமிழக முதல்வருடம் நிதிபெற்றுவந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று வில்சனின் கல்லறைக்கு கிறிஸ்தவ மத முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வில்சன்
வில்சன்

இந்த நிலையில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ. வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறுகையில், "தமிழக அரசும், காவல்துறையும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தந்துள்ளனர். அவருடன் மற்றொரு காவலரையும் பணியில் அமர்த்தியிருந்தால் என் கணவருக்கு இந்த கொடூரம் நடந்திருக்காது. அந்த செக்போஸ்ட் அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படும். இரண்டு போலீஸ் இருந்திருந்திருந்தால் குற்றவாளிகளும் பயந்திருப்பார்கள். ஆனால் இதுவரை இப்படி இரு சம்பவம் தமிழகத்தில் நடந்தது இல்லை என்பதால் போலீஸ் துறையையும் குறை சொல்வதற்கில்லை.

`அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்!'- எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் கொதிக்கும் காங்கிரஸ்

அவர் பைக்கில் சென்ற போது ரோட்டில் கிடந்த கல்லால் கடந்த நவம்பர் 6-ம் தேதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அவரது தலையில் அடிபட்டது. அதனால் திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் 15 நாள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர் ஓய்வு எடுத்துவிட்டு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். நான்கு நாள்கள் ஸ்டேஷன் பணியில் இருந்தார். அதன் பிறகு மூன்று நாட்கள் வெவ்வேறு செக்போஸ்ட்களில் பணியில் இருந்தார். கொலை நடந்த அன்றுதான் அந்த செக்போஸ்டில் பணி அமர்த்தப்பட்டார். எனவே அவருக்கு அங்கு எந்த முன் விரோதமும் இல்லை. டியூட்டி நேரத்திற்கு முன்பாகவே பணிக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கைகொண்டவர் எனது கணவர்.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

கொலைச் செய்யப்பட்ட அன்று இரவு 8 மணிக்கு செக்போஸ்டில் பணியில் இருக்க வேண்டும். அதற்காக இரவு 7.10 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டார்" என்றவர் கண்களில் கண்ணீர் பெருகியது. தொடர்ந்து பேசிய அவர், "எனது குடும்பத்திற்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளது. குமரி மாவட்ட காவல்துறையினர்தான் எங்களை முதல்வரிடம் அழைத்துச் சென்றனர். எனது மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் முதல்வர் உறுதியளித்தார்" என்றார்.

`7 ஆண்டுகளுக்கு முன் கத்தியால் தாக்கினார்கள்.. இன்று?!'- எஸ்.எஸ்.ஐ. வில்சன் வழக்கில் பி.ஜே.பி தலைவர்
அடுத்த கட்டுரைக்கு