Published:Updated:

6 ஆண்டுக்கு முன் பெண் ஊழியரை பலிகொண்ட சிறுசேரி ஐ.டி.பார்க்... இன்று எப்படி இருக்கிறது?

சிறுசேரி ஐ.டி பார்க்
சிறுசேரி ஐ.டி பார்க் ( படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன் )

புதருக்குள் நாம் சென்று பார்த்தபோது, தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் கஞ்சா பொட்டலங்களை சுற்றப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் பார்க்க முடிந்தது. இரவு நேரத்தில் இப்பகுதியில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை. #VikatanExclusive

சென்னை சிறுசேரி ஐ.டி.பார்க்கில், பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் 6 வருடங்களை நெருங்கிவிட்டது. இக்கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூன்று குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையைக் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 581 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஐ.டி பார்க்கில் 46 ஐ.டி நிறுவனங்களில் சுமார் 90,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் சரிபாதி எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அந்தப் பெண் ஊழியர் கொல்லப்பட்டு 6 வருடங்கள் முடியப்போகும் நிலையில், சிறுசேரி ஐ.டி பார்க் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வியுடன் ஐ.டி பார்க்கை வலம் வந்தோம்.

சிறுசேரி ஐ.டி. பார்க் முகப்பு
சிறுசேரி ஐ.டி. பார்க் முகப்பு

சிறுசேரி ஐ.டி பார்க்குக்குள் நுழையும்போதே, ஆளே இல்லாத `ஆர்ச்’ நம்மை வரவேற்றது. சென்னையில் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவது என்றாலே காவலாளியிடம் கையெழுத்திட்டு, எந்த வீட்டுக்குச் செல்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 90,000 பேர் பணிபுரியும் சிறுசேரி ஐ.டி பார்க்குக்குள் யார் உள்ளே வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் ஆவணப்படுத்தவும் யாருமே இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு மையம்கூட இல்லாதது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நுழைவு வாயிலிலிருந்து ஐ.டி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதி வரையில் சுமார் 500 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராகூட இல்லை. இருபுறமும் ஆள் உயரத்துக்கு புதர்கள் மண்டிப்போய் காடுபோல காட்சியளித்தது. மின்கம்பங்களில் பல பல்புகள் உடைந்திருந்தன. இப்பகுதியில் துப்புரவுப் பணியில் இருக்கும் பெண் ஒருவர், ``ராத்திரியாச்சுன்னாலே மெயின் ரோட்டுக்கு போறதுக்குள்ள உசுரு போயிரும்ங்க. முதல் மெயின் ரோட்டுல லைட்டு எரியுறது இல்ல. சிப்காட் ஆபீஸ்ல சொன்னா, `ஐ.டி கம்பெனிக்காரங்கதான் இதுக்கெல்லாம் செலவு பண்ணணும்’னு சொல்றாங்க. ஐ.டி கம்பெனிக்காரங்களோ, `எத்தனை தடவை லைட் மாட்டினாலும் யாராவது கல்லெறிஞ்சு உடைச்சிறாங்க. இதுக்குமேல நாங்க என்ன பண்றது’னு கேட்கிறாங்க. வேகத்தடை எல்லாம் பெயர்ந்து போயிருக்கிறதுனால பல வண்டிங்க அதுல மோதி விபத்தாகுது.

பழுதான வேகத்தடை
பழுதான வேகத்தடை
ஆளுயர புதர்கள்
ஆளுயர புதர்கள்
ஆளுயர புதர்கள்
ஆளுயர புதர்கள்

லைட்டு வெளிச்சம் இல்லாததால, பக்கத்துல கட்டட வேலை பார்க்குறவங்க, ரோட்டுல கஞ்சா இழுக்கிறவங்க எல்லாம் புதர்ல உட்கார்ந்துகிறாங்க. நைட்டு தனியா போற பொண்ணுங்களளைப் பார்த்து `மேடம், மேடம் 1 நிமிஷம் நில்லுங்க’னு சவுண்ட் விடுறாங்க. சிலசமயம் மொபைல தட்டிப் பறிச்சு திருடிட்டும் ஓடிடுறாங்க. எவ்வளவோ தடவை இதையெல்லாம் புகார் கொடுத்துப் பார்த்தாச்சு, பெரிய அசம்பாவிதம் நடக்குறதுக்கு முன்னால இதையெல்லாம் தடுக்கணும்” என்றார். இதே கருத்தைத்தான் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பல பெண்களும் பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் தெரிவித்தனர்.

``இரவு 7 மணிக்கு மேல பெண் ஊழியர்களை, `தனியா வெளியே போகாதீங்க. கால்டாக்சி புக் பண்ணுங்க, இல்லைன்னா வெயிட் பண்ணி மத்தவங்களோட கூட்டமா போங்க’னு சொல்றோம். ஆனால், பெண் ஊழியர்கள் யாரும் இதைக் கேட்கிறதில்ல. அவங்க இஷ்டத்துக்கு வெளியே போறதுனாலதான் பிரச்னை வருது. கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும்தான் சிசிடிவி கேமரா வைக்க முடியும், அதுக்காக ரோடெல்லாமா வைக்க முடியும்?” என்று விளக்கமளித்தார் சிறுசேரி சிப்காட்டிலுள்ள ஒரு பெரிய ஐ.டி நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் ஒருவர்.

அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு டூர் அடிக்க மட்டும் கோடிக்கணக்கில் கொட்டும் இந்த அரசு, சில ஆயிரங்கள் செலவழித்து இந்தப் புதர்களை நிரவிவிடுவதற்கும் விளக்குகளை மாற்றுவதற்கும் தயாராக இல்லாதது வெட்கக்கேடு.

இக்கருத்தை `சுத்த அபத்தம்’ எனப் பெண் ஊழியர்கள் முற்றிலுமாக மறுக்கிறார்கள். நாவலூரைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் ஒருவர், ``இரவு 8 மணிக்கு ஷிப்ட் முடிஞ்சு கிளம்பும்போது, கால் டாக்ஸிலாம் ஈசியா கிடைக்காது. மெயின் ரோட்டுக்குப் போனா ஆட்டோ, பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போய்டலாம். நான் போய்தான் என் பிள்ளைங்களுக்கு சமைச்சு கொடுக்கணும். என்னைய மாதிரி எத்தனையோ பொண்ணுங்க ஆபீஸ் முடிஞ்சு போய் குடும்பத்தையும் பிள்ளைங்களோட படிப்பையும் கவனிக்கிறாங்க. கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போனா வேலையை முடிச்சிரலாமேனுதான் தனியா நடந்து போறோமே தவிர, யாரும் ஊர் சுத்தக் கிளம்பல.

இங்க இருக்கிற கம்பெனிங்க எல்லாம் ஒவ்வொரு மாசமும் பலநூறு கோடி ரூபாய் வருமானம் பார்க்குறாங்க. இவங்ககிட்ட இருந்தும் எங்ககிட்ட இருந்தும் வரி பிடித்தமா கோடிக்கணக்குல அரசாங்கம் வாங்குது. ஆனா யாராலயும் ஒரு லைட்டு போட முடியல. அரை கிலோ மீட்டருக்குக்கூட பாதுகாப்பு கொடுக்க முடியல. நீ ஏன் தனியா நடந்து போறனு பொண்ணுகளை கேள்வி கேட்குறது மட்டும் என்ன நியாயம்?” என்று கொதித்தார்.

பழுதாகியுள்ள விளக்கு
பழுதாகியுள்ள விளக்கு

அவர் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. புதருக்குள் நாம் சென்று பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் கஞ்சா பொட்டலங்களை சுற்றப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளையும் பார்க்க முடிந்தது. சிகரெட் அட்டைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மது பாட்டில்கள் புதருக்குள் வீசியெறியப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் இப்பகுதியில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை.

மிரட்டும் புதர்கள்
மிரட்டும் புதர்கள்
சிகரெட் அட்டைகள்
சிகரெட் அட்டைகள்
மதுபாட்டில்
மதுபாட்டில்
`அதே இடம்; 4 பேரும் 4 திசை!- பெண் மருத்துவர் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

இப்பகுதியில்தான் அந்தப் பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 10 நாள்கள் கழித்துதான் அவரது உடலைக் கண்டுபிடித்தார்கள். புதர் அதிகமாக இருந்ததால் ட்ரோன் உதவியுடன் குற்றவாளிகள் தப்பிச் சென்ற பாதைகள் கண்டறியப்பட்டன. இச்சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் ஆகியும் இப்பகுதி இன்றும் அப்படியேதான் இருக்கிறது. அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு டூர் அடிக்க மட்டும் கோடிக்கணக்கில் கொட்டும் இந்த அரசு, சில ஆயிரங்கள் செலவழித்து இந்தப் புதர்களை அகற்றுவதற்கும் விளக்குகளை மாற்றுவதற்கும் தயாராக இல்லாதது வெட்கக்கேடு.

இந்த ஐ.டி பார்க்குக்கு உள்ளேயே ஒரு தீயணைப்பு நிலையம் உள்ளது. அந்தப் பெண் ஊழியர் கொலைக்குப் பிறகு தினமும் நான்கு முறையாவது போலீஸார் ரோந்து வருகிறார்கள். ஆனால், போலீஸ் காவல் உதவி மையமும் ஆபத்து காலகட்டத்தில் பெண்கள் உடனடியாகத் தொடர்புகொள்ள உதவி எண்ணும் சிப்காட் நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பும் அவசியம். கேளம்பாக்கம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் வரும் இப்பகுதியை கண்காணிக்க சொற்ப எண்ணிக்கையிலேயே காவலர்கள் இருப்பதால், கூடுதல் எண்ணிக்கையில் காவலர்களை பணியமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது ஐ.டி பெண் ஊழியர்களின் எதிர்பார்ப்பு.

500 மீட்டருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தமிழக அரசு 1,30,000 சதுர கி.மீ உள்ள இம்மாநிலத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கப்போகிறது.

இறுதியாக சிறுசேரி சிப்காட் அலுவலகத்தில் விசாரித்தோம். ``புதிதாக 12 உயர்ரக சிசிடிவி கேமராக்கள் மெயின் ரோட்டிலும் சிப்காட்டுக்கு உள்ளே பெட்ரோல் நிலையம் வரையில் ஐந்து கேமராக்களும் பொருத்தப்படவுள்ளன. ஓரிரு இடங்களில் எரியாத தெரு விளக்குகளையும் விரைவில் மாற்றுகிறோம். புதருக்குள் அடையாளம் தெரியாத சிலர் அவ்வப்போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அவர்களை எச்சரித்து அனுப்பிவிடுகிறோம். சிஃபி, டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சிப்காட் முகப்பிலேயே விரைவில் வரவுள்ளதால், இனி புதருக்குள் யாரும் செல்ல மாட்டார்கள். பெண்கள் பாதுகாப்புக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பை செய்து வருகிறோம்” என்றனர்.

பெண்கள் பாதுகாப்புக்கு அடிப்படை கட்டமைப்பை செய்வதற்கே இவர்களுக்கு ஆறு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாததால்தானே அடையாளம் தெரியாத நபர்கள் புதருக்குள் வருகிறார்கள். அங்கே இந்தச் செய்திக்காக சுற்றிய நேரத்தில் 17 உயிர்களைப் பலிகொண்ட 20 அடி உயர கருங்கல் சுவர் என் நினைவுக்கு வந்தது. அப்படி பாதுகாப்பில்லாத சுவரை உருவாக்க முடிகிற மனிதர்கள்... அதைக் கண்டுகொள்ளாத அரசு ஒரு பக்கம். இங்கே பெண்கள் பாதுகாப்புக்காக இவ்வளவு பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து குறைந்தபட்சம் கம்பிவேலிகூடவா போட முடியாது? வெறுமனே, ``பெண்களே உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்றே சொல்லிக்கொண்டிருப்பது என்ன நியாயம். இவ்வளவு பெரிய நிறுவனங்களின் `கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி’யில் இவையெல்லாம் வராதா?

ஆள் பற்றாக்குறையால் போலீஸ் பாதுகாப்பு தர முடியாவிட்டாலும் தனியார் பாதுகாவலர்கள் ஐ.டி நிறுவனங்களுடன் கலந்து பேசி சிப்காட் நிர்வாகமே நியமிக்கலாமே, புதர் பகுதியில் வேலி அமைக்கலாமே. ஒரு சிசிடிவி கேமராவை மாட்டுவதற்கும் விளக்குகளை எரிய வைப்பதற்குமே ஆறு வருடங்கள் தேவைப்படுகின்றன என்றால் அது நிர்வாகக் கோளாறு.

சிப்காட் அலுவலகத்தில் புதிதாக வந்து இறங்கியுள்ள பாதுகாப்பு தடுப்பரண்கள்
சிப்காட் அலுவலகத்தில் புதிதாக வந்து இறங்கியுள்ள பாதுகாப்பு தடுப்பரண்கள்
பெண் ஊழியர்கள் இரவில், இருட்டில் இப்படி இவ்விடத்தைக் கடக்க முடியுமா?
பெண் ஊழியர்கள் இரவில், இருட்டில் இப்படி இவ்விடத்தைக் கடக்க முடியுமா?

சர்வதேச தரத்தில் செயல்படும் ஐ.டி நிறுவனங்களும் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமும் அமைந்துள்ள இப்பகுதி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஒரு ஐந்நூறு மீட்டருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தமிழக அரசு, 1.3 லட்சம் சதுர கி.மீ உள்ள இம்மாநிலத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கப்போகிறது. அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்னர் சிப்காட் நிர்வாகமும் செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறையும் இணைந்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு