Published:Updated:

திருவட்டாறு கோயில்: 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை... திருடுபோன கல்தூண்கள்?! - என்ன நடந்தது?

திருவட்டாறு கோயில்
திருவட்டாறு கோயில்

``திருவட்டாறு கோயிலில் கல்தூண் திருடப்பட்டதென்றால், அந்த மண்டபம் எங்கிருக்கிறது.... கல்தூண் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து நேரில் ஆய்வு நடத்தவிருக்கிறேன்" என்கிறார் அறங்காவல்குழுத் தலைவர் சிவகுற்றாலம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையகமாக பத்மநாபபுரம் அரண்மனை இருந்த சமயத்தில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் சார்பில்தான் மன்னர்கள் நாட்டை ஆண்டதாக வரலாறு இருக்கிறது. திருவிதாங்கூர் மன்னர் தனது தலைநகரத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றிய பிறகு, திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயில் கட்டப்பட்டது.

அந்தக் கோயில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவட்டாறு கோயிலில் மூலவர் மஹாவிஷ்ணு படுத்த நிலையில் 22 அடி நீளத்தில் காட்சிதருகிறார். `கடுகு சர்க்கரை யோகம்’ எனப்படும் மூலிகைகளால் ஆன மூலவர் சிலைக்கு அபிஷேகம் செய்வதில்லை. மேலும், இந்தக் கோயிலின் சுற்றுப் பிராகாரங்களில் கலைநயம் மிக்க கல்தூண்களும், கல்தூண்களில் நுட்பமான சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தலத்தைச் சுற்றிலும் ஆறு ஓடுவதால், வெள்ளப் பெருக்கால் பாதிப்பு ஏற்படாமலிருக்க இந்தக் கோயில் சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் 76-வது திருத்தலம் திருவட்டாறு. இந்தக் கோயிலின் மூலவர் மீது தங்கக் கவசம் சார்த்தப்பட்டிருந்தது.

திருவட்டாறு கோயில் கல் தூண்கள்
திருவட்டாறு கோயில் கல் தூண்கள்

மூலவருக்கு சார்த்தப்பட்டிருந்த தங்கக் கவசத்தை திருடிவிட்டு, தகரத்தில் மஞ்சள் பெயின்ட் பூசி அதை சுவாமிக்கு பொருத்திய சம்பவம் 1992-ம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கில் 22 பேருக்கு கடந்த ஆண்டு கோர்ட் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தநிலையில், 1992 முதல் 1995-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட சமயத்தில் திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில் கல்தூண்கள் திருடப்பட்டதாக, சிலைத் திருட்டு தடுப்புப்பிரிவு வழக்கு பதிவு செய்திருக்கிறது.

தென்னிந்தியாவின் வைகுண்டம், 1000 ஆண்டு வரலாறு... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்!

இது குறித்து சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில், திருவிதாங்கூர் சமஸ்தான மகாராஜா வழிபட்ட தலம். 7-ம் நூற்றாண்டு அல்லது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொன்மையான கோயில். இந்தக் கோயிலிலிருந்து 1992 முதல் 1995 வருடத்துக்கு இடைப்பட்ட காலத்தில் கலைநயம்மிக்க நான்கு கல் தூண்களைத் திருட முயன்று, இரண்டு கல்தூண்களை மட்டும் திருடி, சென்னைக்குக் கொண்டுவந்ததாக ரகசியத் தகவல் கிடைத்தது.

திருவட்டாறு கோயில் சிற்பங்கள்
திருவட்டாறு கோயில் சிற்பங்கள்

அதன் அடிப்படையில் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் 16.12.2020 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவல்குழுத் தலைவர் சிவகுற்றாலத்திடம் பேசினோம். ``கல்தூண்கள் திருடப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. கல்தூண் திருடப்பட்டதென்றால், அந்த மண்டபம் எங்கிருக்கிறது. கல் தூண் எங்கிருந்து திருடப்பட்டது என்பது குறித்து நேரில் ஆய்வு நடத்தவிருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு