Published:Updated:

கேங் வாரால் திணறும் பஞ்சாப்... 700 பேருடன் தனி சாம்ராஜிஜ்யம் நடத்தும் மாஃபியா - அதிர்ச்சிப் பின்னணி

பகவந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் ஓய்ந்திருந்தாலும், `கேங் வார்’ எனப்படும் கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்கள் மட்டும் இன்னும் ஓயவில்லை.

கேங் வாரால் திணறும் பஞ்சாப்... 700 பேருடன் தனி சாம்ராஜிஜ்யம் நடத்தும் மாஃபியா - அதிர்ச்சிப் பின்னணி

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் ஓய்ந்திருந்தாலும், `கேங் வார்’ எனப்படும் கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்கள் மட்டும் இன்னும் ஓயவில்லை.

Published:Updated:
பகவந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

`கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவாகப் பாடல்களை பாடிய பாடகர் சித்து மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் ஓய்ந்திருந்தாலும், `கேங் வார்’ எனப்படும் கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்கள் மட்டும் இன்னும் ஓயவில்லை. சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் கபடி வீரர் தர்மீந்தர் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிகள் சர்வசாதாரணமாகப் புழங்கும் அந்த மாநிலத்தில் வி.ஐ.பி-களுக்குக்கூட அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை.

கெஜ்ரிவால், பக்வந்த் மான்
கெஜ்ரிவால், பக்வந்த் மான்
ட்விட்டர்

அதனால் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 400-க்கும் அதிகமான வி.ஐ.பி-களின் பாதுகாப்பை திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட இரு தினங்களில் பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மே 29-ம் தேதி மான்சா மாவட்டத்திலுள்ள ஜவஹர்கே என்ற கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வழிமறித்து சுட்டுத் தள்ளியிருக்கிறது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்த அன்று காரில் சென்ற பாடகர் சித்து மூஸ்வாலா, வழக்கமாகத் தன்னுடன் காரில் அழைத்துச் செல்லும் பாதுகாப்பு வீரர்களை அழைத்துச் செல்லவில்லை. அவரது காரில் குர்விந்தர் சிங், குர்பிரீத் சிங் ஆகிய நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். தங்கள் கண்முன் மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து விலகாமல் இருக்கும் குர்விந்தர் சிங் பேசுகையில், ``காரின் முன்னிருக்கையில் பாடகர் சித்து மூஸ்வாலா அமர்ந்திருந்தார். பின்னிருக்கையில் நானும் குர்பிரீத் சிங்கும் இருந்தோம். எங்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு காரில் மூஸ்வாலாவின் தந்தையும், ஆயுதம் ஏந்திய இரு பாதுகாவலர்களும் வந்தார்கள்.

கார் கிராமத்தை நெருங்கியபோது பின்னாலிருந்து யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்ப்பதற்குள்ளாக எங்கள் காரின் முன்பக்கத்தில் மற்றொரு கார் வந்து நின்றது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் தானியங்கி துப்பாக்கியால் மூஸ்வாலாவை நோக்கிச் சுட்டார். சுதாரித்துக்கொண்ட மூஸ்வாலா, தனது துப்பாக்கியை எடுத்து இரண்டு ரவுண்டு சுட்டார்.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

அதற்குள் இரு கார்களிலிருந்து இறங்கிய சுமார் 10 பேர் எங்கள் காரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகச் சுட்டார்கள். அவர்கள் குறி முழுவதும் மூஸ்வாலா மீது மட்டுமே இருந்தது. சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அவர்கள், தப்பி ஓட முயலாமல், மூஸ்வாலா இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே அங்கிருந்து போனார்கள்” என்று அச்சம் விலகாமல் பேசினார்.

பாடகர் மூஸ்வாலா படுகொலை பஞ்சாப்பையே அதிர வைத்துவிட்டது. இந்தச் சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். லாரன்ஸ் பிஷ்னாய் கூட்டத்தைச் சேர்ந்த விக்ரம்ஜித் சிங்கின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் இதைச் செய்ததாக கோல்டி பிரார் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தனைக்கும் லாரன்ஸ் பிஷ்னாய் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். சிறைக்குள் இருந்தபடியே கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் கூட்டத்தினருடன் சேர்ந்து இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருந்தும், இந்தக் கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தனது வக்கீல் மூலம் தெரிவித்திருக்கிறார் பிஷ்னாய்

லாரன்ஸ் பிஷ்னாய் சிறைக்குள் இருந்தாலும் அவரது கூட்டத்தைச் சேர்ந்த 700 பேர் வெளியில் இருக்கிறார்களாம். இந்தக் கும்பலைச் சேர்ந்த பலரும் குறிபார்த்துச் சுடுவதில் கில்லாடிகள் என்கிறார்கள் காவல்துறையினர். பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் அந்தக் கும்பல் தொடர்ச்சியாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இது தவிர, கனடா உட்பட சர்வதேச நாடுகளிலும் பிஷ்னாயின் கூட்டாளிகள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாப் - கோஷ்டி மோதல் கொலைகள்
பஞ்சாப் - கோஷ்டி மோதல் கொலைகள்

தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் பிஷ்னாய், சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில கிரிமினலான ஆனந்த்பால் சிங்கை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக்கொன்றதும் தலைமை இல்லாமல் தவித்த அந்தக் கூட்டத்தையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு பலத்தை அதிகரித்துக்கொண்டார்.

கான்ஸ்டபிள் மகனான பிஷ்னாய் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை படித்தபோதே வாகனத் திருட்டு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சட்டம் படித்தபோதுதான் கோல்டி பிராருடன் பிஷ்னாய்க்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்தே பஞ்சாப்பில் சாராய மாஃபியா, பாப் பாடகர்கள், மணல் வியாபாரிகளிடமிருந்து பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.

மூஸ்வாலா படுகொலைக்குப் பிறகு திகார் சிறையில் பிஷ்னாய் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு அவரைத் தனிமைப்படுத்தி டெல்லி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். பஞ்சாப் போலீஸாரிடம் தன்னை ஒப்படைத்தால் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம் பிஷ்னாய்க்கு இருக்கிறது.

கோல்டி பிரார், கனடாவில் இருந்தபோதிலும், அங்கிருந்தபடியே தனது அடியாட்கள் மூலம் பஞ்சாப்பில் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு சூத்ரதாரியாக இருந்துவருகிறார். பாடகர் மூஸ்வாலா படுகொலை இரு கோஷ்டிகளையும் மீண்டும் பதற்றத்தில் வைத்திருக்கிறது. யார் முந்தினாலும் மற்றொரு தரப்புக்கு இழப்பு அதிகம் இருக்கும் என்பதால் இரு தரப்புமே கண்கொத்திப் பாம்பாக மற்றொரு தரப்பை கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பகவந்த் மான்
பகவந்த் மான்

இது தவிர அர்மேனியாவிலிருந்து இயங்கும் கௌரவ் பாட்டியால் என்பவரது ஆட்களும் பிஷ்னாய் கூட்டத்தினருக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அதனால் பஞ்சாப் மாநிலத்துக்கு வெளியிலிருந்து இயங்கும் கிரிமினல்கள் அதிகரித்திருப்பதால் கேங் வார் கூட்டத்திடமிருந்து வி.ஐ.பி-களைப் பாதுகாக்கும் வகையில், மீண்டும் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கலாமா என பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்துவருகிறது.

மொத்தத்தில் பஞ்சாப் மாநிலத்தில் கிரிமினல்களின் கை ஓங்கியிருப்பதால் பொதுமக்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப்போகிறது பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism