Published:Updated:

அஜ்மல் கசாப்பின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொண்ட துக்காராம் யார்?#MumbaiAttack26/11

மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதல்

துக்காராமைக் கண்டவுடன் ஏகே-47 ரகத் துப்பாக்கியைக் கையிலெடுத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினான் அஜ்மல் கசாப்.

விவசாய நிலம், மலைகள் என இயற்கை வளங்களுக்கிடையே 250 வீடுகளை மட்டுமே கொண்ட சிறிய கிராமம் கெடாம்பி (Kedambe). மகாராஷ்டிர மாநிலத்தின் இயற்கை எழில் பொங்கும் கிராமங்களில் கெடாம்பியும் ஒன்று. மும்பையிலிருந்து 284 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெடாம்பி. இந்த கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் ஒரு வளைவு வைக்கப்பட்டுள்ளது. துக்காராம் ஒம்லேவின் புகைப்படம் கொண்ட அந்த பேனர் வளைவில் `தியாகி துக்காராம் ஒம்லே' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். `யார் இந்த துக்காராம்?' என்ற கேள்விக்கான விடைதான் இந்தக் கட்டுரை.

துக்காராம் பிறந்த ஊர்
துக்காராம் பிறந்த ஊர்
``திருநங்கைகள் இனி மூன்றாம் பாலினம்!’’- அரசு விளக்கமும் திருநங்கைகள் எதிர்ப்பும்

`துக்காராம் யார்', கெடாம்பி கிராமத்தில் உள்ள பள்ளியின் வகுப்பறைகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ஒருமுறை இந்தக் கேள்வி மாணவர்கள் மத்தியில் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு அதிகபட்சமாக 'அவர் ஒரு போலீஸ் அதிகாரி' என்ற விடை மட்டுமே கிடைத்தது. அப்போது உரத்த குரலில் "என் மாமா, அஜ்மல் கசாப்பைப் பிடித்தவர்" என்று சொன்னான் ஒரு சிறுவன். சுவானந்த் ஒம்லே என்ற சிறுவன்தான் இந்தப் பதிலைச் சொன்னது. அவன் துக்காராம் ஒம்லேயின் சொந்தக்காரப் பையன். ஆம்! தீவிரவாதி அஜ்மல் கசாப்பைப் பிடிக்க உதவி செய்தவர்தான் துக்காராம் ஒம்லே.

Tukaram Omble
Tukaram Omble
twitter.com/aranganathan72

2008-ம் ஆண்டு மும்பையில் 10 இடங்களுக்கு மேல் தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதலில் மும்பை போலீஸ் மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 அதிகாரிகள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிக்கப்பட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். அந்த அஜ்மல் கசாப் பிடிபட்டதற்கு முக்கியக் காரணம் உதவி துணை ஆய்வாளர் துக்காராமின் உயிர்த் தியாகம்தான். மும்பைத் தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று இன்றோடு 11 ஆண்டுகள் முடிவடைந்தன. அன்று இரவு துக்காராம், அஜ்மல் கசாப்பைப் பிடிக்க முயற்சி செய்தபோது நடந்த பரபரப்பான நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்க்கலாம்...

`வாக்குறுதி கொடுக்கவில்லை, ஆனாலும் காத்திருந்தோம்!’- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்
mumbai attack
mumbai attack
Vikatan infographics

நவம்பர் 26, 2008. நடுநிசி நேரம். Girgaum Chowpatty கடற்கரை அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம், "துப்பாக்கி ஏந்திய இரண்டு தீவிரவாதிகள் ஒரு ஸ்கோடா காரைக் கடத்திக்கொண்டு நீங்கள் இருக்கும் திசை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மடக்கிப் பிடியுங்கள்" என்று உத்தரவு வருகிறது. இந்த உத்தரவைக் கேட்டவுடன் உதவி துணை ஆய்வாளரான துக்காராம் ஒரு முடிவெடுத்தார். 'என்ன ஆனாலும் ஒரு பொதுமக்கள் உயிர்கூட இனி போய்விடக் கூடாது' என்பதுதான் அது.

இஸ்மாயில் மற்றும் அஜ்மல் கசாப் என்ற இரண்டு தீவிரவாதிகளும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பலரையும் கொன்றுவிட்டு கார் ஒன்றைக் கடத்திக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தனர். துக்காராம் அந்த ஸ்கோடா காரைப் பார்த்தவுடன், அவர்களைத் தடுப்பதற்காகச் சாலையின் நடுவே சென்றார். அவர் கையில் ஆயுதம் எதுவுமில்லை. டிரைவர் இருக்கையில் இஸ்மாயிலும் பக்கத்து இருக்கையில் அஜ்மல் கசாப்பும் அமர்ந்திருந்தனர். துக்காராமைக் கண்டவுடன் ஏகே-47 ரகத் துப்பாக்கியைக் கையிலெடுத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினான் அஜ்மல் கசாப். அவனை மடக்கிப் பிடிக்க வந்த துக்காராமை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். அந்தக் குண்டுகள் அனைத்தும் வேறு யார் மீதும் பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த துக்காராம், அனைத்துக் குண்டுகளையும் வாங்கிக் கொண்டு வீர மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இஸ்மாயில் சுட்டுக் கொல்லப்பட்டான். அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டான். 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பின் 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான் அஜ்மல்.

துக்காராம்
துக்காராம்
Twitter
அன்று இரவு அடுத்த இடத்தில் தாக்குதல் நடத்த காரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த அஜ்மல் கசாப்பை துக்காராம் மட்டும் எதிர்கொள்ளாமலிருந்தால் மேலும் பல உயிர்கள் போயிருக்கும் என்பதுதான் உண்மை.

சிறுவயதில் சயாத்ரி மலைக்குச் செல்லும் சாலையில் மாம்பழம் விற்றுக் கொண்டிருந்த துக்காராமிற்கு தேசப்பற்று அதிகமாம். மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்துத் துறையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும், போலீஸ் வேலைதான் வேண்டுமென்று காத்திருந்து 1979-ம் ஆண்டு மும்பை போலீஸில் கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்தார் துக்காராம். ஊருக்கு வரும்போதெல்லாம் தன் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, சாக்லேட் எனப் பலவற்றையும் வாங்கிக் கொண்டுதான் வருவார் துக்காராம். காரணம், துக்காராமிற்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியமாம்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாப்
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அஜ்மல் கசாப்

துக்காராமின் மூத்த மகள் வைஷாலி, "அப்பாதான் அஜ்மல் கசாப் பிடிபடுவதற்கு முக்கியக் காரணம். எங்கள் கிராமத்திற்கு விடுமுறைக்கு வரும்போது அவரின் பையில் மிகச் சிறிய இடத்தில்தான் அவரது துணிகள் இருக்கும் மீதமிருக்கும் இடம் முழுவதும் எங்கள் கிராம குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொண்டு வருவார். அப்பா எப்போது வேண்டுமானாலும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. என் தங்கை மகன்கூட தாத்தா எப்போது திரும்பி வருவார் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறான்" என்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்தார்.

துக்காராம்தான் எங்கள் கிராமத்தின் முதல் போலீஸ் அதிகாரி!
பிரகாஷ் ஒம்லே, கெடாம்பி கிராமத் தலைவர்

துக்காராம் நினைவாக மார்பளவு சிலை ஒன்று அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான 'அசோக் சக்ரா' விருதும் துக்காராமிற்கு வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு. "துக்காராம்தான் கெடாம்பி கிராமத்தின் முதல் போலீஸ் அதிகாரி. அவரின் மறைவுக்குப் பிறகு 10-க்கும் மேற்பட்டோர் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டனர். எங்கள் கிராம இளைஞர்களுக்கு அவர்தான் முன்னோடி. அவர்தான் ஹீரோ." என்று கடந்த ஆண்டு ஒரு செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருந்தார் கெடாம்பி கிராமத்தின் தலைவர் பிரகாஷ் ஒம்லே.

Prerana Sthala, Chowpatty, Mumbai, Maharastra
Prerana Sthala, Chowpatty, Mumbai, Maharastra
Chinmayee Mishra
Vikatan
கெடாம்பி கிராம இளைஞர்களுக்கு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமே, உயிர்த் தியாகம் செய்து பல உயிர்களைக் காப்பாற்றிய துக்காராம் நிச்சயம் ஒரு ஹீரோதான்!
அடுத்த கட்டுரைக்கு