Published:Updated:

நீட் தேர்வு எழுதிய கூலித் தொழிலாளி மகள் தற்கொலை! - தொடரும் சோகம்; வேலூரில் அதிர்ச்சி

நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் `நீட்’ தேர்வு காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சோகம் தொடர்ந்துகொண்டிருப்பது, அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கூழையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம், சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன் தொடர்ச்சியாக, வேலூரில் மேலும் ஒரு மாணவி, நீட் தேர்வு எழுதிவிட்டு, தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி ருக்மணி. இருவருமே தினக்கூலி அடிப்படையில் கூலி வேலை செய்துவருகிறார்கள். இவர்களின் 17 வயது மகள் சௌந்தர்யா, ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 600-க்கு 510 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியம்கொண்ட சௌந்தர்யா `நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

சௌந்தர்யா
சௌந்தர்யா

அதற்காக முழுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு கடந்த 12-ம் தேதி காட்பாடியிலுள்ள கிங்ஸ்டன் இன்ஜினீயரிங் கல்லூரி மையத்தில் நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி மிகவும் சோகத்துடன் இருந்திருக்கிறார். நீட் தேர்வில் சில கேள்விகள் கடுமையாக இருந்ததாகவும், அதனால் மதிப்பெண் குறைவாகக் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும் உறவினர்கள் சொல்கிறார்கள். இந்தநிலையில், பெற்றோர் இருவரும் வழக்கம்போல் இன்று காலை வேலைக்குச் சென்ற பிறகு மன உளைச்சலில் இருந்த மாணவி சௌந்தர்யா, தாயின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

அக்கம் பக்கத்தினர் பார்த்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார்கள். தகவலறிந்ததும், லத்தேரி போலீஸாரும் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு