Published:Updated:

`எங்க புள்ளையோட இது முடியட்டும்னு போராடுறோம்’ - கலங்கும் தாய்; சின்னசேலம் மாணவி மரணத்தில் விலகாத மர்மம்

மரணம் ( சித்திரிப்புப் படம் )

கள்ளக்குறிச்சியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்துவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் நிலையில், தங்கள் மகள் கொலைசெய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்துகின்றனர் மாணவியின் பெற்றோர்.

`எங்க புள்ளையோட இது முடியட்டும்னு போராடுறோம்’ - கலங்கும் தாய்; சின்னசேலம் மாணவி மரணத்தில் விலகாத மர்மம்

கள்ளக்குறிச்சியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்துவந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் நிலையில், தங்கள் மகள் கொலைசெய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்துகின்றனர் மாணவியின் பெற்றோர்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தது பள்ளி நிர்வாகம்.

தகவலறிந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்ற மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் அவரின் சடலத்தைப் பார்த்து கதறியழுதனர். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதேபோல ஆறு மாணவிகள் உயிரிழந்திருப்பதாகக் குற்றம் சுமத்திய மாணவியின் உறவினர்கள், மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி
மாணவி

அதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது குவிந்த போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் மாணவி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தில், படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த முடிவை எடுத்ததாக இருக்கிரது எனத் தெரிவித்தது போலீஸ். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் கைதுசெய்ததாகத் தெரிவித்தது போலீஸ். ஆனால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்றும் மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் மறுத்துவருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் பொண்ணை சின்னசேலம் கனியாமூர் பள்ளிக்கூடத்தில் 6-வது வகுப்பில் சேர்த்தேன். போன வருஷம் அவள் 11-வது படிக்கும்போதே பள்ளியில் டி.சி கேட்டேன். அவங்க கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. 12-ம் வகுப்புக்குப் போனதும் ஜூலை 1-ம் தேதி அந்தப் பள்ளிக்கூட ஹாஸ்டலில் சேர்த்தேன். ஜூலை 13-ம் தேதி காலை 6:30 மணிக்கு ’உங்க பொண்ணு உயிரோடதான் இருக்கா, உடனே கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடலுக்கு வாங்க’னு எனக்கு போன் வந்தது. அடுத்த அரை மணி நேரத்துல மறுபடியும் எனக்கு போன் பண்ணி உங்க பொண்ணு செத்துடுச்சுன்னு சொன்னாங்க. உடனே நாங்க கள்ளக்குறிச்சி ஹாஸ்பிடலுக்குப் போனோம். அங்கே ‘உங்க பொண்ணு செத்துதான் ஹாஸ்பிடலுக்கு வந்துச்சு’னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அம்புட்டும் பொய்” என்றார்,

மாணவியின் தாய்
மாணவியின் தாய்

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் மாணிவியின் தாய், ``எங்க புள்ளையைப் பார்த்தோம். தலையெல்லாம் ரத்தம். அவ சட்டையை எடுத்துப் பார்த்தால் சரியான காயம். மூணாவது மாடியில இருந்து விழுந்த புள்ளையோட முகம், கை, காலெல்லாம் நல்லா இருக்கும்போது சட்டைக்குள்ள மட்டும் எப்படி அவ்ளோ காயம் வரும்... உடனே அவ குதிச்சதா சொன்ன இடத்துக்குப் போய்ப் பார்த்தோம். அங்க ஒரு சொட்டு ரத்தம்கூட இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தின் வார்டனோ, பிரின்ஸ்சிபாலோ யாரும் எங்களை சந்திக்கலைங்க. மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்கு போறதுக்குள்ள 1,000 போலீஸை நிறுத்திவெச்சுருக்காங்க. அங்கே இருந்த எல்லாரும் என் புள்ளையோட சேர்த்து இது 7-வது கொலைன்னு சொல்றாங்க. அத்தனை பேரையும் கொலை பண்ணிட்டு, அதை மறைச்சு, பணத்தால அடிச்சு பள்ளிக்கூடத்தை நடத்திக்கிட்டு வர்றாங்க. ஏழு கொலைகளை பண்ணிட்டு ஒரு பள்ளிக்கூடத்தை ஏன் நடத்தணும் ?

ஆனாலும் எங்க புள்ளையோட இது முடிவுக்கு வரட்டும்னு போராட்டம் பண்ணினோம். ஆனா ஒரு கோடி ரூபாய் பணத்தை யாருக்கு லஞ்சமா கொடுத்தாங்களோ தெரியலை. 200 போலீஸ்காரங்களை விட்டு எங்களை நாயை அடிக்கற மாதிரி அடிச்சு துரத்திட்டாங்க. பள்ளி நிர்வாகத்தையும், பிரின்சிபாலையும் கைது பண்ணிட்டோம்னு எங்ககிட்ட போலீஸ்காரங்க போட்டோவைக் காட்டினாங்க. ஆனா கைது பண்ணவங்களை காட்டுங்கனு நாங்க ஸ்டேஷனுக்குப் போய் பார்த்தப்போ அங்கே யாருமே இல்லை. சிசிடிவி வீடியோவை முழுசா காட்டுங்கன்னு கேட்டோம். ஆனா ஒரு வீடியோவைக்கூட எங்ககிட்ட காட்டலை. அதிலும் பொய்.

என் புள்ளைகூட தங்கிப் படிச்ச புள்ளைங்ககிட்ட பேசறதுக்கு அனுமதி கேட்டோம். அதுக்கும் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கலை. எங்க முன்னாடியும், போலீஸ் முன்னாடியும்தான் என் புள்ளையோட பையைப் பார்க்கணும். ஆனால் இவங்க மட்டும் தனியா போய் என் புள்ளையோட பையைப் பார்த்து, அதில் ஒரு சீட்டை எழுதிவெச்சுட்டு ‘உன் பொண்ணு சீட்டு எழுதிவெச்சுட்டு செத்துடுச்சு’ன்னு அபாண்டமா ஒரு பொய்யைச் சொல்றாங்க. என் புள்ளை விழுந்துடுச்சுனு ஜூலை 13-ம் தேதி காலையில் 6:30 மணிக்கு எனக்கு போன் பண்றாங்க. ஆனா 12-ம் தேதி இரவு 10:30 மணிக்கே உன் புள்ளை கீழே விழுந்துடுச்சுனு சொல்றாங்க.

இது எந்த ஊர் நியாயம்... கீழே விழுந்த புள்ளையை முறைப்படி ஆம்புலன்ஸில் அழைச்சுக்கிட்டு போகணும். ஆனா அவங்க அப்படிப் பண்ணலை. அடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கணும். அதையும் அவங்க செய்யலை. இப்படி ஒரு திருட்டுப் பள்ளிக்கூடத்தை எங்கேயும் நான் பார்த்ததில்லை. என் புள்ளை எத்தனை மணிக்கு செத்துச்சோ தெரியலை. ஆனா என் புள்ளை உடம்பு விறைச்சுப் போய் கெடக்குது. போலீஸோ, அரசியல்வாதிகளோ ஒருத்தர்கூட எங்களுக்காகப் பேசலை. காலையில் 6:30 மணியில இருந்து இரவு 10 மணி வரைக்கும் போராடிப் பார்த்தோம். ஆனா அந்தப் பள்ளிக்கூடம்தான் ஜெயிச்சுது. என் புள்ளை சாவுக்கு நியாயம் வேணும். அந்தப் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடணும். இனிமே அதைத் திறக்கவே கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் நிலையில், டி.டி.வி.தினகரன், சீமான் உள்ளிட்டவர்கள் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம் மாணவியின் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும், உடலை மறு உடற்கூராய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர் மாணவியின் பெற்றோர்.