Published:Updated:

மாதம் ரூ. 80 லட்சம் வசூல்; வலை விரித்த வேலூர் விஜிலென்ஸ்! - சிக்கிய காட்பாடி சார்பதிவாளர்

பத்திரப் பதிவுக்கு லஞ்சம் வாங்கிய காட்பாடி சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துக் கைதுசெய்தனர்.

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம்
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம்

வேலூரை அடுத்த காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு மகன் சசிக்குமார் (36). பெங்களூருவில் சரக்கு போக்குவரத்து தொடர்பான வணிக தொழில் செய்கிறார். இவரது தந்தை ஸ்ரீராமுலு 2010-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். 

சார் பதிவாளர் தேவராஜ்
சார் பதிவாளர் தேவராஜ்

தந்தை பெயரில் காட்பாடியில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம், இரண்டு கடைகள் ஆகிய 5 விதமான பூர்விக சொத்துகளைச் சரி சமமாக பாகப் பிரிவினை செய்துகொள்ள அண்ணன் விஜயகுமாருடன் சேர்ந்து சசிக்குமார் முடிவுசெய்தார்.

இதற்காக, சொத்துகளின் மூல பத்திரங்களை எடுத்துக்கொண்டு காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார். சார் பதிவாளர் தேவராஜ் (54), ‘தனக்கு ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தால் தான் வேலை நடக்கும்’ என்று கூறினார்.

பணம்
பணம்

லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிக்குமார், இதுபற்றி வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இன்று மதியம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சசிக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். போலீஸார் சாதாரண உடையில் பின்தொடர்ந்து சென்றனர்.

சசிக்குமாரும் சார் பதிவாளர் அலுவலகத்துக்குப் பணத்தை எடுத்துச் சென்றார். பத்திர எழுத்தர் சந்திர மோகன் (53) மூலம் சார் பதிவாளர் தேவராஜ் அந்த பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

Arrest
Arrest

சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் இருவரையும் கைதுசெய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், பத்திரப்பதிவு மூலம் மாதம் 70 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் கைமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.