Published:Updated:

"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்

தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை பேனர்வைத்து வரவேற்க தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், நீதிமன்றம் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டதாக சுபஶ்ரீயின் தாய் தெரிவித்துள்ளார்.

சுபஶ்ரீயின் தாய் கீதா
சுபஶ்ரீயின் தாய் கீதா

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து, சென்னைப் பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுபஸ்ரீ பலியாகி ஒரு மாத காலம்கூடக் கடக்காத நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றம் படியேறியிருப்பது வருத்தமான விஷயம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தியா – சீனா இடையிலான இரு நாட்டு உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகம் வருகிறார்கள்.

மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர். தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்கத் தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கத் தடை இருப்பதால், பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் அக்டோபர் 9 முதல் 13 வரை ஐந்து நாள்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அரசுதரப்பில் வாதாடினார்கள்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

''5×24 அளவிலான பேனர் வைக்கும்போது அதற்கான உரிய பாதுகாப்புடன் (Support) வைக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 21-வது ஷரத்து வழங்கியுள்ள குடிமக்களின் தனிமனித வாழ்வுரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்காமல் பேனர் வைக்க வேண்டும்'' என பேனர் வைப்பதற்கு அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.

கோயம்புத்தூரில் பேனர் விழுந்து ரகு என்ற இளைஞர் கடந்த ஆண்டு பலியாகியிருக்கிறார். சமீபத்தில் பேனர் விழுந்து சுபஸ்ரீ -யும் பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. ஆனால், அதே நீதிமன்றம் தற்போது பேனர் வைக்க அனுமதியளித்துள்ளது.

ரகு
ரகு

இந்நிலையில், நீதிமன்றம் மீதிருந்த நம்பிக்கையே தகர்ந்துவிட்டதாக சுபஶ்ரீயின் தாய் தெரிவித்துள்ளார். பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, சுபஶ்ரீ -யின் தாய் கீதாவைச் சந்தித்துப் பேசினோம். ''பேனர் வைக்க அனுமதி கேட்ட தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லைன்னுதான் சொல்லணும். உண்மையான அக்கறை இருந்திருந்தா, ஓர் உயிர் போனநிலையிலும் எப்படி அனுமதி கேட்க மனசு வரும்? ஆரம்பத்தில் நீதிமன்றம்தான், பேனர் வைக்கக்கூடாதுன்னு உத்தரவுபோட்டது.

ஆனா, இப்போ அவர்களே பேனர் வைக்க அனுமதி கொடுத்திருக்காங்க. எனக்கு நீதிமன்றத்துமேல இருந்த நம்பிக்கையே போய்ட்டு. மோடி பேனர் வைச்சாதான் வருவேன்னு சொன்னாரா, மத்த நாடுகள்ல தலைவர்களை வரவேற்க யாரும் பேனர் வைக்கலையே. நம்ம நாட்டுல மட்டும் ஏன் இந்த பேனர் கலாசாரம்? ஓர் ஊசி போட்டா மக்களுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும், அந்த ஊசியைத் திரும்பத் திரும்ப போட்டா என்னவாகுமோ, அதுதான் பேனர் விஷயத்திலும் நடக்கும்.

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

தேவையில்லாத விஷயத்தை எதுக்குத் திரும்பத்திரும்ப திணிக்கிறாங்க. எங்கவீட்டுல ரெண்டு குழந்தைங்க இருந்தாங்க. பேனரால இப்போ ஒரு குழந்தையே இல்லாம போய்ட்டு. எனக்கு இன்னொரு குழந்தைமேல அக்கறை இருக்கு. அதனால, நான் இனிமே அந்தக் குழந்தைய வண்டில போகவேணான்னுதான் சொல்லுவேன். அதைத்தான் என்னால பண்ண முடியும். அரசுக்கு மக்கள் மேல அக்கறை இருந்தா, பேனர் வைக்காம இருக்கட்டும்'' என்றார்.

இதுகுறித்து சுபஸ்ரீயின் தந்தை ரவி, "இந்த நிகழ்வு தமிழக அரசின் அறியாமை மற்றும் சுயநலத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. சீனாவில் பேனர் கலாசாரம் பெரிதாக இல்லை. பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கெல்லாம் அவரை வரவேற்று பேனர் வைக்கிறார்களா? தலைநகர் டெல்லிக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அடிக்கடி வருகிறார்கள். அவர்களையெல்லாம் வரவேற்று டெல்லியில் பேனர் வைக்கப்படுகிறதா? எதுவுமே இல்லை.

ரவி
ரவி

ஆனால், தமிழக அரசின் செயல்பாடு மிகவும் வேதனையான, சுயநலப்போக்கினைத்தான் பிரதிபலிக்கிறது. பிரதமர் மோடியைப் சந்தோஷப்படுத்துவதுதான் அவர்களது நோக்கம். இந்த விஷயத்தில், பொதுமக்கள் நலன் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருப்பதுபோல தெரியவில்லை. விளம்பரத்துக்காகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் வைக்கப்பட்ட பேனரால்தானே எங்கள் மகளைப் பறிகொடுத்தோம். சீன அதிபரையும், பிரதமர் மோடியையும் வரவேற்று வைக்கும் பேனர் மட்டும் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா?

`இருநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் வகையில் நாங்கள் வைக்கும் பேனர்கள் கீழே விழாது. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் இருக்காது' என்று தமிழக அரசால் உத்தரவாதம் வழங்க முடியுமா?

அரசியல்வாதிகள் அலட்சியமாகவும், தவறாகவும் நடந்துகொள்ளும்போது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. தற்போது மாமல்லபுரத்தில் பேனர்வைக்க அனுமதிகேட்டு தமிழக அரசு நீதிமன்றத்தில் வலியுறுத்தியபோது, நீதிபதிகள் கடுமையான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும், விடாப்பிடியாகத் தமிழக அரசு வாதாடி இறுதியில் பேனர்வைக்க அனுமதி பெற்றிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை விமர்சிக்கக்கூடாது. சாமான்ய மனிதனாக இருந்தாலும், நீதித்துறையின் உத்தரவை நான் மதிக்கிறேன்.

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

நம் தமிழகத்தில் இருப்பதுபோன்ற பேனர் கலாசாரம், வெளிநாடுகளில் இல்லை. பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கிற முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இது தெரியவில்லையா? மனம் குமுறுகிறது. ஒரே மகளைப் பறிகொடுத்து, அந்த வேதனையிலிருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை. சுபஶ்ரீயின் மரணம் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காத தமிழக அரசு, எங்களுக்கு ஆறுதல்கூடச் சொல்லவில்லை.

சுபஶ்ரீயின் மரணத்துக்கு தமிழக அரசிடம் என்ன பதில் இருக்கிறது? அதற்குக்கூட எங்கள் குடும்பத்தினர் வருத்தப்படவில்லை. ஆனால், எங்கள் வேதனையை இன்னும் உணராமல் மீண்டும் பேனர் வைக்கத் துடிக்கும் தமிழக அரசின் போக்கை என்னவென்று சொல்வது? எங்களைப் போன்ற சாமான்ய மனிதர்களின் உணர்வுகளை அரசியல்வாதிகள் உணர்வதில்லை.

கனவு நனவானது.. கனடா செல்லும் தேர்வில் தேர்ச்சி.. சுபஸ்ரீ குடும்பத்தை துரத்தும் சோகம்!

அதனால், எங்கள் இறுதி நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. நீதிபதிகளாவது சாமான்ய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; உரிய நீதியை வழங்கவேண்டும். என் மகளின் இறப்பு இயற்கையாக நிகழவில்லை. பேனர் கலாசாரத்தால்தான் சுபஶ்ரீ இறந்தாள். இந்த நிலை மற்ற எந்தப் பெற்றோருக்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஆதங்கப்படுகிறோம். எங்கள் உணர்வுக்கு எல்லோரும் மதிப்புக்கொடுங்கள்" என்றார், உருக்கமாக.