Published:Updated:

சுபாஷ் கபூர்...சஞ்சீவி... சிலைக்கடத்தலின் மூளைகளும் கண்டுபிடிக்கப்படாத சிலைகளும்! #VikatanExclusive

இந்தியாவின் பொக்கிஷ சிலைகள் பலவும் இன்னமும் வெளிநாட்டில் பதுங்கியிருக்கின்றன. தகவல்களை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் தேடப்படும் பல சிலைகள் இப்போது இருக்குமிடம் நமக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது.

முப்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் நடராஜர் சிலை கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்தடைந்தது. இதுபோன்ற பல சிலைகள், இன்னும் மீட்டுக்கொண்டுவரப்படாமல் வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் கண்ணாடிப் பெட்டிக்குள் சிரித்துக் கொண்டிருக்கின்றன. இதில் பல சிலைகள் திருடப்பட்ட சிலைகள் எனக் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்படியான சிலைகளுள் ஒன்றுதான் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து மகாவீரர் சிலை. அந்த மகாவீரர் சிலை மட்டுமல்லாது பல பொக்கிஷங்கள் கடத்தப்பட்டதற்கு மூளையாக இருந்தவன் யார்? அவை எப்படிக் கடத்தப்பட்டன, இப்போது எங்கிருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன் இந்தியாவுக்கும் சிலைக்கடத்தலுக்குமான தொடர்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Kallidaikurichi Nataraja idol
Kallidaikurichi Nataraja idol

இந்தியாவிலிருந்து மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிலைகளும் கலைப்பொருள்களும் கடத்தப்பட்டிருப்பதாக யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவிக்கிறது. அதேசமயம், தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் சிலைகளுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. தமிழகத்தில் உள்ள 36,500 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இதில் கணக்கில் வராத சிலைகள் ஏராளம்.

2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை (NCRB) சொல்கிறது. தமிழகத்தில் உள்ள 36,500 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றில் சுமார் மூவாயிரம் சிலைகள் காணாமல் போயிருப்பதாகத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கலை மற்றும் கலைப்பொருள்கள் மீதான சட்டவிரோத வர்த்தக மதிப்பு மட்டும் வருடத்துக்கு ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நடக்கிறது என்றால், சிலைக்கடத்தல் எந்தளவுக்கு இந்தியாவில் ஊடுருவியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Idols
Idols

1970-களில் தமிழகத்தில் சிலைக்கடத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவு. சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தமிழகத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு சிலைக்கடத்தல் குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. பத்தூர் நடராஜர் உள்பட பல சிலைகள் மீட்கப்பட்டது இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகுதான். சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதும் இதன் பிறகுதான்.

யார் இந்த சுபாஷ் கபூர்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுபாஷ் கபூர்

நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் `ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்' என்ற கலைக்கூடத்தை நடத்திவந்தார் சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். இந்தக் கலைக்கூடம் மூலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்குச் சிலைகளை விற்பனை செய்து வந்தார். முக்கியமான பல அருங்காட்சியகங்கள் கூட சுபாஷிடமிருந்து சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்துப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையிலான தமிழக சிலைக்கடத்தல் போலீஸாரால் 2008-ல் சஞ்ஜீவி அசோகன் என்ற சிலைக்கடத்தல் வியாபாரி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அப்போதையை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி திலகவதியால், சுபாஷ்கபூருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

Subhash Kapoor
Subhash Kapoor

இன்டர்போல் உதவியுடன் 2011-ல் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார். பொன்.மாணிக்கவேல் இந்தப் பிரிவுக்குப் பொறுப்பேற்ற பிறகு, சுபாஷ்கபூர் இந்தியா கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் ரூ.900 கோடி மதிப்புள்ள 2,900 சிலைகள் மற்றும் கலைப்பொருள்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது நடந்துவருகிறது. உலக நாடுகள் பலவற்றுள் தேடப்பட்ட குற்றவாளியைக் கைதுசெய்த தமிழக போலீஸை வியந்து பார்த்தன உலக நாடுகள். பல முறை ஜாமின் கோரி விண்ணப்பித்தும், சுபாஷ் கபூருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்திய கலைப் பொக்கிஷங்களைச் சட்டவிரோதமாக சுபாஷ் கபூர் கடத்தியதை, ஆதாரத்தோடு பிடித்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், சுபாஷ் கபூர் மீதான வழக்கு இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. அவனது முக்கிய கூட்டாளிகளான தீனதயாளன் மற்றும் சஞ்சீவி அசோகன் ஆகியோர் பிணையில் இருக்கிறார்கள்.

Mahavira Idol
Mahavira Idol
Vikatan

சஞ்சீவி அசோகன்

சஞ்சீவி அசோகனுக்கும் சுபாஷுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்று பார்ப்போம். 2008-ல் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில், ஒரு சிலை குறித்த புகைப்படமும், ஒரு தொலைபேசி எண்ணும் இருக்கிறது. அதை நூல்பிடித்து விசாரிக்க ஆரம்பித்தது சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு. அப்போதுதான் கேரளாவைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் குறித்த தகவல்கள் போலீஸாருக்குத் தெரியவருகின்றன. தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான், 2006-ல் ஶ்ரீபுரந்தான் கோயிலிலிருந்து எட்டு சிலைகளை ரத்தினம், சிவக்குமார் உள்ளிட்டவர்களைவைத்து சஞ்சீவி அசோகன் கடத்திவந்தது தெரியவருகிறது.

Thilakavathi IPS
Thilakavathi IPS

அதைத் தன்னுடைய 'நிம்பஸ் இம்போர்ட்' நிறுவனம் மூலம் சுபாஷ்கபூரின் கேலரிக்கு அனுப்புவதும் தெரியவந்தது. போலியான ஆவணங்களைத் தயார் செய்து, இதுபோல பல சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்றிருந்தான் சஞ்சீவி அசோகன். போலீஸ் தன்னைத் தேடுவதையறிந்த சஞ்சீவி கேரளாவில் தலைமறைவானான்.

பல நாள்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சஞ்சீவி கைது செய்யப்பட்டார். அவர்மீது குண்டாஸ் வழக்கும் பாய்ந்தது. சஞ்சீவி அசோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் சுபாஷுக்கும் இருந்த தொடர்பு வெட்டவெளிச்சமானது. சுபாஷ்கபூர் கைது செய்யப்பட்டார். சஞ்சீவி அசோகன் அதுவரை 34 சிலைகளை கடத்தி விற்றிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

Pon Manickavel
Pon Manickavel

கைது செய்யப்பட்ட பத்து மாதங்களுக்குப் பிறகு சஞ்சீவிக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. சுபாஷ்கபூரின் இந்தியச் சிலை வியாபாரி சஞ்சீவிதான். இன்னும் அதிக சிலைகளை அவர் விற்றிருக்க வாய்ப்பிருப்பதாக அப்போதே பலர் சந்தேகப்பட்டனர். ஆனாலும், அதை எந்தச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

சோழர்கால மகாவீரர் சிலை

சஞ்சீவி அசோகன், திருடிய சிலைகள் குறித்த விவரங்களை மின்னஞ்சல் வாயிலாகச் சிலையை வாங்குபவர்களுக்கு அனுப்புவார். அதில், சிலை குறித்த தகவலும், கோயில் குறித்த தகவலும் அடங்கியிருக்கும். அப்படி சஞ்சீவியால், சுபாஷ்கபூருக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல்தான் இன்னும் மீட்கப்படாத சிலைகுறித்து நாம் தெரிந்துகொள்ள வழிவகை செய்கிறது. நமக்குக் கிடைத்த அப்படியான ஒரு மின்னஞ்சலின் பிரதி இதோ...

Sanjeevi Asokan's Email
Sanjeevi Asokan's Email

சோழர்காலத்தைச் சேர்ந்த மகாவீரர் சிலை குறித்து அந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார். அதில் "நாகப்பட்டினம் அருகே உள்ளது தீபம்குடி. அங்கு சமணர்கள் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கான கோயிலும் உள்ளது. அங்கிருந்து இந்த வெண்கல மகாவீரர் சிலையைப் பெற்றேன். இந்தச் சிலையை ஜின்னா என்றும் சொல்கிறார்கள்.

இது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலத்துச் சிலை. இதன் அளவு 74.3 x 35.6 செ.மீ. முதலில் இதை வியர்னர் கேலரியின் நான்சி என்பவருக்கு ஐம்பதாயிரம் டாலருக்கு விற்பதாக இருந்தேன். பின்னர் அவர் அதை வாங்கவில்லை. அதன்பிறகு, தீனதயாளன், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு இதை மெயில் அனுப்பினேன். அவர்களும் வந்து சிலையைப் பார்த்துச் சென்றனர். அதன்பிறகு அவர்கள் வாங்கவில்லை. அதனால் தற்போது உங்களுக்கு இந்த மெயில் அனுப்புகிறேன்'' என்று சுபாஷ்கபூருக்கு மெயில் அனுப்பியிருந்தார் சஞ்சீவி அசோகன்.

In London Museum
In London Museum

அதன்பிறகு, இந்தச் சிலையை வாங்க ஆர்வம் கொண்டார் சுபாஷ்கபூர். இந்தியத் தொல்பொருள் சட்டத்தின் அடிப்படையில், நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகளை விற்கக்கூடாது. அதனால், போலியாக ஓர் ஆவணம் தயாரானது. 'இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் 1970-ல் அதை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அப்துல்லா மெஹபூபா என்பவருக்கு விற்றதாக போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு, சுபாஷ் கபூர் கேலரிக்குச் சென்றடைகிறது இந்த மகாவீரர் சிலை.

அப்துல்லா மெஹபூபா என்பவர் சுபாஷின் தோழி. அவர்தான் சுபாஷூக்கு போலி ஆவணம் தயாரிப்பதில் ஆரம்பத்தில் உறுதுணையாக இருந்தவர். பின்னர் அவரே சுபாஷுக்கு எதிராகவும் மாறினார். சுபாஷ் கபூரை வந்தடைந்த இந்தச் சிலை சில காலம் அவரது கேலரியில் இருந்தது. அப்போது, அதைப் புகைப்படம் எடுத்து வைத்தார் சுபாஷ். பின்னர் அந்தச் சிலையை அமெரிக்கர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அந்த அமெரிக்கர், லண்டனில் நடைபெற்ற ஒரு சிலைக் கண்காட்சிக்கு இந்தச் சிலையை அனுப்புகிறார். அந்தச் சிலை குறித்து, கண்காட்சி வெளியிட்ட சிலை அட்டவணையிலும் மகாவீரர் சிலை இடம்பிடித்தது. அவர்கள் வெளியிட்ட சிலையும், சுபாஷ்கபூர் கேலரியில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த சிலையும் ஒன்றுபோல் இருப்பது நமக்குத் தெரியவந்தது. பின்னர், இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து சிலை குறித்த அனுபவம் வாய்ந்த தன்னார்வலர்களிடம் பேசியபோது அவர்களும் இவை இரண்டும் ஒரே சிலை என்று தெரிவித்தனர்.

Fake Documents
Fake Documents

சுபாஷ்கபூர் வழக்கு நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சுபாஷ் கபூரின் மின்னஞ்சலில் சிலை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததை, நியூயார்க் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில் பொதுவெளியில் வெளியிட்டது. பொதுவெளியில் வெளியிடப்பட்ட ஒரு மின்னஞ்சல் மூலம் இத்தனை தகவல்களை ஆராய்ந்து, அது சோழர்கால சிலைதான் என்பதை, சிலைகளை மீட்டுக்கொண்டுவரப் போராடும் தன்னார்வலர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. சுபாஷ்கபூரின் மின்னஞ்சலில் இருக்கும் தகவல்களை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் தேடப்படும் பல சிலைகள் குறித்த தகவல்கள் போலீஸுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதேசமயம், இதுபோன்ற திருடப்பட்ட சிலைகளை வாங்கும் நோக்கில் செயல்பட்ட வியர்னர் கேலரியின் நான்சி, தீனதயாளன், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும். இந்தச் சிலைக்கடத்தலின் மூளையாக இருந்த சஞ்சீவி அசோகன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். பின்னர், வீரவநல்லூர் சிலை வழக்கில் கடந்த 2018-ல் பொன்.மாணிக்கவேலால் கைது செய்யப்பட்டார் சஞ்சீவி.

Mahavira Idol
Mahavira Idol

பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இரண்டுமுறை கைது செய்யப்பட்ட சஞ்சீவியைத் தீவிரமாக விசாரித்தும், இதுவரை அவன் சொன்ன தகவலின் அடிப்படையில் நாம் எத்தனை சிலைகளை மீட்டிருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சிலை சென்ற வழிகளைக் கண்டறிய வேண்டும். கடவுள்களைக் கடத்திய இந்தத் தலைகளை இன்னும் இறுக்கினால் கண்டுபிடிக்கப்படாத சிலைகளை நாம் நெருங்க முடியும்.

`கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது' என்பார்கள். இந்த சிலைகளை இங்குள்ள மக்கள் கடவுளாகப் பார்க்கிறார்கள். இத்தகைய கடவுள்களைக் கடத்தியவர்கள் எவ்வளவு பெரிய தலையாக இருந்தாலும் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கீழிறக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இந்தச் சிலைகள் நம்பண்பாட்டின் கலாசாரத்தின் அடையாளம். நம் உணர்வுகளில் கலந்து போன, நம் நினைவுகளில் கலந்து மறைந்து போன காலத்தின் கண்ணாடி. அவற்றை மீட்டுக் கொண்டு வந்து சிலைகளுக்கு நம் மண்ணில் உயிர்கொடுக்க வேண்டியதும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் கடமை. உயிர்பெற வேண்டியது சிலைகள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட இந்தத்துறையும்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு