Published:Updated:

மும்பை: குற்ற வழக்கில் தேடப்பட்டுவரும் முன்னாள் போலீஸ் கமிஷனரைக் கைதுசெய்ய சுப்ரீம் கோர்ட் தடை!

கடந்த சில மாதங்களாக, தலைமறைவாக இருக்கும் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கைக் கைதுசெய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த பில்டர்கள், போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் தங்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் பரம்பீர் சிங் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் மும்பை போலீஸார் கோர்ட் மூலம் பரம்பீர் சிங்கைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டிருக்கின்றனர். இதையடுத்து தன்னைக் கைதுசெய்யத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது பரம்பீர் சிங் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தால் மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்

இதையடுத்து இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. பரம்பீர் சிங் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தன் மனுதாரர் இந்தியாவில்தான் இருக்கிறார். கோர்ட் உத்தரவிட்டால் சி.பி.ஐ முன்பு 48 மணி நேரத்தில் ஆஜராகத் தயாராக இருக்கிறார். அவர் தலைமறைவாக இல்லை. தப்பி ஓடவும் விரும்பவில்லை. மகாராஷ்டிராவுக்குள் நுழைந்தால் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பது உண்மை. எனவே, அவரைக் கைதுசெய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்காக அவர் தவறு செய்யவில்லை என்று கூற விரும்பவில்லை. நீதித்துறையின் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே கைதுசெய்யத் தடை விதிக்க வேண்டும். மனுதாரர் மூத்த போலீஸ் அதிகாரி. அவர் எங்கும் ஓடிவிட மாட்டார். என் மனுதாரர் பதவியிலிருந்தபோது மிரட்டிப் பணம் பறிப்பவர்கள், சூதாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அவர்கள்தான் இப்போது புகார் செய்கின்றனர். நடவடிக்கை எடுத்த ஒவ்வொருவரும் புகார் செய்தால் என்ன செய்வது" என்று வாதிட்டார்.

இதையடுத்து பரம்பீர் சிங்கைக் கைதுசெய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததோடு, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. பரம்பீர் சிங் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்தவுடன் மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது லஞ்ச ஊழல் குற்றம்சாட்டி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். அதிலிருந்து பரம்பீர் சிங் பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்துவருகிறார் என்று கூறப்படுகிறது.

மும்பை: `பரம்பீர் சிங் ரூ.10 கோடி கேட்டார்’ - தொடரும் புகார்கள்.. கைது செய்ய மாநில அரசு தீவிரம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு