Published:Updated:

தப்ரஸ் அன்சாரி கொலை வழக்கு! எஸ்.பி. சொல்வது என்ன?

Tabrez Ansari and his wife
Tabrez Ansari and his wife

தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நாட்டின் பிரதமர் கண்டித்த சம்பவத்திலேயே, குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீஸார் முயல்வது எந்த விதத்தில் நியாயம் என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஜூன் 22-ம் தேதி ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று அதிர்ச்சி தரக்கூடிய ஒரு காட்சியை ஒளிபரப்பியது. இளைஞர் ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்துச் சுற்றி நின்ற கும்பல் கடுமையாகத் தாக்குகிறது. இடையில் அந்த இளைஞரிடத்தில், `ஜெய் ஸ்ரீராம்' `ஜெய் ஹனுமான் ' என்று கோஷமிடுமாறு கூறுகிறது. இளைஞரின் ஓலத்தைக் கேட்டு மனதிலும் ஈரம் சுரக்கவில்லை. ரத்தம் சொட்டச்சொட்ட அந்த இளைஞர் கும்பலிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். கிஞ்சித்தும் இரக்கம் காட்டாத கும்பல், கம்புகளாலும் கட்டைகளாலும் தாக்கி இளைஞரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டது. பின்னர், போலீஸாரிடத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். ஈவு இரக்கமற்ற கும்பலிடம் சிக்கி அடி வாங்கிய இளைஞரின் பெயர் தப்ரஸ் அன்சாரி. ராஞ்சியைச் சேர்ந்தவர். தப்ரஸ் அன்சாரிக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தன. புனே நகரில் வெல்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஈத் பண்டிகையை மனைவியுடன் கொண்டாட மீண்டும் ராஞ்சி சென்றவரின் கதை பரிதாபத்தில் முடிந்தது.

Tabrez Ansari
Tabrez Ansari

கடந்த ஜூன் 17-ம் தேதி ஜார்க்கண்டில் ராஞ்சி நகரத்துக்கு அருகிலுள்ள மாவட்டத்திலுள்ள (ஷரேகெலா-கர்ஷவான்) கட்கிதி என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தாக்கப்பட்ட 5 நாள்களுக்குப் பிறகு, ஜாம்ஷெட்பூர் டாடா மருத்துவமனையில், அன்சாரி இறந்த பிறகே தொலைக்காட்சிகளில் பதைபதைக்கும் இந்த காணொலி வெளியாகி மனதை நொறுங்கச் செய்தது. கட்கிதி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டு, 11 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்கு பதியப்பட்டது. அதாவது, `கொலை செய்யும் எண்ணத்துடன் தாக்கினர்' என்ற பிரிவின் கீழ் முதலில் வழக்கு பதிகிறார்கள். இதற்கிடையே, அன்சாரி கட்கிதி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிள் திருடச்சென்றதாக போலீஸார் அவரிடத்தில் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

சிறையில் இருந்தபோது அவரின் வாக்குமூலம் பதியப்பட்டது. கட்கிதி கிராமத்தில் ஒரு வீட்டில் மோட்டார் சைக்கிளை திருடியபோது பிடிபட்டதாக போலீஸாரிடத்தில் அன்சாரி வாக்குமூலம் கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்சாரி மீது நடத்தப்பட்ட ஈவு இரக்கமற்ற தாக்குதல் குறித்து அவரிடத்தில் எந்த வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்யவில்லை. உச்சக்கட்டமாக, செப்டம்பர் 10-ம் தேதி இந்த வழக்கில் மற்றொரு கொடூரமும் நடந்தது. அதாவது, அன்சாரியின் முதல் உடல்கூறு ஆய்வறிக்கையின்படி, அன்சாரிக்கு `கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டு இறந்துள்ளதாகச் சொல்லப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் கைதானவர்கள் மீது பதியப்பட்ட 302-பிரிவை நீக்கிவிட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 304-ன் கீழ் வழக்கு பதிந்தார்கள். இந்தச் சட்டம், 'உள்நோக்கத்துடன் கொலை செய்யவில்லை' என்று சொல்கிறது, இதனால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சத் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவானது.

Tabrez Ansari Mob Lynching
Tabrez Ansari Mob Lynching

போலீஸாரின் இந்தச் செயல் தப்ராஸ் அன்சாரியின் உறவினர்களைக் கொந்தளிக்க வைத்தது. அன்சாரியின் மனைவி பர்வீன், தன் தாயாருடன் ஷரேகெலா மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டார். `தன் கணவர் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்மீது கொலை வழக்கு பதியவில்லையென்றால் எஸ்.பி அலுவலகத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன்' என்று பர்வீன் ஆவேசமடைந்து சொன்னதாக வட இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. தொடர்ந்து, மற்றொரு மருத்துவக் குழுவினரிடத்தில் அன்சாரியின் உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய ஒப்படைக்கப்பட்டது. அதாவது, ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் 5 துறைத் தலைவர்கள் முன்னிலையில், அன்சாரியின் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.

இரண்டாவது உடற்கூறு ஆய்வு முடிவில், "தப்ரஸ் அன்சாரி கார்டியாக் அரெஸ்ட்டால் இறந்தது உண்மைதான். ஆனால், கம்புகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கை எலும்புகள் முறிந்துள்ளன. உள்ளுறுப்புகள், இதயப்பகுதி பாதிக்கப்பட்டதால், அன்சாரிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது'' என்று சொல்லப்பட்டது. அதாவது, கிராமத்தினர் தாக்கியதாலேயே அன்சாரிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. நாடே பார்த்த சம்பவம் என்பதால், எம்.ஜி.எம் மருத்துவமனையின் 5 துறைத்தலைவர்களும் உடற்கூறு ஆய்வறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, கொலை வழக்குப்பிரிவை நீக்கப்பட்ட எட்டே நாள்களில் மீண்டும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷரெகெலா மாவட்ட எஸ்.பி. கார்த்திக்
ஷரெகெலா மாவட்ட எஸ்.பி. கார்த்திக்

தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நாட்டின் பிரதமர் கண்டித்த சம்பவத்திலேயே, குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீஸார் முயல்வது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

சம்பவம் நடந்த ஷரேகெலா மாவட்டத்தின் எஸ்.பியாக இப்போது இருப்பவர், சென்னையைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திக். அவரிடம் நாம் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம்...

"இந்தச் சம்பவம் ஜூன் 17-ம் தேதி இரவு நடந்தது. அப்போது, நான் இங்கு எஸ்.பியாக இல்லை. நான் ஜூன் 21-ம் தேதிதான் இங்கே பதவியேற்றேன். இந்தச் சம்பவத்தில் போலீஸார் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. போலீஸார் சம்பவ இடத்துக்கு சற்று தாமதமாகச்சென்றது உண்மைதான். அன்சாரி தாக்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன், ஷரேகெலாவில் சந்தைப்பகுதியில் நக்ஸலைட்டுகள் தாக்கியதில் 5 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இறந்துபோனார்கள். அதனால், `ஏதாவது சம்பவம் நடந்தால் உறுதி செய்துகொண்டு செல்லவும்' என்று போலீஸாருக்கு ஸ்டேண்டிங் ஆர்டர் போட்டிருந்தோம். இதன் காரணமாகவே போலீஸார் அங்கு செல்ல காலதாமதமானது. எனினும், பணியில் அஜாக்கிரதையாக இருந்த இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால், வீடு ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடியபோதுதான் அன்சாரி பிடிபட்டுள்ளார். அவருடன் வந்த மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர். எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, பெரிய அளவில் வெளிக்காயங்கள் இல்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, ஷரேகெலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜூன் 19-ம் தேதி அவரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். அப்போதெல்லாம் நன்றாகவே இருந்தார். ஜூன் 22-ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்தவரை, டாடா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே அவர் இறந்துபோனார்.

`11 பேர்தான் கொன்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!' - அன்சாரி கொலையில் போலீஸ் புதுத் தகவல்

முதல் உடற்கூறு ஆய்வறிக்கையில், `கார்டியாக் அரெஸ்ட்டால் இறந்தார்’ என்று சொல்லப்பட்டாலும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, அவரை தாக்கியவர்கள் ஜாமீன் வாங்க முயன்று கொண்டிருந்தனர். அதைத் தடுக்கவே, அவசரம் அவசரமாக முதல் குற்றப்பத்திரிகையில் 304-பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு ஜூலை 27-ம் தேதி தாக்கல் செய்தோம். இரண்டாவது உடற்கூறு ஆய்வில், மக்கள் தாக்கியதாலேயே அன்சாரிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரிவு 302-ன்படி கொலை வழக்காக மாற்றியுள்ளோம். கைது செய்யப்பட்ட 13 பேர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. முதலில் தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்ட வீடியோவை அவர்கள் குடும்பத்தினர் எங்களுக்குக்கொடுக்க மறுத்தனர். தற்போது, நாங்கள் இந்த வழக்கைச் சரியாக கையாண்டு வருவதாக, அவரின் மனைவி என்னைச் சந்தித்து நன்றி கூறினார். இதுதான் உண்மை!" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு