ஈரோட்டில் பெற்ற தாயே தன் 16 வயது மகளைக் கட்டாயப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து சிறுமியின் தாய், அவர் வளர்ப்பு தந்தை, கருமுட்டை விற்பனை சம்பந்தமான பெண் புரோக்கர் ஒருவர், சிறுமிக்குப் போலியான ஆதார் அட்டையைத் தயாரித்துக் கொடுத்த இளைஞர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து காப்பகத்தில் தங்கவைக்கப்பட்ட சிறுமி, சிறையிலிருக்கும் நபர்களுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று, இந்த விவகாரத்துக்கென அமைக்கப்பட்ட சென்னை மருத்துவர்கள் குழு விசாரணை செய்தது.

அந்த மருத்துவர்கள் குழு கொடுத்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், செய்தியாளர்களைச் சந்திந்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறார். மருத்துவக்குழுவினர் கொடுத்திருக்கும் விசாரணை அறிக்கையில், சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் கொடுக்கப்பட்டிருப்பது, போலியான ஆதார் அட்டை எனத் தெரிந்தும் மருத்துவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பது, கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படாதது போன்றவை தெரியவந்திருக்கின்றன. மேலும், ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, திருப்பதி மருத்துவா டெஸ்ட் டியூப் பேபி சென்டர் ஆகிய ஆறு மருத்துவமனைகள் ஏ.ஆர்.டி சட்டம் (2021), ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு மருத்துவச் சட்டங்களை மீறி செயல்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து, ``சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்த மருத்துவமனைகள் செயல்பட்டிருப்பது நிரூபணமானதால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டர்கள் உடனடியாக மூடப்படுகின்றன. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளாக செயல்படும் ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள், இந்தத் திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றன. இன்று முதல் 15 நாள்களுக்குள் மேற்கூறிய நான்கு மருத்துவமனைகளிலும் இருக்கும் உள் நோயாளிகளை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட நான்கு மருத்துவமனைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.