Published:Updated:

`விகடன் நிருபர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுங்கள்!‍' -கொந்தளிக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்

விகடன்
விகடன்

`விகடன் செய்தியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார் கனிமொழி எம்.பி.

`இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தொடர்பாகச் செய்தி சேகரித்த விகடன் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் நான்காவது தூணைக் காப்பாற்றுங்கள் என்றும் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் மன்றத்தினர் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

விகடன்
விகடன்

தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை குறித்து எவ்விதமான குறிப்புகளும் இல்லை என்பது தமிழகத்தில் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் கருத்தை, உணர்வுகளை அறிந்து வெளியிடுவது ஊடகங்களின் கடமையும் உரிமையுமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சென்று செய்தி சேகரிக்கும் பணியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 27-12-2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களிடம், தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகக் கருத்தறிய சென்ற ஜூனியர் விகடன் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் ஆகிய இருவர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் 3 பிரிவுகளின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்.பி, ` ஊடகங்களை மிரட்டும் நோக்கோடு, கன்னியாகுமரியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சென்று பேட்டியெடுத்த ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் எடப்பாடி அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில், ஊடகங்களின் மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள், கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். உடனடியாக ஊடகத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளன தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர் மன்றங்கள்.

புதுச்சேரி மாநில செய்தியாளர்கள் சங்கம்."போலீஸாரிடன் இச்செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. இந்த செயல் அச்சத்தின் காரணமாக இருட்டை கண்டு பயந்து தனது நிழலையே தடியை கொண்டு தாக்கும் செயலுக்கு ஒப்பானது ஆகும். ஊடகத்தை கண்ணாடியாக பார்த்து தனது முகத்தை சரிசெய்து கொள்வது தான் ஆளுமைக்கு அழகு. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு அதை ஜனநாயக ரீதியாக பதிவு செய்வது தான் ஊடகத்தினரின் கடமையும், பணியும் ஆகும் இதில் வரும் விமர்சனங்களுக்கு உரிய பதிலையும், சகிப்புதன்மையையும் கையாள்வது தான் ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கியமான செயல். அதை விடுத்து யாரையோ திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக ஊடகத்தினரின் குரல்வலையை நெரித்து உலைவைக்கும் தமிழக அரசின் நிலைப்பாடு மிகவும் வேதனைக்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஊடகத்தை கண்ணாடியாக பார்த்து தனது முகத்தை சரிசெய்து கொள்வது தான் ஆளுமைக்கு அழகு.

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம்: அரசின் திட்டம் குறித்து யாருமே கருத்துச் சொல்லக் கூடாது என்ற எண்ணம் அரசுக்கும் நல்லது அல்ல. இந்திய ஜனநாயகத்துக்கும் எவ்விதத்திலும் ஏற்றதும் அல்ல என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் பிரதான கடமை. இச்செயலை அழுத்திச்சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. மீண்டும் ஒரு எமர்ஜென்சி காலம் வந்துவிட்டதோ என்னும் அளவுக்குச் சமீபநாள்களாக ஊடகங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் அதிகரித்துவிட்டன.

விகடன்
விகடன்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் : கடந்த பல ஆண்டுகளாக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் சென்று செய்தி சேகரிக்கும் பணியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தானே ஊடகத்தின் வேலை. இதில் என்ன தவறு இருக்கிறது. இருவர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் வேலை. பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு அனைத்துவகையிலும் துணை நிற்போம்.

தஞ்சை மாவட்டப் பத்திரிகையாளர் சங்கம் :

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இச்செயல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அத்துடன் ஈழத்தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தமிழக அரசு முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

Special Police
Special Police

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் : தமிழக அரசின் இத்தகைய செயல் பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். இது பத்திரிகையாளர்களுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெறவேண்டும்.

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் : குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு ஆகியவற்றை ஜனநாயகரீதியாகப் பதிவு செய்வதுதான் ஊடகத்தின் கடமையும் தலையாய பணியும் ஆகும். தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

மதுரை பத்திரிகையாளர் சங்கம் : தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவது ஆபத்தானது. அத்துடன் ஈழத்தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தமிழக அரசு முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

நெல்லை பத்திரிகையாளர் மன்றம் : அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து மக்களின் கருத்தைக் கேட்டு வெளியிடுவது செய்தியாளர்களின் கடமை. அந்த வகையில் தனது கடமையைச் செய்த செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞரை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் மீது தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்பதுடன் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகையின் குரல்வளையை நெரிக்கும் செயல் .

விகடன்
விகடன்

கன்னியாகுமரி பத்திரிகையாளர் மன்றம் : வழக்குக் கொடுமையைப் பார்க்கும்போது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தைப் போல வாய்ப்பூட்டு போடும் சட்டத்தைக் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர் எனக் கருதுகிறோம். இந்த வழக்கு கருத்துரிமைக்கு எதிரான செயல்.

நாகர்கோவில் பிரஸ் கிளப் : இது பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகக் கருதுகிறோம். தமிழக அரசு இந்த வழக்குகளை திரும்பப்பெறவேண்டும்.

ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் : அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் மட்டுமல்லாது நிறைவேற்றப்படும் சட்டங்களில் உள்ள சாதக - பாதகங்களின் உள்ளார்ந்த நிலையினை நாட்டு மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துச் சொல்லும் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கோவை பிரஸ் கிளப்
கோவை பிரஸ் கிளப்

காரைக்குடி பத்திரிகையாளர் மன்றம் : குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு ஆகியவற்றை ஜனநாயகரீதியாகப் பதிவு செய்வதுதான் ஊடகத்தின் கடமையும் தலையாய பணியும் ஆகும். தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. காவல்துறையின் இத்தகைய போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், இருவர் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறவும் வலியுறுத்துகிறோம்".

அடுத்த கட்டுரைக்கு