Published:Updated:

`குவார்ட்டர் 500 ரூபாய்; சோளக்கொல்லையில் மதுபாட்டில்'‍- சிசிடிவியால் சிக்கிய டாஸ்மாக் சூப்பர்வைசர்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

குவார்ட்டரின் விலை 500 ரூபாய் வரை போவதால் நன்றாகச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து களமிறங்கியுள்ளனர்.

பெரம்பலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீஸாரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக சோளக்கொல்லையில் மறைத்து வைத்து நூதன முறையில் விற்பனை செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுக்கடை
மதுக்கடை
மாதிரி படம்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 6-ம் தேதி இரவு பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள உப்போடை காட்டுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் கொள்ளை போனது.

இதுகுறித்து கடையின் ஊழியர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீஸார் மோப்ப நாய்கள் சென்ற தடயங்களை வைத்தும் கோனேரிப்பாளையம் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும், விவசாய நிலத்தில் அறுவடைப் பணிகள் முடிந்த பிறகும் அப்பகுதியில் சோளத்தட்டைகள் குவியல் குவியலாக இருந்துள்ளன. அதில் 28 பாக்ஸ்களுக்கும் மேல் மதுபானப் பெட்டிகள் இருந்தன. அதனைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தவுடன் மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வேந்திரன், விற்பனையாளர், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த அழகுவேல், முத்துசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் மக்காச்சோள வயலில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 8 நபர்கள் மீதும் வழக்குப் பதிந்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

வழக்கை விசாரித்து வந்த போலீஸாரிடம் பேசினோம். ``பல பகுதிகளில் ஒரு குவார்ட்டரின் விலை 500 ரூபாய் வரை போவதால் நல்லா சம்பாதிக்கலாம் என முடிவு செய்து இவர்கள் களறங்கியிருக்கிறார்கள். கடந்த 2 நாள்களுக்கு முன்புதான் இந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கொள்ளை போனது குறித்து விசாரித்து வந்தோம்.

இந்த நிலையில் கோனேரிபாளையம் என்ற கிராமத்தில் விவசாய அறுவடை முடிந்தும் விவசாய நிலத்தில் சோளத்தட்டை குவியல் குவியலாக இருந்தது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பெயரில் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது பாக்ஸ் பாக்ஸாக மதுபான பாட்டில்கள் இருந்தன. இதனை யார் கொண்டுவந்து வைத்தது என்று நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அந்தக் கடையின் சூப்பர்வைசர் அடிக்கடி வந்துசென்றது தெரியவந்தது.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

அவரைப் பிடித்து விசாரித்தபோது எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். வீட்டில் வைத்து சரக்கு விற்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால் ஊரோட எல்லைப் பகுதியில் வைத்துவிட்டனர். ஆனால் சிசிடிவி காட்சியால் சிக்கிக் கொண்டனர்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு