Published:Updated:

ஈரோடு: `1098’ சைல்டு ஹெல்ப்லைனுக்கு வந்த அழைப்பு! - பாலியல் புகாரால் சிக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் திருமலைமூர்த்தி
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் திருமலைமூர்த்தி

சென்னை, கோவை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு எதிராக மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், ஈரோட்டிலும் அப்படியான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு, கூட்டுறவு நகரைச் சேர்ந்த திருமலைமூர்த்தி (50) என்பவர் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர்மீது பள்ளி மாணவிகள் சிலர், `திருமலைமூர்த்தி சார் ஒரு மாதிரி அசிங்கமா தொட்டுத் தொட்டு பேசுறாரு. டபுள் மீனிங்கா அவர் பேசுறதைக் கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ப்ளீஸ் சார், அவர் மேல விசாரணை செஞ்சு நடவடிக்கை எடுங்க!’ என சைல்டு ஹெல்ப்லைன் 1098 மூலமாக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஞானசேகரன், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்து, நடந்த சம்பவம் குறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் வெளியே கசிய, சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் தகவல் தீயாகப் பரவியது.

பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை

அதையடுத்து ஈரோடு எஸ்.பி சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி, பெருந்துறை உதவி காவல் காண்காணிப்பாளர் கெளதம் கோயல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக போலீஸார், அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். அதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஆசிரியர் திருமலைமூர்த்தி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்தது உறுதியாகியுள்ளது. அதனால், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் திருமலைமூர்த்தியை கைதுசெய்தனர்.

நாமக்கல்: `சிறார் வதை வீடியோ பதிவுகள்; 9 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ ரெய்டு, விசாரணை!'

இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்திருந்தபோதும், தலைமையாசிரியர் இந்த விவகாரத்தைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்திருக்கிறாராம். அதையடுத்து ‘பாலியல் புகார் குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளியின் தலைமை ஆசிரியரையும் கைதுசெய்ய வேண்டுமென’ மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பள்ளியின் தலைமையாசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார்.

``என் சாவுக்கு அந்த 3 பேர் தான் காரணம்!" - கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி

இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``பாலியல்ரீதியாகத் துன்புறுத்தல் நடந்ததாக மூன்று மாணவிகள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை மூன்று மாணவிகளில் ஒருவர்கூட இத்தனை நாளாக பெற்றோர்களிடம் சொல்லாமலேயே இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவிகளின் நண்பர்கள் மூலமாகவே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. விசாரித்த வரையில் இன்னும் சில பெண்கள் ஆசிரியர்மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ளனர். விசாரணையின் முடிவில்தான் எத்தனை பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என்பது தெரியவரும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு