Published:Updated:

`என்ன செய்யணுமோ செய்யுங்கள்!’- கமிஷனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சந்திரசேகர ராவ் #DishaCase

என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்
என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்

பெண் மருத்துவர் கொலைவழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் திஷா கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். திஷா கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடித்துக் காட்டியபோது, நான்கு பேரும் தப்பி ஓட முயன்றதால் போலீஸாரின் துப்பாக்கி அவர்களின் உயிரைப் பறித்துள்ளது.

நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மக்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. என்கவுன்டர் ஒரு தீர்வாகாது எனவும், இதுபோன்ற கோரச் செயல்களுக்கு இதுவே சரியான தண்டனை எனவும் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

இந்தநிலையில், பலர் சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, திஷாவின் வீட்டுக்கு ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். ஆனால், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசகேர ராவ் இதுவரை செல்லவில்லை.

`திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வரால் முடிகிறது. நாட்டையே உலுக்கிய கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் அளிக்க முதல்வரால் முடியவில்லையா?' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

திஷா கொலை வழக்கை கையாள்வது குறித்து தொடர்ந்து சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனாரிடத்தில் சந்திரசேகர ராவ் விவாதித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்போது, `நான் திஷாவின் வீட்டுக்குச் செல்லும்போது அவரின் பெற்றோர் மனம் சாந்தம் அடைந்திருக்க வேண்டும்... என்ன செய்யணுமோ செய்யுங்கள்...!' என்று சந்திரசேகர ராவ் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, `குற்றவாளிகளை நடித்துக்காட்டுவதற்காக அதிகாலை நேரத்தில் போலீஸார் அழைத்துச் செல்கிறார்கள் என்றால் முடிவு இதுவாகத்தான் இருக்கும்' என காவல்துறை வட்டாரத்தில் பேசப்படும். திஷா கொலைக் குற்றவாளிகளுக்கும் இதுதான் நடந்திருக்கிறது.

சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார்
சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார்

என்கவுன்டர் நடந்த இடத்தை கமிஷனர் சஜ்ஜனார் இன்று பார்வையிட்டார். சைபராபாத் கமிஷனராக உள்ள சஜ்ஜனார் அதிரடிக்குப் பெயர் போனவர். வாரங்கலில், இவர் எஸ்.பி-யாக இருந்தபோது, கல்லூரி மாணவி ஷ்வப்னிகா மீது ஆசிட் வீசிய ஸ்ரீனிவாஸ், ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்ஸலைட் நயாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதும் இவர் சிறப்புப்படை ஐ.ஜி-யாக இருந்தபோதுதான். தற்போது, திஷா கொலையாளிகள் என்கவுன்டரையடுத்து, சஜ்ஜனாருக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. `மூர்க்கத்தனம் கொண்டவர்களுக்கு மூர்க்கத்தனமே பரிசாக கிடைத்திருக்கிறது' என்றும் `இந்தச் சம்பவம் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது' எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு