Published:Updated:

நிலம் தொடர்பாக வாக்குவாதம்! - தெலங்கானா பெண் தாசில்தாரை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞர்

தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயா ரெட்டி
விஜயா ரெட்டி

தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராகப் பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி. இவர், இன்று வழக்கம்போல் தனது பணிகளைக் கவனித்து வந்தார். மதியம் 1.40 மணியளவில் தாசில்தார் விஜயா தனது அறையில் இருந்து தீப்பிழம்புகளுடன் வெளியே ஓடிவந்தார். விஜயாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றுங்கள் என விஜயா கூச்சலிட்டபடி வராண்டாவில் விழுந்தார். இதைக் கண்ட அலுவலகப் பணியாளர்கள், விஜயாவின் உடலில் இருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. விஜயா சம்பவ இடத்திலே உடல் கருகி உயிரிழந்தார். இந்தத் தகவல் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விஜயாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்காயம்
தீக்காயம்

அங்கு பணியில் இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தாசில்தார் விஜயாவின் அறைக்குக் கடைசியாக சுரேஷ் என்பவர் சென்றதாகக் கூறியுள்ளார். உடனடியாக சுரேஷை தேடியுள்ளனர். தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த சுரேஷை காவலர்கள் மடக்கிப்பிடித்தனர். சுரேஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 அடி ஆழம்; ஆழ்துளையில் தலைகீழாக விழுந்த 5 வயது சிறுமி!- கண்கலங்க வைத்த 14 மணிநேர மீட்புப் பணி

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ``சுரேஷ் சொந்தமாக அவரது கிராமத்தில் 7 ஏக்கரில் நிலம் வைத்திருக்கிறார். அந்த நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தத்தான் சுரேஷ், தாசில்தார் அலுவலகம் வந்துள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்துள்ளார். சுமார் 1 மணிக்கு மேல் சென்றுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே தாசில்தாரை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். சுரேஷ் 60 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எவ்வாறு அலுவலகத்துக்குள் நுழைந்தார். யாருடைய தூண்டுதலின்பேரிலாவது இப்படிச் செயல்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

தாசில்தார்
தாசில்தார்

தெலங்கானா மாநிலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் நடப்பதாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

சுரேஷ் நிலம் மீதான ஆவணங்களில் சில குளறுபடிகள் இருந்துள்ளன. இதுதொடர்பாக அவர் நீதிமன்றம் சென்று ஆணை பெற்றபிறகும், அதிகாரிகள் அந்தப் பிழையை நீக்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது. நிலம் தொடர்பான அவரது ஆவணங்களை சரிசெய்யவில்லை என்கிறார்கள். இதுதொடர்பாக அவர் பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து சென்றதாகவும் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.