Published:Updated:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. வாணியம்பாடி மாணவன் வெளிநாடு தப்பி ஓட்டம்?

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சிக்கிய, வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவன் வெளிநாடு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக, அந்த மாணவனின் தந்தையை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். 

மாணவன் முகமது இர்ஃபான்
மாணவன் முகமது இர்ஃபான்

‘நீட்’ நுழைவுத் தேர்வில், வேறு மாணவன் மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய தேனி மருத்துவக் கல்லூரி மாணவரான சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சமீபத்தில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில மாணவர்கள் சிக்கினர். 

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி

இந்த நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும், வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்ற மாணவரும்,  ‘நீட்’ தேர்வில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. மாணவனின் சான்றிழை ஆய்வுசெய்யக் கல்லூரி நிர்வாகம், அவரை நேரில் ஆஜராகுமாறு போனில் அழைத்தது. இதனிடையே, கல்லூரிக்குச் செல்லாமல் மாணவன் இர்ஃபான் திடீரென மாயமானார்.

இதையறிந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், இன்று மாலை வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் உள்ள இர்ஃபான் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லை. மொரீசியஸ் நாட்டுக்கு மாணவன் தப்பிச்சென்றதாக தகவல் தெரிந்தது. இதுதொடர்பாக, முகமது இர்ஃபானின் தந்தை முகமது சஃபியை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணவன் முகமது இர்ஃபான்
மாணவன் முகமது இர்ஃபான்

இதுபற்றி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் முருகனிடம் பேசினோம். ‘‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா சிக்கியதை தொடர்ந்து எங்கள் கல்லூரி உள்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திலிருந்து மெயில் வந்தது. அதில், 2019-ல் சேர்ந்த மாணவ-மாணவிகளின் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ உள்பட அனைத்துக் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ‘நீட்’ தேர்வு தொடர்பான ஆவணங்களை அந்தந்த மாணவ-மாணவிகளின் முன்னிலையிலேயே நேரடி ஆய்வுக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2019-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளைச் சோதனைக்கு ஆஜராகுமாறு போனில் தகவல் கொடுத்தோம். கடந்த 20-ம் தேதி, 99 பேர் நேரில் ஆஜரான நிலையில் வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இர்பாஃன் என்ற ஓர் மாணவன் மட்டும் வரவில்லை. நாங்கள் விசாரணை நடத்தியதில், விடுதி கல்லூரியில் தங்கிபடித்த அந்த மாணவன் கடந்த 7-ம் தேதியே உடல்நல பிரச்னை காரணமாக வீட்டுக்குச் செல்வதாக சக மாணவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். 

முகமது இர்ஃபானின் தந்தை முகமது சஃபி
முகமது இர்ஃபானின் தந்தை முகமது சஃபி

அதன்பிறகு, அவர் கல்லூரிக்கு வரவில்லை. இந்த நிலையில், நேரில் ஆஜராகுமாறு அவருக்குப் பதிவு தபால் அனுப்பியிருக்கிறோம். நாளைக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம். இதனிடையே, மாணவன் முகமது இர்பாஃன் ‘முறைகேடு செய்துதான் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்’ என்று எங்களுக்கு மெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு அனுப்பிவிட்டோம்’’ என்றார்.