ஈரோடு, சூரம்பட்டி, நியூ டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடேசன் (65). இவர் மனைவி மல்லிகா (60). நடேசன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஈரோடு நீர் மின் மண்டல சிவில் பிரிவில் முதன்மை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், நடேசன் பணிபுரிந்து வரும் ஈரோடு ஈவிஎன் சாலையிலுள்ள மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம், சூரம்பட்டி, நியூ டீச்சர்ஸ் காலனியிலுள்ள நடேசனின் இல்லம் ஆகிய இடங்களில் கடந்த 2008-ம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையின்போது அவரது அலுவலகம், வீட்டிலிருந்து ஏராளமான நகைகளும், பணமும், வங்கி லாக்கரின் சாவியும் கைப்பற்றப்பட்டது.

வங்கி லாக்கரைத் திறந்து சோதனை செய்ததில், அதில் ரூ.86,50,000 இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதனைக் கைப்பற்றினர். இதுபோக 100 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கான ஆவணங்களையும் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருந்தார்.
மொத்தத்தில் நடேசனிடமிருந்து ரூ.2.06 கோடி மதிப்புள்ள ரொக்கப் பணம், நகைகளையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்த போலீஸார் நடேசன், அவர் மனைவி மல்லிகா மீது வழக்கு தொடர்ந்தனர். தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி சண்முகப்பிரியா, இருவர்மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இதன் தீர்ப்பு இன்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடேசன், அவர் மனைவி மல்லிகா ஆகியோர்மீதான குற்றம் நிரூபணமானதால் அவர்கள் இருவருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
நடேசனின் பணி ஓய்வுகாலம் ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையில், அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அவருக்கும், அவர் மனைவிக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.